நெல்சன் மண்டேலா உலக நாள்

நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாளை, ஒவ்வோர் ஆண்டும், சிறப்பிக்கும் வேளையில், ஐக்கிய நாடுகள் நிறுவனமும், மனித குடும்பமும் கொண்டிருக்கும் மிக உயர்ந்த மனித விழுமியங்களை வாழ்ந்த ஒரு மனிதரை நாம் சிறப்பிக்கிறோம் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

நிறவெறியில் மூழ்கியிருந்த தென் ஆப்ரிக்காவில், கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி, அந்நாட்டின் முதல் கறுப்பின அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள், ஜூலை 18, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, கூட்டேரஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களாட்சியின் மாண்பைக் குலைக்கும்வண்ணம், வெறுப்பும், பொய்யும் கலந்த செய்திகள் மிக வேகமாகப் பரவிவரும் இன்றையக் காலக்கட்டத்தில், உண்மைக்கு அயராது குரல்கொடுத்துவந்த நெல்சன் மண்டேலா அவர்களைக் கொண்டாடுவது பொருளுள்ள முயற்சி என்று கூட்டேரஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.

உலகில் இதுவரை நிலவிவந்த ஏற்றத்தாழ்வுகளை, கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் அதிகரித்துள்ளது என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், சமுதாயத்தில் நிலவும் வன்முறைகளுக்கு வறியோரே காரணம் என்று குறைகூறுவது, ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டு, தன் 95வது வயதில் நேசன் மண்டேலா அவர்கள் உயிர் நீத்ததையடுத்து, அவரது பிறந்தநாளான ஜூலை 18ம் தேதியை, நெல்சன் மண்டேலா உலக நாளென சிறப்பிக்க, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, 2015ம் ஆண்டு முடிவெடுத்தது.

Comments are closed.