வாழ்வில் எது முக்கியம் என்பதையும், மற்றவர்களுடன் ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டியதன் தேவையையும் கோவிட்-19 நெருக்கடி நமக்கு உணர்த்தியுள்ளது

இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில் நம் விசுவாசத்திற்கு எவ்விதம் சான்று பகர்வது என்பதை மையப்படுத்தி, கர்தினால் வால்ட்டர் காஸ்பர் (Walter Kasper) அவர்கள் எழுதியுள்ள நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்புப் பேரவையின் முன்னாள் தலைவர், கர்தினால் வால்ட்டர் காஸ்பர் அவர்களும், பல்லோட்டைன் துறவுச்சபையைச் சேர்ந்த அருள்பணி ஜார்ஜ் அகஸ்டின் அவர்களும் இணைந்து எழுதியுள்ள ”ஒன்றிப்பு, மற்றும், எதிர்நோக்கு’ என்ற நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புயல்போல் திடீரென தாக்கிய இந்த கொரோனா கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொரோனா கொள்ளைநோய்க் காலம், நம் மகிழ்ச்சி, மற்றும், கிறிஸ்தவ விசுவாசம் என்ற கொடைகளைக் குறித்து அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது என தன் முன்னுரையில் குறிப்பிடும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் எது முக்கியம் என்பதையும், மற்றவர்களுடன் ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டியதன் தேவையையும் இந்த நெருக்கடி நமக்கு உணர்த்தியுள்ளது என கூறியுள்ளார்.

இந்த கொள்ளைநோயால், கிறிஸ்தவர்கள், முடக்கப்பட தங்களை அனுமதிக்கக்கூடாது, ஏனெனில், நம்பிக்கை, மனஉறுதி, ஒருமைப்பாட்டில் நம்மை பலப்படுத்துதல் போன்றவற்றை நமக்கு வழங்கும் கிறிஸ்துவின்  உயிர்ப்பு, நம் ஒவ்வொருவரையும் அன்பில் இணைக்கிறது எனவும், தன்  முன்னுரையில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த தொற்றுநோய்க்காலத்தில் மனஉறுதியுடன் செயல்பட்டு, தங்கள் உயிரையும் தியாகம் செய்த மருத்துவப்பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு தன் நன்றியையும் இந்நூலின் முன்னுரையில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய எதிர்நோக்குகளுடனும், புதிய ஒருமைப்பாட்டுணர்வுகளுடனும் செயல்படத் துவங்கி, ‘அஞ்சாதீர்கள். நான் சாவை வென்றுவிட்டேன்’ என்ற இயேசுவின் வார்த்தைகளுடன் முன்னோக்கிச் செல்வோம், என தன் முன்னுரையை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.