திருத்தந்தையின் மறைக்கல்வி உரை சந்திப்பில் கோவிட் விதிமுறைகள்

புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தும் ஒரு விதிமுறையாக, தான் மக்களைச் சந்திக்க நேரடியாக வரப்போவதில்லை என்பதை வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு வாரமும், புதன் மறைக்கல்வி உரைகளில் மக்களை நெருங்கிச் சென்று, அவர்களை ஆசீர்வதிப்பது, குறிப்பாக, நோயுற்றோரையும், குழந்தைகளையும் அரவணைப்பது, மக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது ஆகிய வழக்கங்களை, திருத்தந்தை கொண்டிருந்தார்.

அக்டோபர் 14 இப்புதனன்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் மறைக்கல்வி உரை வழங்கவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைச் சந்திக்காமலேயே நேரடியாக அரங்கத்தின் மேடையில் தோன்றி மக்களை வாழ்த்தியபின் தன் மறையுரையைத் துவக்கினார்.

அதே வண்ணம், தன் மறையுரையின் இறுதியில், மேடையில் இருந்தபடி, மக்களை வாழ்த்தியபோது, இந்தக் கொள்ளைநோயை விரட்டியடிக்க நாம் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தரவேண்டியுள்ளது, எனவே, நான் வழக்கமாக மக்களைச் சந்திக்கும் தருணங்கள் இன்று இடம்பெறாது என்று திருத்தந்தை கூறினார்.

குறிப்பாக, அரங்கத்தில் கூடியிருந்த நோயுற்றோரை தான் நேரில் சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவித்து, அவர்கள் அனைவரையும் தான் உள்ளத்தில் தாங்கி செபிப்பதாகக் கூறினார்.

மேலும், இந்த மறைக்கல்வி உரை நிகழ்வின்போது, மக்கள் முகக்கவசங்களை அணிந்திருக்குமாறும், இடைவெளி விட்டு அமர்ந்திருக்குமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Comments are closed.