குடும்பங்கள், அன்பு, மதிப்பு, தோழமையைப் பெற்றிட

இன்றையக் குடும்பங்கள், அன்பு, மதிப்பு, மற்றும், வழிகாட்டல் ஆகியவற்றின் தோழமையைப் பெற்றிட இந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை மாதச் செபக் கருத்து பற்றி, காணொளிச் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இன்றையக் குடும்பங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, கடவுளை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

வாழ்வில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மாற்றங்களால், பெற்றோர், சிலவேளைகளில் தங்கள் பிள்ளைகளுடன் விளையாட மறந்துவிடுகின்றனர் என்றும், இத்தகைய இன்னல்களிலிருந்து குடும்பங்கள் மீள்வதற்குரிய வழிகளைக் காண, திருஅவை, குடும்பங்களுக்கு உதவவேண்டும் என்றும், இச்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை.

பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்கள், அவற்றை மேற்கொள்வதற்கு, குடும்பங்களின் அருகாமையில் இருந்து, திருஅவை, அவற்றை ஊக்குவிக்கவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றையக் குடும்பங்கள், அன்பு, மதிப்பு, மற்றும், வழிகாட்டல் ஆகியவற்றின் தோழமையை, குறிப்பாக, அரசிடமிருந்து அவை பாதுகாப்பைப் பெற்றிடவேண்டும் என்று, இந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த காணொளிச் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களோடு தொடர்புடைய கருத்துக்களுக்காக, ஒவ்வொரு மாதமும், திருத்தந்தையர் செபக் கருத்து ஒன்றை வெளியிட்டு, அக்கருத்துக்காகச் செபிக்குமாறு, உலக கத்தோலிக்கர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

திருத்தந்தையரின் செபக்கருத்தை, இயேசு சபையினர் நடத்தும், உலகளாவிய திருத்தூது செப வலைத்தள அமைப்பு, ‘திருத்தந்தையின் காணொளி’ என்ற ஊடகவடிவில், ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது

Comments are closed.