பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு (ஜூலை 25)

I 2 அரசர்கள் 4: 42-44
II எபேசியர் 4: 1-6
III யோவான் 6: 1-15
“அன்புடன் தாங்கி, அமைதியுடன் ஒன்றிணைந்து வாழ்வோம்”
உங்களுக்குக் குஞ்சரம் அம்மாவைத் தெரியுமா? அப்படியானால் நீங்கள் 1885 ஆம் ஆண்டிலிருந்து 1890 ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
உணவு கிடைக்காமல் புற்றில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த அரிசியைத் தின்றும், மூன்றுவேளையும் முருங்கைக் கீரையை அவித்துத் தின்ற காலமது. கண்முன்னே ஒட்டிய வயிறுடன் கணவன், மனைவி, பிள்ளைகள்… இதில் முதலில் யார் முதலில் இறப்பாரோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மிகக் கொடுமையான அந்தக் காலக்கட்டத்தில், மதுரையில் உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் வாழ்ந்தவர்தான் குஞ்சரம் அம்மா. தாதி குலத்தைச் சார்ந்த இவரின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. மேலும் அக்காலத்தில் இவர் செல்வச் சீமாட்டியாகவே இருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கசிந்து, அவர்களுக்குக் கஞ்சி காயச்சி ஊற்ற முடிவு செய்தார் இவர். முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றி வந்த இவர், மக்கள் நீண்டதொரு வரிசையில் வருவதைப் பார்த்துவிட்டு மூன்று பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றினார். இதற்காக இவர் தன்னிடமிருந்த இரண்டு பெரிய வீடுகள், நகைகள், ஆபரணங்கள் என எல்லாவற்றையும் விற்றார். ஒருசில பணக்காரர்கள் இவர் செய்துவந்த இரக்கச் செயலைப் பார்த்துவிட்டு, “இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை?” என்றெல்லாம் பேசினர். இவர் அவர்கள் பேசியதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சத்தின் கோர தாண்டவத்தைப் பார்த்துவிட்டு, அப்பொழுது மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர், ஆறாவது வாரத்திலிருந்து மூன்று இடங்களில் கஞ்சி காய்ச்சி ஊற்ற ஏற்பாடு செய்தார். அதற்கெல்லாம் குஞ்சரம் அம்மாவே மூல காரணமாக இருந்தார். ஏறக்குறைய பதின்மூன்று மாதங்கள் குஞ்சரம் அம்மாவின் வீட்டில் இருந்த அடுப்பு அணையாமல் எரிந்தது. அதன்பிறகு அவரிடம் மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க எதுவும் இல்லாமல் போனது.
ஒருவழியாகத் தாது வருடம் முடிந்தது. அதற்குப் பின் வந்த இரண்டாம் மாதத்தில் குஞ்சரம் அம்மா இருந்தார். அப்பொழுது வடக்கு ஆவணி வீதியில் கூடிய கூட்டம், மதுரையில் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கூடும் கூட்டத்திற்கு இணையானதாக இருந்தது என்று குறிப்புகள் சொல்கின்றன. ஆம், குஞ்சரம் அம்மா மக்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி, அவர்களுக்கு உணவு தந்தார். அதனால்தான் அவருடைய இறப்பின்பொழுது, அவ்வளவு கூட்டம் கூட்டியது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பசியோடு இருப்பவரை அன்புடன் தாங்கிக்கொள்ள அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம் .
உணவின்றித் தவித்த – தவிக்கும் மக்கள்
ஊர்ப்புறங்களில் இப்படியொரு பழமொழி சொல்வதுண்டு: “நரி வலம் வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன. நம்மீது விழுந்து பிடுங்காது இருந்தால் போதும்.” யாரும் எப்படியும் இருக்கட்டும், நான் நன்றாக இருந்தால் போதும் என்பதுதான் இந்தப் பழமொழி உணர்த்தும் உண்மை. இன்றைக்குப் பலர், ‘நம்முடைய வீட்டில் அடுப்பு எரிந்தால் போதும்; நாம் நன்றாக இருந்தால் போதும். எவரும் எக்கேடு கெட்டும் போகட்டும்’ என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. இன்னும் ஒருசிலர் தாங்கள் நன்றாக இருப்பதால், எல்லாரும் நன்றாக இருப்பார்கள் என்ற குறுகிய மனப்பான்மையோடு வாழ்வதையும் காண முடிகின்றது. இன்றைக்கும் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் பட்டினி கிடக்கும் மக்கள் உலகில் ஏராளம் உண்டு. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை இயேசுவின் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இருந்திருக்கும்.
இந்தப் பின்னணியில்தான் இயேசு தன் சீடர்களிடம், “இன்று தேவையான உணவை எங்களுக்குத் தரும்” (மத் 6: 11) என்று இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார். தமிழ் இலக்கியத்தில்கூட, “உண்டி (உணவு) கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்” என்று சொல்லப்படுகின்றது. உயிரைக்கொடுப்பவர் கடவுள். அப்படியெனில், ஒருவர் பசியோடு இருக்கின்ற ஒருவருக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவர் கடவுளாகின்றார் என்பதே இதில் பொதிந்துள்ள உண்மை. ஆதலால், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவிடவேண்டும். அப்படி நாம் உணவிடுவதன் மூலம் கடவுளின் தூதர்களாக மாறுகின்றோம் என்பது நம் மனத்தில் பதிய வைக்கவேண்டிய செய்தி.
சீடர்களின் தட்டிக்கழிப்பும், இயேசுவின் பரிவும்
பசியோடு இருப்பவருக்கு உணவிடுவதன் மூலம் ஒருவர் கடவுளின் தூதராக – கடவுளாக – மாறுகின்றார் என்று சிந்தித்தோம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா இருபது வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளிப்பதையும், நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதையும் குறித்து வாசிக்கின்றோம்.
தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு உணவளிப்பதற்கு முன்பாக, இயேசுவின் சீடர்கள் அப்பிரச்சனையை எப்படி அணுகினார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். முதலாவதாக, மாற்கு நற்செய்தியின்படி இயேசுவின் சீடர்கள் அவரிடம், “…உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பி விடும்” (மாற் 6: 35-36) என்கிறார்கள். இது சீடர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது. அடுத்ததாக, பிலிப்பு இயேசுவிடம், “இருநூறு தெனாரியத்த்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” (யோவா 6:7) என்கிறார். இது பணமிருந்தால் எதையும் செய்துவிட என்ன எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இதற்கு அடுத்ததாக அந்திரேயா, “…ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்” என்கிறார். அந்திரேயாவின் வார்த்தைகள் எலியாவின் பணியாளர் பேசும், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்ற வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும் அந்திரேயாவின் வார்த்தைகளில் இயலாமையே வெளிப்படுகின்றது. இப்படித் தன் சீடர்கள் தங்கள் இயலாமையைச் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது, இயேசு சிறுவன் கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்கின்றார். இதனால் எல்லாரும் வயிறார உண்டது மட்டுமல்லாது, எஞ்சியதைப் பன்னிரண்டு கூடைகளில் நிரம்புகின்றார்கள்.
இயேசு செய்த இந்த வல்ல செயல் நான்கு நற்செய்தி நூல்களில் இடம்பெறுவதால் இது உண்மை என நிரூபணமாகின்றது. மேலும் நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதை ஆண்டவரிடம் கொடுத்தால், அது நிறைவாக மாறும் என்ற உண்மையானது நமக்கு உணர்த்தப்படுகின்றது
வறியவர்களை அன்போடு தாங்குவோம்
நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதைக் கடவுளின் கைகளில் கொடுத்தால் நிறைவாக மாறும்; பட்டினி என்பது இல்லாமல் போகும் என்பதை நற்செய்தி வாசகமும்; ஏன், முதல் வாசகமும் நமக்கு உணர்த்தியதைக் குறித்துச் சிந்தித்தோம். இப்படி நம்மிடம் இருப்பதைக் கடவுளின் கையில், அல்லது அவரது மக்களின் கையில் கொடுப்பதற்கு, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, வறியவர்களை அன்புடன் தாங்குவது தேவையான ஒன்றாக இருக்கின்றது. வறியவரை அன்பு தாங்குவதற்கு, எனக்கு அடுத்திருப்பவர் கிறிஸ்துவின் உடலில் ஓர் உறுப்பாக இருக்கின்றார் (1 கொரி 12: 12) என்ற எண்ணமானது நமக்கு இருக்கவேண்டும்.
நம்முடைய உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மாறாக, அதற்கு ஏதாவது செய்வோம். அதைப் போன்று கிறிஸ்து என்ற உடலின் உறுப்பாய் இருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும்; அவரை அன்போடு தாங்க வேண்டும். எனவே, நாம் இயேசு எப்படிப் பசியோடு இருந்தவர்மீது பரிவோடு கொண்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களை அன்புடன் தாங்கினாரோ, அப்படி நாமும் வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அன்புடன் தாங்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘உன்னால் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுக்கலாமே’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், பசியோடு இருப்பவருக்கு உணவளித்து, பசி பட்டினியில்லா உலகை உருவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.