அரசுத்தலைவரின் சுயநலத்தால், ஏழைகளின் நலவாழ்வுக்கு ஆபத்து

உலகம் முழுவதும் கோவிட்-19 நோயால் அவதியுறும் வேளையில், அண்மையில் தயாரிக்கப்பட்ட மருந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு மட்டும் என அந்நாடு பயன்படுத்த திட்டமிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என கவலையை வெளியிட்டுள்ளார் பிலிப்பீன்ஸில் பணியாற்றும் அயர்லாந்து அருள்பணியாளர் ஒருவர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள Gilead Sciences என்ற நிறுவனம் தயாரித்துள்ள Remdesivir என்ற கோவிட் சிகிச்சை மருந்து முழுவதையும் அமெரிக்க ஐக்கிய நாட்டு நோயாளிகளுக்கு என ஒதுக்கி, மற்ற நாட்டு மக்களுக்கு அது கிடைக்காமல் செய்துள்ள அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் திட்டம் குறித்து கவலையை வெளியிட்ட அருள்பணியாளர் Shay Cullen அவர்கள், அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற, டிரம்ப் அவர்கள் கையாளும் தந்திரம் இது என்றார்.

மற்ற நாடுகளுக்கு கிடைக்காமல் தன் நாட்டிற்கு மட்டும் மருந்தை வைத்திருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் கொள்கையால், வருங்காலம் பெருமளவில் பாதிக்கப்படும், ஏனெனில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்போதும், இத்தகைய போக்கு உருவாகலாம் என்ற கவலையையும் தெரிவித்தார், பிலிப்பீன்சில் பணியாற்றும் இந்த அருள்பணியாளர்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை தயாரிப்பதாக திட்டமிடப்பட்டுள்ள ஐந்து இலட்சம் Remdesivir மருந்துகளும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என அரசுத்தலைவர் டிரம்ப் கட்டளையிட்டுள்ளது, மற்ற நாட்டு ஏழை மக்களின் குணப்படுத்தலை தள்ளிப்போடவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார், அருள்பணி Cullen.

இம்மருந்தை தயாரிக்கும் உரிமை, Gilead நிறுவனத்திற்கு மட்டுமே இருப்பதால், எத்தனை ஆயிரம் பேர் துன்பங்களை அனுபவித்தாலும், வேறு எந்த நிறுவனமும் இந்த மருந்தை தயாரிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற கருத்தையும் கவலையுடன் தெரிவித்த இவர், கோவிட்-19 தொற்று நோயாளிகள் இம்மருந்தை ஆறு முறை எடுக்கவேண்டிய நிலையில், இதற்கு 3,200 டாலர்கள் செலவாவதால், இது, பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய மருந்தாகிறது எனவும் கூறினார்.

பல மருந்து நிறுவனங்களின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகள், அரசுத்தலைவர் டிரம்பின் அரசு நிர்வாகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதும், தேர்தல் காலத்தின்போது, பல மருந்து நிறுவனங்கள் டிரம்புக்கு பெரிய அளவில் தேர்தல் நிதியுதவி வழங்கியதும் இந்த மருந்து விலை உயர்வுக்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார், பிலிப்பீன்சில் பணிபுரியும் அயர்லாந்து நாட்டு அருள்பணி Cullen.

Comments are closed.