வாசக மறையுரை ஜூன் 05

பொதுக்காலம் பதினான்காம் வாரம்
திங்கட்கிழமை
I தொடக்கநூல் 28: 10-22a
II மத்தேயு 9: 18-26
“உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது”
நம்பிக்கையோடு நற்செய்திப் பணி:
பர்மா மக்களுக்கு முதன்முதலில் கடவுளின் வார்த்தையைக் கொண்டு சென்றவர் மறைப்பணியாளர் ஜூட்சன் (Dr. Judson). இவர் அங்கு மறைப்பணியோடு மருத்துவப் பணியையும் செய்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
இவர் பர்மாவிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்துக்கொண்டிருக்கையில், ஒற்றர் எனக் கருதப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது இவரோடு இருந்த கைதி ஒருவர், இவரைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டு, “இந்நாட்டு மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க வந்து, இப்படிக் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டு இருக்கின்றீர்களே! இனிமேலும் உங்களால் இங்கு நற்செய்தி அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?” என்று சற்றுக் கிண்டலாகக் கேட்டார்.
இதற்கு ஜூட்சன் அவரிடம், “கடவுளின் வாக்குறுதிகள் எந்தளவுக்கு நம்பிக்கைக்குரியவையோ, அந்தளவுக்கு நான் இந்நாட்டு மக்களுக்கு நற்செய்தி அறிவித்துப் பலரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும் என்ற என் இலட்சியமும் நம்பிக்கைக்குரியது. நிச்சயம் நான் இந்தச் சிறையிலிருந்து விடுதலையாகி, மக்களுக்குக் நற்செய்தி அறிவிப்பேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கின்றது” என்று நம்பிக்கையோடு சொன்னார். இது நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, ஜூட்சன் சிறையிலிருந்து விடுதலையாகி, மக்கள் நடுவில் சென்று, கடவுளின் வார்த்தையை அறிவித்து, பலரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச்செய்தார்.
ஆம், பர்மா மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்த மறைப்பணியாளரான ஜூட்சன் நம்பிக்கையோடு அறிவித்தார். அதனால்தான் அவரால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள வைக்க முடிந்தது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவரைப் பற்றி வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்; ஆயினும் நீர் உம் கையை வைத்தால், அவள் உயிர் பெறுவாள் என்று நம்பிக்கையோடு வேண்டிய தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் வேண்டுகோளுக்கு இணங்க, இயேசு அவருடைய வீட்டிற்குச் செல்கிறார். அவருடைய மகளை உயிர்பெறச் செய்கிறார். இதற்கு நடுவில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட, தீட்டானவர் என்று யூத சமூகத்தால் கருதப்பட்ட (லேவி 15: 25-27), பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி இயேசுவின் ஆடையின் ஓரத்தை நம்பிக்கையோடு தொட்டு, நலம்பெறுகின்றார்.
சிறுமி உயிர்பெறுதலும், இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி நலம் பெறுதலும் நம்பிக்கையினாலேயே நடக்கின்றன. நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழவேண்டும், ஏனெனில், இன்றைய முதல்வாசகத்தில் ஆண்டவர் யாக்கோபிடம் சொல்வது போல், ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் நம்மோடு இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, நலம் பல பெறுவோம்.
சிந்தனைக்கு;
 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர் (எபி 10: 23)
 இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கை அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கின்றேன் (கலா 2: 20).
 அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் (மாற் 5: 36).
இறைவாக்கு:
‘நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்’ (எசா 28: 16) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் எந்நாளும் நம்மோடு இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.