நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 07)

பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் வெள்ளிக்கிழமை

மத்தேயு 16: 24-28

“தம் வாழ்வையே இழப்பாரெனில்…”

நிகழ்வு

இயேசு சபையின் மூன்றாவது தலைவராக இருந்தவர் புனித பிரான்சிஸ் போர்ஜியா. இவர் இயேசு சபையில் சேர்வதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டில் உள்ள காண்டியாவின் நான்காவது பிரபுவாக இருந்தவர். திருமணமான இவருக்கு ஏழு குழந்தைகள் இருந்தார்கள்.

1539 ஆம் ஆண்டு, மே திங்கள் ஒன்றாம் நாள், ஸ்பெயின் நாட்டின் அழகுப் பதுமையாகவும், மன்னர் நான்காம் சார்லசின் மனைவியாகவும் வலம்வந்த இளவரசி ஈசபெல்லா தனது முப்பத்து ஐந்தாம் வயதில் திடீரென இறந்துபோனாள். அவளுடைய இறப்பைச் சிறிதும் எதிர்பார்த்திராத அவளுடைய கணவனான நான்காம் சார்லஸ் அவளது உடலை அப்படியே போட்டுவிட்டு, ஆசிரமத்தை நோக்கி ஓடிப்போனான். இதனால் பிரபுவாக இருந்த பிரான்சிஸ் போர்ஜியா இளவரசி ஈசபெல்லாவின் இறந்த உடலை அடக்கம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அக்கால வழக்கத்தின்படி, மன்னர் குடும்பத்திலிருந்து ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலை இத்தாலியில் உள்ள ஏழு கோயில்களில் மக்களுடைய பார்வைக்கு வைத்துவிட்டு, அதன்பிறகுதான் அடக்கம்செய்ய வேண்டும். அதன்படி காண்டியாவின் பிரபுவான பிரான்சிஸ் போர்ஜியா, இறந்துபோன ஈசபெல்லாவின் உடலை இத்தாலியில் உள்ள ஏழு கோயில்களில் மக்கள் பார்வைக்கு வைத்து, அதை யாரும் திருடிக்கொண்டு போய்விடாமல் பாதுகாத்து வந்தார். ஏழாம் நாளில், பெட்டியைத் திறந்து, ‘இவர் இன்னார்’ என்று மக்களிடம் சான்று பகரவேண்டும். அந்த அடிப்படையில் இவர் இளவரசி ஈசபெல்லாவின் உடல் இருந்த பெட்டியைத் திறந்து, “உண்மையில்… இது இளவரசி ஈசபெல்லாதான்” என்று சொல்ல முற்பட்டபொழுது, அதிர்ந்து போனார். காரணம், எழில்மிகு ஓவியம் போன்றும், அழகுச் சிலை போன்றும் இருந்த இளவரசி ஈசபெல்லாவின் உடல் வதங்கிப் போய், நாற்றம் அடிக்கத் தொடங்கியது.

அப்பொழுது அவர், ‘வதங்கிப் போய் நாற்றமடிக்கும் இந்த உடலுக்குத்தான் நான் இத்தனை ஆண்டுகளும் பணிவிடை செய்தானா! இனிமேல் நான் கடவுளைத் தவிர, வேறு யாருக்கும் பணிவிடை செய்யமாட்டேன்!’ என்று தீர்க்கமானதொரு முடிவினை எடுத்து, தன்னுடைய குடும்பத்திற்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு, புனித இஞ்ஞாசியார் நிறுவிய இயேசு சபையில் சேர்ந்து, பின்னாளில் ஒரு புனிதராக உயர்ந்தார் (நெறிகாட்டும் ஆளுமைகள் 01 – சேவியர் அந்தோனி. சே.ச)

புனித பிரான்சிஸ் போர்ஜியாவின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு அல்லது அவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், ஒருவர் அழகு நிறைந்தவராகவும், அதிகாரம் கொண்டவராகவும், ஆயிரம் கோடிகளுக்குமேல் அதிபதியாகவும் இருக்கலாம்; ஆனால் அவர் தன்னுடைய வாழ்வை இழப்பாரெனில், அவருக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்தச் சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொள்ள முற்படும் மனிதர்கள்

நற்செய்தியில் இயேசு, தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசும்பொழுது, முதலில் தன்னலத்தைத் துறக்கவேண்டும் என்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் தன் மையம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டு, இறைமையம் சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று சொல்லலாம். ஆனால், இன்றைக்குப் பலர் தன் மையம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. பொருள் சேர்த்து, பணம் சேர்த்து, உலகையே தங்களுக்கு ஆதாயமாக்கிக் கொள்ளப் போராடும் இவர்கள், மிகுதியான உடைமையைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வது வந்துவிடாது (லூக் 12: 15) என்ற உண்மையை மறந்துபோய் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது.

இயேசுவின் பொருட்டுத் தம்மையே இழப்பவர் வாழ்வடைவர்

உலகை ஆயதமக்கிக் கொள்ள முற்படுவோர் அதை இழந்துவிடுவர் என்று சொல்லும் இயேசு, தன் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் அதை இழக்கத் துணிபவர், வாழ்வடைவர் என்று குறிப்பிடுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப எத்தனனையோ புனிதர்கள், மறைச்சாட்சிக்ள தங்களுடைய உயிரை இழந்ததன் மூலம் அதை காத்துக் கொண்டார்கள். நாமும் இயேசுவின் பொருட்டு, நம் வாழ்வை இழக்கத் துணிந்தால் அதைக் காத்துக்கொள்ளலாம் என்பது உறுதி.

நாம் இயேசுவின் பொருட்டு நம்மையே இழக்கத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக, அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்; அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்’ (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நாம் எப்பொழுதும் கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.