செப்டம்பர் 1 : நற்செய்தி வாசகம்

நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44.
அக்காலத்தில்
இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.
பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 06)
கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்ற நாம், பிறருக்கு அந்த நன்மைகளைச் செய்வோம்.
‘வெஸ்லி’ திருச்சபையைத் தோற்றுவித்தவர் ஜான் வெஸ்லி என்பவர். தனக்கு முப்பது டாலர் சம்பளம் கிடைத்தபோது, அதில் இருபத்தெட்டு டாலர்களை எடுத்துக்கொண்டு மீதம் இரண்டு டாலர்களைக் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தினார். பின்னாளில் அவருக்கு அறுபது, நூறு, ஏன் நூற்று இருபது டாலர் சம்பளம் கிடைத்தபோதும் கூட தொடக்கத்தில் அவர் எடுத்துவந்த எடுத்துவந்த இருபத்து எட்டு டாலர்களையே எடுத்துக்கொண்டு, மீதத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே கொடுத்து வந்தார்.
அவர் செய்து வந்த இந்த உதவியை எப்படியோ கேள்விப்பட்ட, அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம், “சம்பளத்தை நீங்களே வைத்துக்கொள்ளலாம் அல்லவா, எதற்காக அவற்றை ஏழைகளுக்குக் கொடுத்து உதவுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜான் வெஸ்லி அவரிடம், “கடவுள் எனக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கச் செய்கிறார் என்றால் – இந்தளவுக்கு என்னை ஆசிர்வதித்திருக்கிறார் என்றால் – இந்த சமூகத்தில் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள், அவர்களுக்குத் தந்து உதவுவதற்காகத்தான்” என்றார்.
கடவுள் நம்மை பல்வேறு நலன்களால், நன்மைகளால் ஆசிர்வதித்திருக்கிறார் என்றால், நம்மிலும் கீழ் வாழ்ந்துகொண்டிருகிறவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்பதே ஆகும்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்தில் போதித்துவிட்டு சீமோன் பேதுருவின் மாமியாரின் வீட்டிற்குப் போகின்றார். அங்கே அவர் காய்ச்சலாய் கிடைப்பது தெரிந்து அவரைக் குணப்படுத்துகின்றார். குணம்பெற்ற அவரோ தன்னுடைய படுகையிலிருந்து எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்கின்றார்; இவ்வாறு இயேசுவிடமிருந்து குணம்பெற்ற அவர் இயேசுவுக்கு உதவிகள் செய்கின்றார்.
லூக்கா நற்செய்தியில் இடம்பெறக் கூடிய இந்த மூன்று முக்கியமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. அவை யாவை என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
நன்மை செய்வதில் மனம்தளராத இயேசு கிறிஸ்து: ஆண்டவர் இயேசு சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துவதற்கு முன்னதாக தொழுகைக்கூடத்தில் போதித்திருப்பார். தொழுகைக்கூடத்தில் போதித்த ஆண்டவர் நிச்சயம் களைப்படைத்திருப்பார். ஏனென்றால் தொழுகைக்கூடத்தில் போதிப்பதற்கும், விளக்கம் அளிப்பதற்கும் நீண்ட நேரம் ஆகியிருக்கும். இப்படி களைப்படைந்திருந்த இயேசு ஓய்வெடுக்க விரும்பாமல், காய்ச்சலால் படுத்துக்கிடந்த சீமோனின் மாமியாரைக் குணபடுத்துவது என்பது அவர் மக்கள்மீது கொண்ட அன்பைத்தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது, அது மட்டுமல்லாமல் அவர் நன்மை செய்வதில் மனம் தளராதவர் என்கிற உண்மையையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
தூய பவுல் தெசலோனிகேயருக்கு எழுதிய மடலில் கூறுவார், “சகோதர, சகோதரிகளே, நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளரவேண்டாம்” என்று. கிறிஸ்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று நன்மை செய்வதில் மனந்தளராது இருக்கவேண்டும்.
விளம்பரங்களை எதிர்பாராத இயேசு: இன்றைக்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சிறு உதவியோ, நல்ல காரியத்தைச் செய்தாலோ அதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கவேண்டும், அதன்வழியாக தங்களுக்கு விளம்பரம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு மத்தியில் இயேசு ஒரு வித்தியாசமான மனிதர். ஏனென்றால் இயேசு சீமோனின் மாமியாரைக் குணப்படுதியபோது சீடர்களைத் தவிர மக்கள் யாருமே கிடையாது. யாருக்கும் தான் செய்த நல்ல செயல் தெரியவேண்டும் என்றுகூடச் செய்யவில்லை. நோய்வாய்ப்பட்டுக் கிடக்கின்ற ஒருவர் குணமாகவேண்டும் என்பதுதான் இயேசுவின் நோக்கமாக இருந்தது. அதனால்தான் சீமோனின் மாமியாரைக் குணப்படுத்தினார்.
இயேசு வழியில் நடக்கின்ற நாம், விளம்பரத்திற்காக எந்தவொரு உதவியையும் செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம்.
கடவுளிடமிருந்து உதவியைப் பெற்ற நாம், மற்றவருக்கும் அதை வழங்குவோம்: நற்செய்தியில் இயேசு சீமோனின் மாமியாரைக் குணப்படுத்திய உடனே அவர் சும்மா இருக்கவில்லை, மாறாக தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, இயேசுவுக்குப் பணிசெய்கின்றார். இது ஓர் உயர்ந்த நண்பு. நிறையப் பேர் கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வதோடு சரி, அதை அப்படியோ மறந்து போய்விடுவார்கள். இயேசுவால் குணம்பெற்ற பத்துத் தொழுநோயாளர்களில் ஏனைய ஒன்பது பேர் நன்றி செலுத்த வரவே இல்லை. இப்படித்தான் பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்து வாழும் நன்றிகெட்ட உலகமாக இருக்கின்றது இந்த உலகம். ஆனால் சீமோனின் மாமியார் இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு இருக்கின்றார்.
ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தொடர்ந்து நன்மை செய்துகொண்டே இருப்போம். சீமோனின் மாமியாரைப் போன்று பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Comments are closed.