பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு (ஜூலை 19)

I சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
II உரோமையர் 8: 26-27
III மத்தேயு 13: 24-43
கனிவோடு தீர்ப்பு வழங்கும் இறைவன்
நிகழ்வு
ஒரு சிற்றூரில் இரண்டு விவசாயிகள் இருந்தார்கள். அவர்கள் இருவருடைய வயலும் அருகருகே இருந்தன. இதில் ஒரு விவசாயி கடவுள்மீது கொண்டவர்; இன்னொரு விவசாயியோ கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்துவந்தார். அதனால் கடவுள்மீது நம்பிக்கைகொண்ட விவசாயி அவரிடம், புத்திமதிகளைச் சொல்லி நல்லமுறையில் வாழவேண்டும் என்றும், இல்லையென்றால் கடவுள் அதற்கேற்ற தண்டனையைத் தருவார் என்றும் சொல்லி வந்தார். இதனைக் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி கண்டுகொள்ளவே இல்லை.
அந்த ஆண்டு அவர்கள் இருவரும் தங்களுடைய வயலில் நாற்று நட்டு, பயிர்கள் நன்றாக வளர வேண்டியதையெல்லாம் செய்து, அறுவடைக்காகக் காத்திருந்தார்கள். அறுவடையின்பொழுது கடவுள்மீது நம்பிக்கையில்லாத விவசாயிக்கு அமோக விளைச்சல் கிடைத்தது; கடவுள்மீது நம்பிக்கைகொண்ட விவசாயிக்கு விளைச்சல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இதனால் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி, கடவுள் நம்பிக்கைகொண்ட விவசாயியிடம், “கடவுளுக்கு அஞ்சி நல்ல வழியில் வாழாவிட்டால், அவர் தண்டிப்பார் என்று என்னவெல்லாமோ என்னிடத்தில் சொன்னாயே…! இப்பொழுது பார்! கடவுள்மீது நம்பிக்கை கொண்ட உனக்கு சொல்லிக்கொள்ளும்படியாக விளைச்சல் இல்லை. ஆனால், கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல், விரும்பம்போல் வாழ்ந்த எனக்கு அமோக விளைச்சல் கிடைத்திருக்கின்றது” என்றார். அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கடவுள்மீது நம்பிக்கை கொண்ட விவசாயி இப்படிச் சொன்னார்: “கடவுள் மனிதரைப் போன்று ஒவ்வோர் ஆண்டும் அல்லது ஒவ்வொரு மாதமும் படியளப்பார் கிடையாது. அவர் படியளக்க வேண்டுமானால் காலம் தாழ்த்தலாம்; ஆனால், நிச்சயம் எல்லாருக்கும் படியளப்பார்.” இவ்வார்த்தைகள் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயியை மிகவே சிந்திக்க வைத்தன.
கடவுள் படியளக்க அல்லது தீர்ப்பு வழங்கக் காலம் தாழ்த்தலாம்; ஆனால், இறுதித் தீர்ப்பின்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்குவார். இது உறுதி. பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ‘கனிவோடு தீர்ப்பு வழங்கும் இறைவன்’ என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
அனைத்தையும் நன்றாய்ப் படைத்த இறைவன்
நற்செய்தியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமை, கடுகுவிதை உவமை, புளிப்பு மாவு உவமை என்று மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இந்த மூன்று உவமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இருந்தாலும், வயலில் தோன்றிய களைகள் உவமையை மட்டும் நாம் முதன்மையாக எடுத்துச் சிந்திப்போம்.
இயேசு சொல்லக்கூடிய வயலில் தோன்றிய களைகள் உவமையில் வரும் நிலக்கிழார், தன்னுடைய நிலத்தில் நல்ல விதைகளை விதைக்கின்றார். அவர் நல்ல விதைகளை விதைத்தது, ஆண்டவராகிய கடவுள், தான் உருவாக்கிய அனைத்தையும் நோக்க, அவை மிகவும் நன்றாய் இருந்தன (தொநூ 1: 31) என்ற வார்த்தைகளையும், இயேசு காதுகேளாதவரைப் பேசச் செய்ததைப் பார்த்துவிட்டு, மக்கள், “இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்துவருகின்றார்” (மாற் 7: 37) என்ற வார்த்தைகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக் இருக்கின்றன.
நிலக்கிழார் நல்லவிதைகளை விதைத்தாலும், அவருடைய பகைவர்கள் கோதுமைகளுக்கு இடையே களைகளையும் விதைத்து விட்டுப் போகின்றார்கள். இது சாத்தானுடைய சூழ்ச்சியை (தொநூ 3:1) நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நல்லவை விதைக்கப்பட்டபொழுது, அல்லவை விதைக்கப்பட்டதே, அது உடனே அகற்றப்பட்டதா…? அதற்கென்று காலம் ஒதுக்கப்பட்டதா? என்பதைக் குறித்து தொடர்ந்து சிந்திப்போம்.
பொறுமையோடு கனிவோடும் இருக்கும் இறைவன்
நிலக்கிழாருடைய பணியாளர்கள், வயலில் கதிர்களோடு களைகளும் இருப்பதைப் பார்த்துவிட்டு, களைகளை அகற்றிவிடலாமா? என்று கேட்கின்றபோழுது, நிலக்கிழார் அவர்களிடம், களைகளைப் பறிக்கும்பொழுது, அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள்” என்கின்றார். நிலக்கிழார் சொல்லக்கூடிய வார்த்தைகள், புனித பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில் கூறுகின்ற, “ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றிக் காலம்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்; ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை; மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார்” (2 பேது 3: 9-10) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
ஆம், ஆண்டவராகிய கடவுள், களைகள் போன்று இருக்கும் மனிதர்களை உடனே அப்புறப்படுத்தாமல், பொறுமையோடு இருக்க முதல் காரணம், புனித பேதுரு சொல்வது போல, அவர் யாரும் அழிந்துபோகாமல், மனம்மாறவேண்டும் என்று விரும்புவதால்தான். இரண்டாவது காரணம், சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், கடவுள் கனிவோடு தீர்ப்பு வழங்குவதால் ஆகும். இவ்வாறு கடவுள் நம்மீது கனிவோடு இருந்து, நாம் அனைவரும் மனம்மாறவேண்டும் என்று விரும்புவதால்தான் பொறுமையோடு இருக்கின்றார்.
அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் இறைவன்
கடவுள் கனிவுள்ளவராகவும் பொறுமையுள்ளவராகவும் இருந்தாலும், அறுவடையின்பொழுது நிலக்கிழார் எப்படித் தன்னுடைய பணியாளர்கள் மூலமாகக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்து வைத்துவிட்டு, களைகளை எரிப்பதற்காகக் கட்டுகின்றாரோ, அப்படி, இறுதித் தீர்ப்பின்பொழுது கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார் அல்லது தீர்ப்பு வழங்குவார் (மத் 25: 31-46; உரோ 2: 6).
இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமைக்கு விளக்கம் அளிக்கின்றபொழுது, “வானதூதர் நெறிகெட்டோரைத் தீச்சூளையில் தள்ளுவார் அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவர்” என்று சொல்கின்றாரே, நாம் தீச்சூளையில் தள்ளப்படுவதும், கதிரவனைப் போன்று ஒளிவீசுவதும் நம்முடைய கையில் அல்லது நாம் வாழும் வாழ்க்கையைப் பொருத்துதான் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
“அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்” (யோவா 3:15) என்று இயேசு கூறுவதாக யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். அப்படியானால், நாம் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழ்ந்தோமெனில் நிலைவாழ்வைப் பெறுவோம்; கதிரவனைப் போன்றும் ஒளிவீசுவோம். அதே நேரத்தில் நாம் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழாமல், மனம்மாறுவதற்கு நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளையும் நாம் உதறித் தள்ளிவிட்டு வாழ்ந்தோம் எனில், அதற்குரிய தண்டனையைத்தான் நாம் பெறுவோம் என்பது உறுதி.
நாம் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு நிலைவாழ்வைப் பெறப்போகிறோமா? அல்லது அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் தண்டனையைப் பெறப் போகிறோமா? இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். சிந்திப்போம்.
சிந்தனை
‘எங்களுடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்ட மக்களிடம் இயேசு, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்’ (யோவா 6: 28,29) என்பார். ஆகையால், நாம் மனம்மாறவேண்டும்; இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கும் கடவுளிடம், நம்பிக்கை கொண்டவர்களாய் அவரிடம் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.