ஜூன் 14 : நற்செய்தி வாசகம்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42.
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-++++
உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்”
பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் திங்கட்கிழமை
I 2 கொரிந்தியர் 6: 1-10
II மத்தேயு 5: 38-42
“உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்”
கொடுப்பதற்கு யோசிக்கும் மக்கள்:
ஒரு சிற்றூரில் இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள். “இந்த உலகத்தில் இருக்கின்ற நிலத்தையெல்லாம் எல்லாருக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும்” – இது முதலாவது மனிதர். இதற்கு இரண்டாமவர், “மிகவும்

அருமையான

யோசனை. கேட்பதற்கு மிகவும்

இனிமையாக

இருக்கின்றது” என்றார். “இந்த உலகத்தில் உள்ள தங்கத்தையெல்லாம் எல்லாருக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும்” என்று தொடர்ந்தார் முதலாமவர். இதற்கும் இரண்டாமவர், ‘

அருமையான

யோசனை” என்றார். முதலாமவர் நிறுத்தாமல் மீண்டுமாக, “இந்த உலகத்தில் உள்ள ஆடுகளையெல்லாம் எல்லாருக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடவேண்டும்” என்றார். “அது மட்டும் முடியவே முடியாது” என்று கண்டிப்பாய்க் கூறினார் இரண்டாமவர்.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட முதலாமவர், “இதுவரைக்கும் நான் சொன்னதற்கெல்லாம்

அருமையான

யோசனை என்று சொல்லிவிட்டு, இப்பொழுது ‘அதெல்லாம் முடியவே முடியாது’ என்கிறீர்களே! உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்றார். “காரணம், என்னிடம் பத்து ஆடுகள் இருக்கின்றன. அதனால்தான்” என்று அமைந்த குரலில் பதிலளித்தார் இரண்டாமவர்.

ஆம், பலர் இன்று இந்த நிகழ்வில் வருகின்ற இரண்டாமவரைப் போன்று, ஊருக்கென்று வரும்பொழுது பொதுநலம் பேசிவிட்டுத் தனக்கென்று வரும்பொழுது தன்னலம் பேசுவதையும், தன்னலத்தோடு இருப்பதையும் காண முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில, இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்களிடம் கேட்கிறவர்களுக்குக் கொடுங்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி:
இயேசு தன் மலைப்பொழிவின் தொடக்கத்தில், “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்” (மத் 5: 20 என்று கூறியிருப்பார். மறைநூல் அறிஞர்கள் என்ன செய்தார்கள் எனில், கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொண்டார்கள் அல்லது எடுத்துக் கொண்டார்கள். (மாற் 12: 40). இத்தகைய பின்னணியில் இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்களிடம் கேட்கிறவர்களுக்குக் கொடுங்கள்” என்கிறார். அதாவது மறைநூல் அறிஞர்களைப் போன்று எடுப்பவர்களாக இல்லாமல், கொடுப்பவர்களாக இருங்கள்” என்கிறார். மட்டுமல்லாமல், “பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை” (திப 20: 35) என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னதோடு நின்றுவிடாமல், தன் நண்பர்களாகிய நமக்காகத் தன் உயிரையும் கொடுத்து (யோவா 15: 13) தன்னையே கொடுப்பதுதான் கொடுப்பதில் சிறந்தது என்கிறார்.
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், “அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகின்றோம்” என்கிறார். புனித பவுல் சொல்லும் இவ்வார்த்தைகள், கொடுக்க வேண்டும் என்று அவர் வெறுமனே போதித்துக்கொண்டிருக்காமல், தன் நடத்தையால், செயலால் நிரூபித்துக் காட்டினார். என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது. ஆகவே, நாம் நம்மிடம் கேட்கின்றவர்களுக்குக் கொடுத்து, கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை நாம் நம் செயலால் நிரூபிப்போம்.
சிந்தனைக்கு:
 கொடுத்ததால் யாரும் ஏழையாகிவிடவில்லை – ஆன் பிராங்
 மற்றவர்களுக்குக் கொடுப்பவர்களே, மிகவும் மகிழ்ச்சியானவர்கள் – புக்கர் டி வாஷிங்டன்.
 கொடுப்பது என்பது வெறும் நன்கொடை கொடுப்பது அல்ல; மாறாக, மாற்றத்தை ஏற்படுத்துவது – கேத்தி கால்வின்.
ஆன்றோர் வாக்கு:
‘கொடுப்பதன் வழியாகவே, உன்னிடம் உள்ளதைவிட மிகுதியாகப் பெற முடியும்’ என்பார் ஜிம் ரான். எனவே, நாம் நம்மிடம் கேட்பவருக்கும்; ஏன், கேளாதவருக்கும், தேவையில் உள்ளவருக்கும் கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.