ஒன்றிணைந்து வாழும்முறையைக் கற்றுக்கொள்ள திருத்தந்தை அழைப்பு

சிறப்பிக்கப்படும் புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோர் 107வது உலக நாளை அர்த்தமுள்ள முறையில் கடைப்பிடிப்பதற்கு உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும், காணொளிப் பதிவுகளை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வெளியிட்டு வருகிறது.

ஆகஸ்ட் 05, இவ்வியாழனன்று இத்திருப்பீட அவை வெளியிட்டுள்ள மூன்றாவது காணொளிப் பதிவில், “நாம்” என்ற உணர்வில் உலகளாவிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சி, முதலில் திருஅவைக்குள் இடம்பெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இன்னும் விரிவடைந்த ‘நாம்’-ஐ நோக்கி” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படும் 107வது  உலக நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிப் பதிவுகளில், தன் கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்.

“நாம்” என்ற உணர்வில், பன்மைத்தன்மை, மற்றும், கலாச்சாரங்களுக்கிடையே உறவுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் வழியாக, அமைதி மற்றும், நல்லிணக்கத்தில் வருங்கால உலகை கட்டியெழுப்புவதற்கு நாம் எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

நாம் என்ற உணர்வின் வளமையைக் கற்றுக்கொள்ள பல எடுத்துக்காட்டுக்களை எடுத்துரைக்கலாம், குறிப்பாக, தென் ஆப்ரிக்கப் பள்ளிகளில், பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த சிறாருக்கு கற்றுக்கொடுக்கப்படும் முறைகள், நாம் என்ற உணர்வில் வாழ்வதற்குத் தூண்டுதலாக உள்ளன என்றும், தன் காணொளிப் பதிவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

Comments are closed.