ஒன்றிப்பின் அடையாளமாக, இறைவாக்குரை

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவன்று, ஒன்றிப்பு மற்றும் இறைவாக்கு எனும் இரு முக்கிய வார்த்தைகள் குறித்து சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக இத்திருவிழாத் திருப்பலி மறையுரையை துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் பாதுகாவலர்களான புனித பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி, புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படகுகளுக்கும் வலைகளுக்கும் இடையே வாழ்ந்த ஒரு மீனவர், மற்றும், செபக்கூடங்களில் போதித்து வந்த கல்விகற்ற பரிசேயர் பவுல் என்ற வேறுபட்ட இருவரின் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிப்பது, ஒன்றிப்பின் அடையாளமாக உள்ளது என்று கூறினார்.
பேதுரு, யூதர்களுக்கும், பவுல் புறவினத்தாருக்கும் போதித்ததை நாம் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, அவர்களுக்கிடையே முரண்பாடுகளும் வாக்குவாதங்களும் இடம்பெற்றபோதிலும், அவர்கள், ஒருவரையொருவர், சகோதரர்களாக, ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக, முடிவற்ற அன்பினால் வழிநடத்தினார்கள் என்றார்.
திருஅவையின் துவக்ககாலத்தில் ஏரோது, கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தியது, இயேசுவின் சீடரான யாக்கோபுவை கொலைசெய்தது, பேதுருவை சிறையிலடைத்தது போன்றவற்றைக் குறிப்பிடும் இந்நாளின் முதல் வாசகத்தைப்பற்றி கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளையில், திருஅவை, செபத்தில் ஒன்றித்திருந்தது, நம்பிக்கையின் அடையாளமாக, நமக்கிடையே இருக்கும் இடைவெளிகளை அகற்றி நம்மை ஒன்றாக இணைத்து வைக்கும் அடையாளமாக உள்ளது என எடுத்துரைத்தார்.
ஏரோது மன்னரின் தீச்செயல்கள் குறித்தோ, புனித பேதுரு இன்னும் விவேகமுடன் நடந்திருக்கலாம் என்பது குறித்தோ ஆதிகால திருஅவை மக்கள் குறை கூறி தங்கள் நேரத்தைக் கடத்தாமல், செபிப்பதிலேயே ஒன்றித்திருந்தனர் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் செபத்தில் ஒன்றித்திருந்தால், புனித பேதுருவுக்கு நடந்ததுபோல், நம் சிறைக்கதவுகளும் திறக்கப்படும், நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளும் அறுத்தெறியப்படும் என்றார்.
நாம் ஒருவர் ஒருவருக்காக செபிக்க வேண்டும், ஏனெனில், செபம் வழியாகவே நம் சங்கிலிகளை அறுத்தெறியவும்,ஒன்றிப்பை நோக்கிய பாதையை கண்டுகொள்ளவும் இயலும் எனவும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர்களுக்கு வழங்கப்படும் பாலியம் எவ்வாறு ஒன்றிப்பின் அடையாளமாக விளங்குகிறது என்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிப்பை நோக்கிய பாதையில், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை பிரதிநிதிகள், உரோம் நகர் புனிதர்களின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்தும் தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவாக்கு என்பது குறித்தும் தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நான் யார் என நீங்கள் எண்ணுகிறீர்கள்’ என சீடர்களைப் பார்த்து இயேசு கேட்ட கேள்வியையும், ‘சவுலே, சவுலே, என் என்னை துன்புறுத்துகிறாய்’ என பவுலைப் பார்த்து இயேசு கேட்ட கேள்வியையும் முன்வைத்து, புனித பேதுரு எனும் பாறை மீது திருஅவையை கட்ட உள்ளதையும், புனித பவுலை, பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக தன் பெயரை எடுத்துச் செல்ல தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவி என்றும் இயேசு முன்னுரைத்ததையும் சுட்டிக்காட்டினார்.
கடவுளின் வியத்தகு செயல்களுக்கு திறந்தமனம் கொண்டவர்களாக செயல்படுபவர்களே, இறைவாக்கினர்களாக செயல்படமுடியும் என்பதற்கு புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலை எடுத்துக்காட்டுகளாகவும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.