இறை மக்களுக்கு நெருக்கமாக இருப்பது நம்மை வடிவமைக்கிறது
இயேசு சபையினர் ஆற்றுகின்ற மறைப்பணி, அவர்களை, கடவுளுக்கும், அவரது மக்களுக்கும் நெருக்கமாக அழைத்துச்செல்வதாக அமையவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.
இம்மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, திருத்தந்தை மேற்கொண்ட 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், சுலோவாக்கியா நாட்டின் பிராத்திஸ்லாவா திருப்பீடத் தூதரகத்தில், அந்நாட்டில் பணியாற்றும் எண்பது இயேசு சபையினரில் 53 பேரைச் சந்தித்து, ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடிய வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பில் இடம்பெற்ற கேள்விகள், பதில்கள், இன்னும், திருத்தந்தை வெளிப்படுத்திய கருத்துக்கள் போன்ற அனைத்தையும், இயேசு சபை அருள்பணி Antonio Spadaro அவர்கள், “La Civiltà Cattolica” என்ற இயேசு சபையினரின் இதழில், செப்டம்பர் 21, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.
இவ்வாண்டு ஜூலையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப்பின் திருத்தந்தையின் உடல்நலம், சுலோவாக்கியாவில் இயேசு சபையினரின் மறைப்பணி, அந்நாட்டில் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் உட்பட, பல்வேறு தலைப்புக்களில், கேள்வி-பதில் பகிர்வுகள், இச்சந்திப்பில் இடம்பெற்றன.
கடவுளுக்கும், அவரது மக்களுக்கும் நெருக்கமாக இருப்பதுபற்றி விவரித்த திருத்தந்தை, நமது இறைவேண்டல், இதயத்தைத் தொடுவதாகவும், இறைவனிடம் நெருக்கமாக கொண்டு சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்றும், குழுமவாழ்வைக் கட்டியெழுப்ப உதவும் உடன்பிறந்த உணர்வை, இயேசு சபையினர், தங்களுக்கிடையே வளரத்துக்கொள்ளவேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.
திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசுகையில், கொள்கைப்பிடிப்பு, அருள்பணித்துவ ஆதிக்க மனப்பான்மை போன்ற போக்குகள் குறித்து எச்சரித்ததோடு, இறைவேண்டல், மற்றும், தேர்ந்துதெளிதலோடுகூடிய சுதந்திரமான ஒரு சமுதாயத்தை ஆண்டவர் விரும்புகிறார் எனவும், நற்செய்தியின் சுதந்திரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது எவ்வளவு அழகானது எனவும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும், அவர்களை, வரவேற்கும் நாடுகளின் சமுதாயத்தோடு ஒன்றிணைக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
Comments are closed.