முதல் வாசக மறையுரை (ஜூலை 02)

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
ஆமோஸ் 7: 10-17

உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான போராட்டம்

நிகழ்வு

தற்போது துருக்கியில் உள்ள சினோப் (Sinop) என்ற இடத்தில் பிறந்தவர் கிரேக்கத் தத்துவஞானியான டயோஜினியஸ் (கி.மு 412-324). இவருடைய சமகாலத்தைச் சார்ந்தவர் அரிஸ்டிபஸ். இந்த இரண்டு பேரும் இருவேறு கருத்துகளை கொண்டவர்கள். ஒருநாள் டயோஜினியஸ் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக சூப் தயாரிப்பதற்காக அவரை விதைகளைக் கழுவிக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அரிஸ்டிபஸ், “ஒரு மிகப்பெரிய ஞானி இப்படியா அவரை விதைகளைக் கழுவிக்கொண்டிருப்பது…? நீங்கள் மட்டும் மன்னனைப் புகழ்ந்து பாடும் கலையைக் கற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால், இப்படியெல்லாம் அவரை விதைகளைக் கழுவிக்கொண்டிருக்கத் தேவை இருக்காது” என்று சற்று எகத்தாளமாகப் பேசினார்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த டயோஜினியஸ், “அரிஸ்டிபஸ்! நான் சொல்கிறேன் என்று என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்! நீ மட்டும் அவரை விதைகளில் சூப்பு தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டிருந்தால், இப்படி நீ எல்லாவற்றிற்கும் மன்னனைப் புகழ்ந்து பாடவேண்டிய தேவை இருக்காது” என்றார் டயோஜினியசிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத அரிஸ்டிபஸ் வாயடைத்து நின்றார்.

ஆம், நாம் டயோஜினியசைப் போன்று உண்மையாய் இருந்தால், யாரையும் புகழ்ந்துகொண்டு, அதன்மூலம் பிழைப்பு நடத்தவேண்டிய தேவை இருக்காது. இன்றைய முதல் வாசகம் உண்மைக்கு, அதாவது கடவுளுக்கு மட்டுமே பணிந்து நடந்த ஆமோசைப் பற்றியும், பொய்மைக்கு அதாவதும மன்னனுக்குப் பணிந்து நடந்த அமட்சியா என்ற குருவைப் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. இருவருடைய நிலைப்பாடும் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அரசனுக்குப் பணிந்து நடந்த அமட்சியா

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பெத்தேலில் குருவாக இருந்த குரு அமட்சியா, மன்னன் எரோபவாமிடம், வாளால் அவன் மடிவான் என்றும், மக்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் ஆமோஸ் இறைவாக்கு உரைத்ததாகக் கூறுகின்றான். பின்னர் அவர் இறைவாக்கினர் ஆமோசிடம், நீ இங்கு இருக்காதே, உன்னுடைய சொந்த நாடான யூதாவிற்கு ஓடி, அங்கு போய் இறைவாக்கு உரை என்கின்றார்.

ஆமோஸ் இறைவாக்கினர் சொன்னதை மன்னனிடமும், மன்னன் சொன்னதை ஆமோஸ் இறைவாக்கினரிடம் சொன்னாரே குரு அமட்சியா! இவர் எப்படிப்பட்டவர் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். பெத்தேலில் குருவாக இருந்த அமட்சியா கடவுளால் அருள்பொழிவு செய்யப்படவில்லை. மாறாக, கடவுளால் தான் அருள்பொழிவு செய்யப்பட்டதைப் போன்று காட்டிக்கொண்டு, மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்பாளராக இருந்தார். இன்னும் சொல்லாமல், இவர் தன்னுடைய பிழைப்பை ஓட்டுவதற்காக, மன்னன் தவறு செய்கின்றபொழுது அவனை இடித்துரைக்காமல், அவனுக்கும் மக்களுக்கும் எப்பொழுதும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகளையே சொல்லி வந்தார். இஸ்ரயேல் சமூகத்தில் போலி இறைவாக்கினர்கள் இருந்தார்கள் என்றும் (எசா 1: 12-15; எரே 7: 1-11; எசே 34: 1ff), அவர்கள் மக்களை கடவுளை நோக்கி இட்டுச் செல்லாமல், திசைதிருப்பினார்கள் என்றும் திருவிவிலியத்தில் ஆங்காங்கே வாசிக்கின்றோம். இங்கு வருகின்ற குரு அமட்சியாவும் இந்தப் பட்டியலில்தான் வருவார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆண்டவருக்குப் பணிந்து நடந்த ஆமோஸ்

இறைவாக்கினர் ஆமோசைக் குறித்து, குரு அமட்சியா பழித்துரைக்கும்பொழுது அவரைக் ‘காட்சி காண்பவனே! என்று சொல்வார். உண்மையில் ஆமோஸ் ஆடு மேய்ப்பவராக, காட்டு அத்திமரத் தோட்டக்காரராக இருந்தாலும், மக்களுக்கு இறைவாக்கு உரைக்கவேண்டும் என ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஓர் இறைவாக்கினர். அதனால்தான் வடநாட்டில் பல்வேறு எதிர்ப்புகள் வந்தபொழுதும் ஆமோஸ் அங்கு இறைவாக்கு உரைக்கின்றார். இங்குக் குரு அமட்சியா தன்னைப் பழித்துரைப்பதைக் கேட்கும் இறைவாக்கினர் ஆமோஸ், குரு அமட்சியாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் வரப்போகும் அழிவுகளைக் குறித்துப் பேசுகின்றார்.

ஆம், இறைவாக்கினர் ஆமோஸ் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் பணிந்து நடக்கவில்லை. அதனால்தான் கடவுள் அவரோடு எப்பொழுதும் இருந்தார். இதற்கு மாறாகக் குரு அமட்சியா மன்னனுக்குப் பணிந்து நடந்தார். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொண்டார். நாம் யாருக்குப் பணிந்து நடக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்? மனிதர்களுக்கும் மன்னர்களுக்குமா? அல்லது இவர்களையெல்லாம் விடப் பெரியவரான ஆண்டவருக்கா? சிந்திப்போம்.

சிந்தனை

‘மனிதருக்குக் கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியவேண்டும்” (திப 5: 29) என்பார் பேதுருவும் யோவானும். மனிதர்கள் தரக்கூடிய நிலையற்ற இன்பத்திற்காக அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்காமல், நிலையான இன்பத்தைத் தரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.