ஜூன் 16 : நற்செய்தி வாசகம்

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
“முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”
பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் புதன்கிழமை
I 2 கொரிந்தியர் 9: 6-11
II மத்தேயு 6: 1-6, 16-18
“முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”
குழந்தை சாமியின் நல்லமனம்:
ஊருக்கு வெளியே, சாலையை ஒட்டியேதான் இருந்தது குழந்தைசாமியின் வீடு. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கடின உழைப்பாளியான இவர், ஒருநாள் மாலை வேளையில் தன் வீட்டு மொட்டைமாடியில் இருந்துகொண்டு, சாலையில் போன ஊர்திகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ‘எத்தனை நாள்கள் அலுவலகத்திற்குப் பேருந்தில் இடுபாடுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு பயணம் செய்திருப்போம்! நாளைய நாளில் நாம் பட்ட சிரமத்திற்கெல்லாம் விடிவு பிறக்கப்போகிறது’ என்று நினைத்துக்கொண்டு, மறுநாள் தான் வாங்கப்போகும் இரண்டு இலட்சம் மதிப்பிலான ஊதா நிற இராயல் என்பிஃல்ட்டை நினைத்து எண்ண ஓட்டங்களைப் படர விட்டார் குழந்தைசாமி.
இவ்வாறு நினைத்துக்கொண்டு, சிறிது நேரம் மொட்டை மாட்டில் இருந்த குழந்தைசாமி, அங்கிருந்து கீழே இறங்கி வந்து, தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தார். அப்பொழுது, அன்றைக்குத்தான் வந்திருந்த ஒரு கிறிஸ்தவ மாத இதழானது அவருடைய கண்ணில் பட்டது. அதை எடுத்து அவர் புரட்டிக்கொண்டிருக்கும்பொழுது, மறைப்பணியாளர்கள் நான்கு பேர் எங்கோ நடந்து செல்வது மாதிரியான ஒரு புகைப்படம் இருந்தது. அதற்குக் கீழ் ‘இவர்கள் தாங்கள் போகவேண்டிய இடத்திற்குச் சிரமமில்லாமல் சென்று, மறைப்பணியாற்ற உதவ விரும்புபவர்கள், உதவலாம்’ என்றொரு குறிப்பு இருந்தது.
இதைப் பார்த்ததும் குழந்தைசாமியின் உள்ளத்தில், ‘இவர்களுக்கு நாம் ஏன் உதவக் கூடாது?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. மறுநாள் இவர் தனக்காக இராயல் என்பிஃல்ட் வாங்க வைத்திருந்த பணத்தில் நான்கு Tvs 50 களை அவற்றைக் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைத்தார்.
ஆம், தனக்கென வண்டி வாங்க வைத்திருந்த பணத்தையெல்லாம் மறைப்பணியாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதற்காக முகமலர்ச்சியோடு கொடுத்த குழந்தைசாமியின் செயல் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. இன்றைய இறைவார்த்தை கொடுக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், கடவுளுடைய பணிக்காகவும், தேவையில் உள்ள அவருடைய மக்களுக்காகவும் கொடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது. இவ்வாறு பவுல் பேசும்பொழுது, மன வருத்தத்தோடோ, கட்டாயத்தோடோ அல்ல, முக மலர்ச்சியோடு கொடுக்கவேண்டும் என்கிறார். மேலும் முக மலர்ச்சியோடு கொடுக்கும்பொழுது, எல்லா வகையிலும் செல்வர்களாகி, வல்லமை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள் என்கிறார்.
நற்செய்தியில் இயேசு அறச்செயல்களைச் செய்யும்பொழுது, மக்கள் பார்க்க வேண்டும், பாராட்டவேண்டும் என்று அல்ல, வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாத அளவில் செய்யவேண்டும் என்கிறார் ஆகையால், நாம் கொடுக்கின்றபொழுது, முக மலர்ச்சியோடும், உள்ளார்ந்த அன்போடு கொடுப்போம்.
சிந்தனைக்கு:
 அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள் (2 கொரி 8: 3).
 தம் நிலைகேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும் (2 கொரி 8: 12).
 நாம் இறைப்பணிக்காக என்ன கொடுக்கின்றோம், அதை எப்படிக் கொடுக்கின்றோம். சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு’ (சீஞா 35: 😎 என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் முகமலர்ச்சியோடு கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.