வாசக மறையுரை (ஜனவரி 19)

பொதுக்காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I எபிரேயர் 6: 10-20
II மாற்கு 2: 23-28
எளியவரிடம் இரக்கம்
எளியவர்கள்மீது இரங்கிய கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா
1974 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 15 ஆம் நாள், கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா, மதுரைக்கு அருகில் உள்ள கருமாத்தூர் புனித அருளானந்தர் கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்பொழுது பலரும் தெரசாவை நேரில் சந்திக்க முடியுமா, அவரோடு பேச முடியுமா, அவரோடு நிழல்படம் எடுக்கமுடியுமா? என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை. மாறாக, கிழிந்துபோன பனியனை அணிந்திருந்த இம்மானுவேல் என்ற மாணவனுக்கும், தெரசாவின் வருகைக்காகப் பல நாள்கள் தோட்டத்தை அழகுபடுத்தி, மிகவும் சாதாரணமாக இருந்த தோட்டத் தொழிலாளருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரையும் தன்னருகே அழைத்த தெரசா, அவர்களோடு அன்போடு பேசி, அவர்களுக்குத் தன் சிறப்பான ஆசியை வழங்கிவிட்டுச் சென்றார். தெரசா கல்லூரியை விட்டு வெளியே சென்றபிறகு, பலரும் ‘எத்தனையோ பெரிய பெரிய மனிதர்கள் இங்கிருக்க, இந்த இருவர்மீதும் தெரசாவின் பார்வை பட்டிருக்கின்றதே! இந்த ஒரு சான்று போதும், அன்னை எளியவர்மீது மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதற்கு’ என்று வியந்து நின்றனர்.
கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா எளியவர்மீது இரக்கப் பார்வை கொண்டிருந்தார். இன்றைக்குப் பலருக்கு எளியவர்மீது இரக்கப் பார்வை இல்லாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய நற்செய்தியில், ஓய்வுநாளின்போது இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்துவிட்டுப் பரிசேயர் அதை மிகப்பெரிய குற்றமாக இயேசுவிடம் கூறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். ‘சீடர்கள் பசியோடு இருக்கின்றார்கள்; அதனால்தான் அவர்கள் கதிர்களைக் கொய்து உண்கின்றார்கள்’ என்று பரிசேயர் பெருந்தன்மையோடும் இரக்கத்தோடும் நடந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் சீடர்கள் செய்ததை பெரிய குற்றமாக இயேசுவிடம் கூறியதால், இயேசு அவர்களுக்கு தாவீது மன்னரின் வாழ்வில் நடந்த நிகழ்வைக் (1 சாமு 21: 1-6) கூறி, அவர்களின் வாயை அடைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகம் “கடவுள் நீதியற்றவர் அல்ல” என்கின்றது. கடவுள் நீதி அற்றவர் அல்ல எனில், அவர் நீதியுள்ளவர் என்பதே பொருள். கடவுளின் நீதி எப்பொழுதும் எளியவர், வறியவர் சார்பாக இருக்கும். நாம் பரிசேயரைப் போலன்றி, கடவுளைப் போன்று எளியவரிடம் இரக்கத்தோடு இருப்போம்.
சிந்தனை:
 சட்டங்களை விட சக மனிதரின் தேவைக்கு முதன்மையான இடம் கொடுக்கப்பட வேண்டும்.
 எளியவரிடம் கடவுள் காட்டும் நீதி அநீதி அல்ல, அது சமநீதி
 “சமத்துவம் காண்பதற்கு விடுதலை ஒரு சாதனமாக இல்லாவிட்டால், அந்த விடுதலைக்குப் பொருளே இல்லை” – மாஜினி
இறைவாக்கு:
‘இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்’ (மத் 5: 7) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவைப் போன்று எளியவர்மீது இரக்கத்தோடு இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.