ஜூலை 16 : நற்செய்தி வாசகம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில்
இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 11: 28-30
மனத்தாழ்மையுடைய இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோம்
நிகழ்வு
இருபதாம் நூற்றாண்டில், இரஷ்யாவில் பிறந்த மிகப்பெரிய இசை ஆளுமை இகோர் ஸ்டரவின்ஸ்கி (Igor Stravinsky 1882 -1971). இவர் பியானோவை அவ்வளவு அற்புதமாக இசைத்து, இசையமைக்கக் கூடியவர்.
ஒருமுறை ஹாலிவுட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவர் இவரிடம் வந்து, நான்காயிரம் டாலர்களைக் கொடுத்து, “நான் தாயாரித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு இசையமைத்துக் கொடுங்கள்” என்றார். இதற்கு இகோர் ஸ்டரவின்ஸ்கி, “இவ்வளவுதானா…? பணம் மிகவும் குறைவாக இருக்கின்றதே…” என்றார்.
உடனே அந்தத் தயாரிப்பாளர், “உமக்கு இசையைக் கற்றுத்தந்த உம்முடைய ஆசானுக்கே நான் நான்காயிரம் டாலர்தான் தருவேன்; நீர் என்ன இந்தப் பணம் குறைவாக இருக்கின்றது என்கிறீர்” என்றார். “என்னுடைய ஆசான் திறமையானவர்; அவர் எளிதாக ஒரு படத்திற்கு இசையமைத்துவிடுவார்; ஆனால், நான் என்னுடைய ஆசானைப் போன்று திறமையாவன் கிடையாது. மேலும் ஒருபடத்திற்கு நான் இசையமைக்க அவ்வளவு சிரமப்பட வேண்டும். அதனால்தான் எனக்கு இந்தப் பணம் போதாது என்று சொன்னேன்” என்றார்.
உண்மையில் இகோர் ஸ்டரவின்ஸ்கி, தன்னுடைய ஆசானைப் போன்று திறமையானவர்தான்; ஆனாலும் அவருக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து, மிகவும் தாழ்ச்சியோடு பேசியதால், படத்தயாரிப்பாளர், அவருக்குக் கொஞ்சம் கூடுதலான தொகையைச் சம்பளமாகக் கொடுத்தார்.
மிகப்பெரிய இசைக்கலைஞராகிய இருந்தாலும், இகோர் ஸ்டரவின்ஸ்கி தாழ்ச்சியோடு இருந்ததால், தயாரிப்பாளரிடம் அவர் கேட்டது கிடைத்தது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் (மனத்)தாழ்ச்சியோடு இருக்கையில், நாம் கேட்டதுகிடைக்கும். மட்டுமல்லாமல், இயேசு தருகின்ற இளைப்பாறுதலும் கிடைக்கும். இன்றைய நற்செய்தியில் இயேசு, இளைப்பாறுதல் தருவதாகக் கூறுகின்றார். இயேசு தருகின்ற இளைப்பாறுதலை ஒருவர் பெற்றுக்கொள்ள, என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்துபோன மக்கள்
இயேசுவின் காலத்தில் இருந்த சாதாரண மக்கள் பல்வேறு சுமைகளைச் சுமந்தார்கள். இவற்றில் மிகவும் முக்கியமான சுமை, பரிசேயர்கள் அவர்கள்மீது சுமத்திய சட்டம் என்ற சுமை. ஆம். தங்களை ஒழுக்கவாதிகள், சட்டக் காப்பாளர்கள் என்ற கருதிக்கொண்ட பரிசேயர்கள், சட்டங்கள் என்ற சுமத்திற்கரிய பளுவான சுமைகளை மக்களுடைய தோள்மேல் வைத்தார்கள் (மத் 23: 4). இந்தச் சுமைகளை எல்லாம் அவர்கள் சுமந்தார்களா என்றால், கிடையாது. அவர்கள் மக்கள்மீது சுமைகளை இறக்கிமட்டுமே வைத்தார்கள். இதனால் சாதாரண மக்களுடைய வாழ்க்கை சுமை நிறைந்ததாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு மக்களிடம், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார்.
இயேசு சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருவதாகச் சொல்கின்றாரே…! அந்த இளைப்பாறுதல் நமக்குச் சுமையே அல்லது துன்பமே இல்லாத வாழ்வைத் தந்துவிடுமா? என்ற கேள்வி எழலாம். இயேசு அதைக் குறிப்பிடவில்லை. மாறாக, தன்னிடம் வந்தால், தன்னிடமிருந்து கற்றுக்கொண்டால் ஒருவருடைய சுமை எளிதாக இருக்கும் என்பதையே அவர் குறிப்பிடுக்கின்றார்.
இயேசுவிடம் நாம் எதைக் கற்றுக்கொண்டால், நம்முடைய சுமை எளிதாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை இயேசு நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன்னுடைய மனத்தாழ்ச்சியின் வழியாக இளைப்பாறுதல் தரும் இயேசு
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருவதாகச் சொல்லும் இயேசு, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்கின்றார். ஆம். நாம் இயேசுவிடமிருக்கும் கனிவையும் தாழ்ச்சியையும் கற்றுக்கொண்டு, அவற்றின்படி நடந்தால் அவர் தருகின்ற இளைப்பாறுதல் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
இயேசு கனிவுக்கும் மனத்தாழ்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். அதனால்தான் அவரால் எல்லார்மீதும் அன்புகொள்ள முடிந்தது; தன்னுடைய சீடர்களுடைய காலடிகளைக் கழுவ முடிந்தது. நாமும் இயேசுவிடமிருந்த கனிவையும் மனத்தாழ்மையையும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தால், நமக்கு இயேசு தருகின்ற இளைப்பாறுதல் நிச்சயம் கிடைக்கும். இன்றைக்குப் பலருக்கு உள்ளத்தில் அன்பு இல்லை; ஆணவம் மட்டுமே குடிகொண்டிருக்கின்றது. என்றைக்கு நமது உள்ளத்தில் கனிவும் தாழ்ச்சியும் இருக்கின்றனதோ அன்றைக்கு நமது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து இளைப்பாறுதலைப் பெற, அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்’ (1 பேது 3:8) என்பர் புனித பேதுரு. ஆகையால், நாம் புனித பேதுரு கூறுவது போன்று, நம் ஆண்டவர் இயேசு கூறுவது போன்று கனிவோடும் மனத்தாழ்மையோடு வாழக் கற்றுக்கொண்டு, இயேசுவின் இளைப்பாறுதலைப் பெறுவோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.