ஜூன் 27 : நற்செய்தி வாசகம்

சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43
அக்காலத்தில்
இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள்.
ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
நம்பிக்கையை மட்டும் விடாதீர்”
பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு
I சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24
II 2 கொரிந்தியர் 8: 9, 13-15
III மாற்கு 5: 21-43
“நம்பிக்கையை மட்டும் விடாதீர்”
நிகழ்வு
எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் கதைகளை எழுதுவதில் வல்லவரான ஓ. ஹென்றியின் பிரபலமான சிறுகதைகளில் ஒன்று “கடைசி இலை” (Last Leaf). 1907 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தச் சிறுகதை மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் சிறுகதையில் வரும் கதாநாயகன் உடல் நலம்குன்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பான். மருத்துவமனையில் இவனுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படும்; ஆனாலும் இவன் ‘இன்னும் ஒருசில நாள்களில் நான் இறந்துவிடுவேன்!’ என்ற அவ ம்பிக்கையோடு இருப்பான். இதனால் இவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனில்லாமல் போகும்.
இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலிப்பெண் ஒருவர் இவனிடம், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச் சொல்லி, “நீ விரைவில் நலமடைவாய்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் இவன் படுத்திருந்த படுக்கைக்கு அருகிலிருந்த சன்னல் வழியாக இவன் வெளியே பார்த்தபொழுது, ஒரு செடி இருக்கக் கண்டான். நன்றாக இருந்த அந்தச்செடி ஏனோ திடீரெனப் பட்டுப்போய், ஓர் இலையைத் தவிர்த்து மற்ற எல்லா இலைகளும் அதிலிருந்து உதிர்ந்தன. இதை இவன் தன்னிடம் அடிக்கடி பேசவரும் செவிலிப்பெண்ணிடம் சுட்டிக்காட்டி, “இந்தச் செடியைப் போன்றவன்தான் நான். இச்செடியில் ஓர் இலையைத் தவிர்த்து, மற்ற எல்லா இலைகளும் உதிர்ந்துவிட்டன. நாளைக்கு, எஞ்சியிருக்கும் இந்த இலையும் உதிர்ந்துவிடும். இந்த இலையைப் போன்று நானும் உதிர்ந்துவிடுவேன்” என்றான்.
இதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த செவிலிப்பெண், “அப்படியெல்லாம் இந்த இலை உதிராது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் இவன் சன்னல்வழியாகச் செடியைப் பார்த்தபொழுது, அந்த செடியில் இருந்த எஞ்சிய இலை உதிராமல் அடிப்படியே இருந்தது. இவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘இந்த இலையைப் போன்று நானும் உயிரோடு இருப்பேன்’ என்று இவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இதற்குப் பிறகு இவன் தனக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையை நம்பிக்கையோடு பெற்று, விரையில் நலமடைந்தான். மருத்துவமனையில் இவனுக்குச் சிகிச்சை முடிந்ததும், இவனிடம் அடிக்கடி பேசிவந்த செவிலிப்பெண் இவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோனார். போகும்வழியில் செடியில் உதிராமலிருந்த இலைக்கு அருகில் இவனைக் கொண்டுசென்று, அதை உற்றுப்பார்க்கச் சொன்னார். இவன் அதை உற்றுப்பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அது உண்மையான இலை அல்ல, துணியால் செய்யப்பட்ட இல்லை என்று. அப்பொழுது செவிலிப்பெண் இவனிடம், “உனக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நான் ஓர் ஓவியரைக் கொண்டு துணியால் இந்த இலையை செய்து பொருத்தினேன்” என்றார்.
ஆம், நமக்கு நம்பிக்கை இருந்தால், உயிரோடு பல ஆண்டுகள் வாழலாம். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவர்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இருவருக்கு நலமளிக்கின்றார் அல்லது ஒருவரை நலமாக்கி இன்னொருவரை உயிர்த்தெழச் செய்கின்றார். ஒருவர் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி; இன்னொருவர் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகள்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தொடுதலாலேயே வல்ல செயல் நடக்கின்றது. இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, “நான் ஆண்டவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று தொட்டு நலம்பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரான யாயிர் இயேசுவிடம், “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்கிறார். இயேசுவும் அவருடைய மகளை கைகளைப் பிடித்துத் தொட்டு உயிர்த்தெழச் செய்கின்றார். இரண்டாவதாக, இரண்டு நிகழ்வுகளிலும் பன்னிரண்டு என்ற எண்ணானது இடம்பெறுகின்றது. இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி பன்னிரண்டு ஆண்டுகளாய்த் துன்புறுகின்றார். யாயிரின் மகளுக்குப் பன்னிரண்டு வயது. மூன்றாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பெறுகின்றவர்களும் நம்பிக்கையாலேயே நலம் பெறுகின்றார்கள். நான் இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும், நலம் பெறுவேன் என்று இரத்தப்போக்கினால் பதிக்கப்பட்ட பெண்மணி நம்பிக்கையோடு தொட்டு நலம்பெறுகின்றார். யாயிரோ இயேசுவின்மீது இறுதிவரை நம்பிக்கையோடு இருந்து, இறந்த தன் மகளை உயிரோடு பெறுகின்றார்.
இவ்வாறு நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்பொழுது நலமான வாழ்வினைப் பெறுவோம் என்பதை நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
அழியாமைக்கென்றே கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பதை நம்புவோம்
ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வுலகில் போர்களும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்படும்பொழுது, கடவுள் மனிதர்களை அழிப்பதற்காகவே இவற்றையெல்லாம் அனுப்புகின்றார் என்று சொல்வார்கள். நாமும் இக்கூற்றைப் பலமுறை சொல்லியிருக்கலாம். உண்மை அதுவல்ல,
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் மேலே உள்ள கூற்றிற்குப் பதில் தருவதாக இருக்கின்றது. ஆம், “இருக்கவேண்டும் என்பதற்காகவே கடவுள் அனைத்தையும் படைத்தார்”. மேலும் “கடவுள் மனிதர்களை அழியாமைக்கேன்றே படைத்தார்”. அப்படியானால், இவ்வுலகில் சாவும் அழிவும் நேரிடுகின்றன என்றால், அவை மனிதன் செய்த பாவத்தின் விளைவே ஆகும். எனவே, கடவுளின் ஒரே மகனாம் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அழியாமல் நிலைவாழ்வு பெறுவோம் (யோவா 3: 16).
நம்பிக்கை என்பது சொல்லல்ல, செயல்
ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டால் நலமான வாழ்வு கிடைக்கும்; அழியாமைக்கென்றே கடவுள் மனிதரைப் படைத்திருக்கின்றார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்பன குறித்து மேலே நாம் சிந்திப்போம். இப்பொழுது நம்பிக்கையின் அடுத்த பரிமாணத்தைக் குறித்துப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதைப் பற்றி சிந்திப்போம்.
இன்றைய இரண்டாம்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர் மக்களிடம் நம்பிக்கை, நாவன்மை ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டிருக்கும் நீங்கள், “அறப்பணியிலும் முழுமையாய் ஈடுபட வேண்டும்” என்கிறார். புனித பவுலின் இவ்வார்த்தைகளை புனித யாக்கோபின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலேயே அது உயிரற்றது’ (யாக் 2: 17) என்று சொல்லலாம். கொரிந்து நகர் மக்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவையில் உள்ள அல்லது வறியநிலையில் உள்ள மக்களுக்கு அறப்பணிகளைச் செய்து, அவர்களது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கச் சொல்கின்றார் புனித பவுல். இதற்கு அவர், செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான இயேசுவை (பிலி 2: 5-8) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். ஆகவே, நம்மை அழியாமைக்கென்று படைத்திருக்கும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனை
‘நம்பிக்கையானது புதிய மற்றும் கற்பனை செய்யமுடியாத சாத்தியங்களைத் திறக்கிறது’ என்பார் இராபர்ட் சி. சாலமோன் என்ற அறிஞர். எனவே, நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.