வாசக மறையுரை (பிப்ரவரி 12)
பொதுக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I தொடக்க நூல் 3: 1-8
II மாற்கு 7: 31-37
“எப்பத்தா”
கடவுளுக்குக் கேட்கும்; தாத்தாவிற்குக் கேட்காதே!
நகரில் வளர்ந்து வந்த இரண்டு சிறுவர்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்காகக் கிராமத்தில் இருந்த தங்களது தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். தாத்தா அவர்கள்மீது மிகுந்த அன்புகொண்டு, அவர்களுக்கு ஊரில் இருந்த பல இடங்களைச் சுற்றிக் காட்டினார்.
ஒருநாள் சிறுவர்கள் இருவரும் இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பாக முழந்தாள் படியிட்டு வேண்டினார்கள். அப்பொழுது இளையவன், “கடவுளே! எனக்கொரு மிதிவண்டி வேண்டும்” என்று சத்தமாக வேண்டினான். அதற்கு மூத்தவன் அவனிடம், “கடவுளுக்குத்தான் நன்றாகக் கேட்குமோ, நீ ஏன் இவ்வளவு சத்தமாக வேண்டுகின்றாய்?” என்றான். உடனே இளையவன், “கடவுளுக்கு நன்றாகக் கேட்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்; ஆனால், நம்முடைய தாத்தாவிற்குக் காது சரியாகக் கேட்காது அல்லவா! அதனால்தான் இவ்வளவு சத்தமாக வேண்டுகின்றேன்” என்றான்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், காது கேளாதவர்கள் எப்படியெல்லாம் நகைப்புக்கு உள்ளாகின்றார்கள் என்பதை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவுசெய்கின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் ஆண்டவர் இயேசு காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான மனிதரை நலப்படுத்துகின்றார். இயேசு செய்த இந்த வல்லசெயல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு பிறவினத்தார் வாழ்ந்து வந்த பகுதிகளான தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகியவற்றின் வழியாக கலிலேயாக் கடலை வந்தடைகின்றார். இயேசு இந்தப் பகுதிகளின் வழியாக வந்தார் என்பதன் மூலம் அவர் பிற இனத்தார் நடுவிலும் பணிசெய்தார் என்பது உறுதியாகின்றது. இயேசு அவ்வாறு வருகின்றபொழுது, சிலர் அவரிடம் காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைக் கொண்டுவந்து அவரை நலப்படுத்துமாறு வேண்டுகின்றார். இவர்கள் இயேசுவிடம் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். அதனாலேயே அவர்கள் இயேசுவிடம் இப்படிக் கேட்கின்றார்கள்.
இயேசு அம்மனிதரை எல்லாருக்கும் முன்பாக நலப்படுத்தவில்லை. மாறாக அவரைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் நலப்படுத்துகின்றார். காரணம் காதுகேளாதவரின் பிரச்சனை வேறு மாதிரியானது. மற்றவர்மீதாவது இரக்கப்படும் இந்தச் சமூகம், காதுகேளாதோரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கும். இதனாலேயே இயேசு அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், “எப்பத்தா” என்று சொல்லி நலப்படுத்துகின்றார். இயேசு இவ்வாறு காத்து கேளாதவரை நலப்படுத்துவதன்மூலம், இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும், “காதுகேளாதவரின் செவிகள் கேட்கும்; வாய் பேசாதவர் மகிழ்ந்து பாடுவார்” (எசா 35: 5,6) என்ற வார்த்தைகள் நிறைவுபெறச் செய்கின்றார்.
சிந்தனைக்கு:
இயேசு காதுகேளாதவரும் திக்கிப் பேசுவருமான மனிதரை நலப்படுத்தியது அவர் மெசியா என்பதற்குச் சான்று
‘எப்பத்தா என்று சொன்னதன்மூலம் இயேசு காதுகேளாதவரைக் கேட்கச் செய்தார். நாம் இறைவார்த்தைக்கு செவிக்கொடுத்து வாழ்கின்றோமா?
நம்மோடு வாழும் ஊனமுற்றவர்கள்மீது நமது பார்வை எப்படி இருக்கின்றது?
இறைவாக்கு:
‘சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவுகொண்டார் (லூக் 10: 33) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவைப் போன்று, நல்ல சமாரியரைப் போன்று வறியவர்கள்மீது பரிவுகொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.