இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்று சொன்னார்.” என வாசிக்கின்றோம்.

ஆண்டவரால் ஆகாதது எதுவும் இல்லை என விசுவசிக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில், “அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.” என கூறப்பட்டுள்ளது.

நம் பிணிகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொண்ட இறைவனின் அளப்பரிய அன்பிற்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.” என நூற்றுவத் தலைவன் இயேசுவிடம் கூறுகிறார்.

ஆண்டவர் மேல் கொண்ட ஆழமான விசுவாசத்தை நாம் நூற்றுவத் தலைவனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

“நாம் அனைவரும் தூய வாழ்விற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.” என்று கூறிய இன்றைய புனிதர் ஜோஸ்மரியா வை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,

நோய்த்தொற்றின் தீவிரத்தால் மரணித்த அனைவருக்காகவும் பிராத்திப்போம். அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.