வாசக மறையுரை (செப்டம்பர் 24)

பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I ஆகாய் 2: 1-9
II லூக்கா 9: 18-22
“மன உறுதியோடு இரு”
மன உறுதியோடு இருந்த லியோனிதாஸ்:
கி.மு.480 ஆம் ஆண்டு பாரசீக இராணுவம், கிரிஸ் நாட்டில் உள்ள ஸ்பார்டா (Sparta) என்ற நகர்மீது படையெடுத்து வந்தது. முன்னதாக, மிக வலிமையான படைபலம் கொண்ட பாரசீக நாட்டு மன்னன், ஸ்பார்டாவை ஆண்டு வந்த லியோனிதாசிடம் ஒரு தூதரை அனுப்பி, “எங்களிடம் சரணடைந்துவிட்டால், நாங்கள் உங்கள் நாட்டின்மீது தாக்குதல் நடத்த மாட்டோம்” என்ற செய்தியை அறிவித்தான். அதற்கு ஸ்பார்டாவின் மன்னன் லியோனிதாஸ், “கோழைபோலச் சரணடைவதை விடவும், மன உறுதியோடு இருந்து போரிட்டு, மடிவதே மேல்” என்றார். இதற்குப் பின்புதான் பாரசீக இராணுவம் ஸ்பார்டாவின்மீது படையெடுத்து வந்தது.
300 வீரர்களை மட்டும் கொண்டிருந்த ஸ்பார்டா படை லியோனிதாசின் தலைமையில், மிக வலிமையான படைபலம் கொண்ட பாரசீக இராணுவத்தோடு கடுமையாகப் போரிட்டது. ஒரு கட்டத்தில், பாரசீக இராணுவமே, ‘ஸ்பார்டா படை எங்கே தங்களை வென்றுவிடுமோ’ என்ற அச்சத்திற்கு உள்ளானது. அந்தளவுக்கு ஸ்பார்டா படை மிகவும் மன உறுதியோடு போரிட்டது.
போரில் ஸ்பார்டா படையில் இருந்த முந்நூறு வீரர்களும், அவர்களுக்குத் தலைமை தாங்கிய லியோனிதாசும் மடிந்தாலும், ‘தங்களது படை சிறிய படைதானே! தங்களால் மிகப்பெரிய படைபலம் கொண்ட பாரசீகப் படையை எதிர்த்துப் போரிட முடியுமா?’ என்று நினைத்து அஞ்சாமல் மன உறுதியோடு போரிட்டது நமது கவனத்திற்கு உரியது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் ஆகாய் இறைவாக்கினரிடம், “மன உறுதியோடு இரு” என்ற செய்தியை மக்களிடம் சொல்லச் சொல்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எழுபது ஆண்டுகளாகப் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த யூத நாட்டினர், எருசலேம் திருக்கோயில் அழிந்து கிடக்கும் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோனார்கள். மேலும் அக்கோயிலைக் கட்டி எழுப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கியபோது, சாலமோன் மன்னர் கட்டி எழுப்பிய கோயில் அளவுக்கு இந்தக் கோயில் வராது என்று மனச் சோர்வு அடைந்தனர். அப்பொழுதுதான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆகாயை அழைத்து, “மன உறுதியோடு இரு, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்” என்ற மக்களிடம் செய்தியைச் சொல்லச் சொல்கின்றார். ஆகாய் இறைவாக்கினரும் அவ்வாறே செய்ய, எருசலேம் திருக்கோயில் கட்டி எழுப்பும் பணி மீண்டுமாகத் தொடங்குகின்றது.
எருசலேம் திருக்கோயிலை மீண்டுமாகக் கட்டி எழுப்பும் முயற்சியில் இறங்கி மக்கள் சோர்வுற்றிருந்த போது, ஆண்டவராகிய கடவுள் அவர்களை மன உறுதியோடு இருக்கச் சொன்னார். நாமும் சோர்வுற்று இருக்கும்போது, கடவுள் நமக்குத் தரும் ஆறுதலான, நம்பிக்கை நிறைந்த செய்திதான், “மன உறுதியோடு இரு” என்பதாகும். எனவே, நாம் மன உறுதியோடு இருந்து, இறைவழியில் நடப்போம்.
சிந்தனைக்கு:
 தளந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்கலை உறுதிப்படுத்துங்கள் (எசா 35: 3).
 அஞ்சாதே, கலங்காதே (யோசு 8: 1)
 இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மாற் 13: 13)
இறைவாக்கு:
‘அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து, அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்’ (திபா 10: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், கடவுள் அளிக்கும் ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்களாய், மன உறுதியுடன் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.