ஜூலை 5 : நற்செய்தி வாசகம்
என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
மறையுரைச் சிந்தனை (ஜூலை5)
ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போம்
ஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் மார்த்தா என்றொரு ஏழைக் கைம்பெண் இருந்தாள். அவளுக்கு நான்கு பெண் குழந்தைகள். கணவனை இழந்ததாலும் சரியான வேலையில்லாததாலும் அவள் தன்னுடைய நான்கு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டாள். சில நேரங்களில் ஒருவேளை உணவு கிடைப்பதுகூட கஷ்டமாக இருந்தது.
இப்படித்தான் ஒரு நாள் இரவு மார்த்தா, கையில் பணமில்லாத சூழ்நிலையில் அடுத்தநாள் காலையில் குழந்தைகளுக்கு உணவு எப்படிக் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அவள் ஏழையாக இருந்தாலும் கடவுள்மீது அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தாள். அதனால் கடவுள் தன்னுடைய குழந்தைகளுக்கு எப்படியும் உணவு கிடைக்கச் செய்வார் என்று நம்பினாள். அந்த நினைவோடு அவள் தூங்கச் சென்றாள்.
மறுநாள் காலையில் அவள் கண்விழித்து வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்த போதும் உணவு கிடைக்கின்ற ஒருசிறு வழியும் இல்லாத நிலை இருந்தது. அவளுடைய குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்குத் தயாராகி உணவுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மார்த்தா தன்னுடைய குழந்தைகளிடம், “பிள்ளைகளே! இன்றைக்கு என்னால் உங்களுக்கு உணவு தரமுடியாத நிலை. அதனால் பொறுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போங்கள்; போகிற வழியிலே அப்படியே நம்முடைய கோவிலுக்குச் சென்று, இறைவனிடத்தில் உணவு கிடைக்கச் ஜெபியுங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள். குழந்தைகளும் அதன்படியே போகிற வழியில் இருந்த கோவிலுக்குச் சென்று, ஜெபித்துவிட்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.
மாலை வேளையில் குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு, வீடு திரும்பியபோது உணவு தயாராக இருந்தது. குழந்தைகளுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அப்போது மூத்த குழந்தை தாயிடத்தில் கேட்டாள், “அம்மா நம்முடைய வீட்டில் உணவெல்லாம் தயாராக இருக்கின்றதே, அது எப்படி?”. அதற்குத் தாயானவள் அவளிடத்தில், “பிள்ளைகளே! நீங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போகின்றபோது, கோவிலுக்குச் சென்று ஜெபித்தீர்கள் அல்லவா, உங்களுடைய ஜெபித்தை உங்களுடைய சிநேகிதியின் தாயனவர் எப்படியோ கேட்டிருக்கிறார். அவர்தான் சிறுது நேரத்திக்கு முன்பாக நம்முடைய வீட்டிற்கு வந்து, தேவையான உணவுப் பொருட்களும், கையில் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு சென்றார்” என்றார். தன்னுடைய தாயானவள் இவ்வாறு பேசுவதைக் கேட்ட கடைசிக் குழந்தை, “ஆண்டவரிடம் நாம் நம்பிக்கை வைத்து ஜெபித்ததற்கு, அவர் தக்க பலனைத் தந்திருக்கிறார்” என்றார். எல்லோரும் அதை அமோதித்தவர்களாய் கடவுளைப் புகழ்ந்துகொண்டே உணவருந்தச் சென்றார்.
கடவுளிடத்தில் நாம் நம்பிக்கையோடு ஜெபிக்கின்றபோது அதற்கான பலனை நிச்சயமாகத் தருவார் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளையும் பனிரெண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணியையும் குணப்படுத்துகின்றார். இந்த இரண்டு குணப்படுத்தல்களுக்கும் அடிப்படையாக அமைந்தது அவர்களுடைய நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது.
தொழுகைக்கூடத் தலைவரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் சமூகத்தில் மிகவும் முக்கியப் பொறுப்பினை வகித்தவர்; தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற எல்லா வழிபாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பாய் இருந்தார். அப்படிப்பட்டவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி இயேசுவிடம் வந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள்மீது கையை வையும். உடனே உயிர் பெறுவாள்” என்கிறார். இயேசுவால் இறந்த தன்னுடைய மகளைக் குணப்படுத்த முடியும் என்று அவள் நம்பினாள், இறுதியில் தன்னுடைய மகளை உயிரோடு பெற்றுக்கொள்கிறார்.
ஆண்டவர் இயேசு யாயிரின் வீட்டிற்குச் செல்கின்றபோது இன்னொரு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது அதுதான் பனிரெண்டு ஆணுகளாக இரத்தப் போக்கினால் பாதிப்பட்ட பெண்மணி நலம்பெறுவது. இரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி நிச்சயமாக நிறைய மருத்துவர்களைச் சந்தித்திருக்கவேண்டும், அவர்களிடமிருந்து வைத்தியம் பார்த்திருக்கவேண்டும். அவர்களால் குணப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் அவர் இயேசுவிடம் வருகின்றார். இயேசுவிடம் வருகின்ற அவர், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” என்று நம்பித் தொடுக்கின்றார். அதனாலேயே நலம் பெறுகின்றார். ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருக்கின்றபோது நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதைத்தான் இரண்டு நிகழ்வுகளிலிருந்தும் நாம் அறிந்துகொள்கின்றோம்.
திருப்பாடல் 125:1 ல் வாசிக்கின்றோம், “ஆண்டவரில் நம்பிக்கை வைத்துள்ளோர், சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்” என்று. ஆம், நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து வாழும்போது, நம்மை ஒன்றும் அசைக்க முடியாது என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. எனவே, நாம் இறைவனிடத்தில் நம்பிக்கை கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.