வருங்கால உலகு பற்றிய இளையோரின் கனவுகளுக்கு ஆதரவு

அக்டோபர் 01 இவ்வெள்ளி முதல் 05, வருகிற செவ்வாய் வரை, உரோம் மாநகரில் FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம் நடத்தும் உணவு குறித்த உலகளாவிய கருத்தரங்கிற்குச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அளவில் உணவு பாதுகாப்பு, உணவு விநியோகம் போன்றவை உள்ளிட்ட உணவு அமைப்புமுறைகளில் மாற்றம் கொணர்வதற்கு, நீதிக்காகப் பசிதாகமுள்ள இளைய தலைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடைபெறுவது குறித்து தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகெங்கும் இன்றைய இளையோர், இக்காலத்திய உணவு நெருக்கடிகளின் அமைப்புமுறை காரணிகளைக் களைவதற்கு, தங்களின் சக்தி மற்றும், படைப்பாற்றலைப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்றும், இப்பூமிக்கோளம் தங்களுடையது என்ற அவர்களது உணர்வு, மனிதக் குடும்பத்தைப் புதிய வழிகளில் பாதிக்கின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும், உடனடியாகச் செயல்படவும் தூண்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், தொலைநோக்குப் பார்வையற்ற நம் சிந்தனைகளிலேயே முடங்கிப்போய்விடாமல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தீர்வுகாண்பதற்கு இளையோர் உதவுகின்றனர் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சில வாரங்களுக்குமுன், நியூ யார்க் நகரில் நடைபெற்ற, ஐ.நா.வின் உலக உணவு அமைப்புமுறைகள் மாநாட்டில் பங்குபெற்ற தலைவர்கள், உலகில் பசியை அகற்றுவதற்கு கொடுத்த வாக்குறுதிகள், நம்பிக்கை தருவதாக உள்ளன என்றுரைத்துள்ள திருத்தந்தை, உரோம் நகரில் உலக உணவு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் இளையோர், தங்களின் இலக்குகளில் அச்சமின்றி உறுதியாக இருந்து முன்னோக்கிச் செல்லுமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.

சிறந்ததொரு வருங்காலத்தை அமைப்பதற்குரிய கனவுகளில் கஞ்சத்தனமின்றி, தெளிவான மற்றும், அர்த்தமுள்ள செயல்திட்டங்களில் ஈடுபடுமாறும், வழக்கமான மற்றும், போலியான வழிகளைப் பின்னுக்குத்தள்ளி, பெருந்தொற்றால் அலைக்கழிக்கப்பட்ட உலகை, புத்துயிர் பெறச்செய்யுமாறும், இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, ஒருமைப்பாடு, படைப்பாற்றல், நல்லுணர்வு ஆகியவற்றை விதைத்தால், அவை மகிழ்ச்சியளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் இளையோரின் கண்களை உற்றுநோக்கி, அவர்களின் புதிய கண்ணோட்டம், ஏக்கங்கள், மற்றும், கவலைகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளுமாறும், உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 01, இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இக்கருத்தரங்கில் வாசித்தார்.

Comments are closed.