வாசகமறையுரை (ஜனவரி 20)
பொதுக்காலம் இரண்டாம் வாரம் புதன்கிழமை
I எபிரேயர் 7: 1-3, 15-17
II மாற்கு 3: 1-6
“நன்மை செய்வோம்”
நன்மை செய்யும்பொழுது ஒருவகையான ஆற்றல் பிறக்கிறது:
இளைஞர்கள் சிலர் மலைமீது ஏறிக்கொண்டிருந்தனர். சிறிதுதூரம்தான் அவர்கள் மலையேறி இருப்பார்கள், அதற்குள் அவர்களுக்கு மூச்சு வாங்கியது. இதனால் அவர்கள் அருகே கிடந்த ஒரு பாறையில் அமர்ந்து இளைப்பாறத் தொடங்கினார்கள்.
அந்நேரத்தில் பெரியவர் ஒருவர் தன் தலைமீது ஒரு பெரிய மூட்டையை வைத்துகொண்டு, மலைமீது வேகவேக ஏறிவந்தார். அவரை வியப்போடு பார்த்த இளைஞர்கள் அவரிடம், “இந்த மலையில் சிறிதுதூரம் ஏறிவருவதற்குள் எங்களுக்கு மூச்சு வாங்குகிறது. உங்களால் மட்டும் எப்படி தலையில் ஒரு பெரிய மூட்டையை வைத்துக்கொண்டு, இந்த மலையில் இவ்வளவு வேகமாக வரமுடிகின்றது?” என்றார்கள். அதற்குப் பெரியவர் அவர்களிடம், “என்னுடைய ஊர் மலைமேல் உள்ளது. சிறுவயது முதலே நான் என்னுடைய ஊரில் முடியாமல் இருப்பவர்களுக்குக் கீழே உள்ள நகரில் இருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு வருவேன். சில சமயங்களில் நோயாளர்களைக்கூட நான் என் தோள்மேல் வைத்துத் தூக்கிக் கொண்டுவருவேன்… அது என்னமோ தெரியவில்லை, மற்றவர்களுக்கு நான் ஏதாவது நன்மை செய்கின்றபொழுது, ஏதோவோர் ஆற்றல் என்னை உந்தித் தள்ளுகின்றது. அதனால்தான் என்னால் இந்த மலையில் இவ்வளவு வேகமாக ஏறிச் செல்ல முடிகின்றது” என்றார்.
மற்றவருக்கு நாம் நன்மை செய்கின்றபொழுது, நமக்குள் புதுவிதமான ஆற்றல் பிறக்கின்றது என்பது எவ்வளவு ஆழமான உண்மை! இன்றைய இறைவார்த்தை நன்மை செய்வதற்குத் தயங்கவேண்டாம் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது.
திருவிவிலியப் பின்னனி:
தான் சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்த இயேசு (திப 10: 38), தொழுகைக்கூடம் வருகின்றார். அங்கு அவர் கை சூம்பிய மனிதரைக் கண்டு, அவரை நலப்படுத்த முடிவு செய்கின்றார். ‘ஓய்வுநாளில் கை சூம்பிய மனிதரை நலப்படுத்தினால், பரிசேயர்கள் தனக்கெதிராகத் திரும்புவார்கள்’ என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர் அதைப் பொருள்படுத்தாமல், கை சூம்பிய மனிதரை நலப்படுத்தி, நன்மையைச் செய்கின்றார். இயேசு இப்படி நன்மை செய்யக் காரணம், இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பது போல், அவர் நீதியின் அரசர். இயேசு நீதியின் அரசர் எனில், தேவையில் உள்ள வறியவர்களுக்கு, நோயாளர்களுக்கு நீதியானதைச் செய்வதுதானே முறை!
சிந்தனைக்கு:
எதிர்ப்புகள் வந்தாலும், இயேசுவைப் போன்று நன்மை செய்யத் தயாரா?
மற்றவரின் முன்னேற்றத்திற்கு நாம் படிகல்லா? அல்லது தடைக்கல்லா?
ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள்மீது நீதியின் கதிரவன் எழுவான் (மலா 4: 2).
ஆன்றோர் வாக்கு:
‘நம் இதயக் கதவை இறைவனுக்குத் திறந்து, அவரால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்போம்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நம் இதயக் கதவை இயேசுவுக்காகத் திறந்து, அவரைப் போன்று நன்மைசெய்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.