இயற்கை வளங்களைக் காப்பதிலும் ஒன்றிணைந்து உழைக்க முடியும்
தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு எடுக்க முயலும் அனைத்து நடவடிக்கைகளையும் மையமாக வைத்து அதன் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், இங்கிலாந்து மதத்தலைவர்கள்.
இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, யூதம் உட்பட பல மதத்தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில், காலநிலை மாற்றங்கள் குறித்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Laudato Si’ திருமடலில் கூறப்பட்டுள்ள நோக்கங்களையும் பரிந்துரைகளையும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மதத்தலைவர்கள், கோவிட்-19 தொற்றுநோயால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டு சோகத்தைத் தந்துள்ளபோதிலும், அக்காலக்கட்டத்தில் காற்று மாசுக்கேடு குறைவுற்றதும், இயற்கையை அழிவிலிருந்து பாதுகாத்ததும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒண்றிணைந்து உழைப்பதன் வழியாக பெரும் நோயையும் எதிர்த்து போராட முடியும் என்பதை அண்மை நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டுள்ள நாம், இயற்கை வளங்களைக் காப்பதிலும் ஒன்றிணைந்து உழைக்க முடியும் என்பதை, கண்டுணர்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் இங்கிலாந்து மதத்தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமூகம் என்பது, ஒருவருக்கொருவர் அன்புகூர்வதாக, இரக்க உணர்வுடன் செயல்படுவதாக, நுகர்வுக் கலாச்சாரத்தையும், தேவையற்ற பயணங்களையும் குறைப்பதாக இருக்கவேண்டும் என்பதை அண்மைய தொற்றுநோய் நமக்கு கற்றுத்தந்துள்ளது என உரைக்கும் மதத்தலைவர்கள், நெருக்கடிக் காலங்களில் அதிக அளவில் அநீதியை எதிர்கொள்வதும், துன்பங்களை அனுபவிப்பதும் ஏழைகளே என்பதையும், இக்காலத்தில் நாம் கண்டுள்ளோம் என, மேலும் கூறியுள்ளனர்.
ஓர் ஆழமான ஆன்மீக உணர்வையும், மற்றவர் மீது காட்டப்படவேண்டிய அக்கறையையும் அண்மைக்காலங்களில் நாம் கற்றுவருகிறோம் என உரைக்கும் மதத்தலைவர்கள், இவ்வுலகில், மக்களைப் பொருத்தவரையில் மட்டுமல்ல, இயற்கையைப் பொருத்தவரையிலும் பொறுப்புடன் செயல்படவேண்டியவர்கள் நாம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என, தங்கள் கடிதத்தில் மேலும் எடுத்துரைத்துள்ளனர்.
Comments are closed.