இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 126:5-ல்,
“கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
ஆண்டவர் நமது கண்ணீரைத் துடைத்து அற்புதங்களை செய்வார் என முழுமையாக விசுவசிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் செல்லும் இடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒளியாய் இருந்து அவர்களை வழிகாட்டிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
மறைசாட்சியாக மரித்தவரும், கொரிய நாட்டின் பாதுகாவலருமான இன்றைய புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன்னை திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.