நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 29)

பொதுக்காலம் பதிமூன்றாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 8: 18-22
இயேசுவின் சீடராக இருப்பதற்குக் கொடுக்கவேண்டிய விலை அதிகம்
நிகழ்வு
பொலிவியாவிற்குக் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டுசென்றவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சாரா கோர்சன் (Sarah Corson) மற்றும் அவர்களுடைய தோழர்கள்.
அமெரிக்காவைச் சார்ந்த இவர்கள் கடவுளின் வார்த்தையை பொலிவியாவில் உள்ள மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்கள். அதே நேரத்தில் பொலிவியாவில், கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்கான தடைகளையும் அவர்கள் அறிந்தார்கள். என்ன செய்வது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், சாரா கோர்சன் அவர்களிடம், “பொலிவியாவில் உள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க நம்பிக்கையோடு செல்வோம். ஒருவேளை அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால், மறைச்சாட்சியாக இறந்து இயேசுவுக்குச் சான்று பகர்வோம். இல்லையென்றால், உயிரோடு இருந்து கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்” என்றார். அவர் சொன்ன யோசனை எல்லாருக்கும் சரியெனப் படவே, சாரா கோர்சோன் உட்பட மொத்தம் பதினெட்டுப் பேர் பொலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
1980 களின் தொடக்கத்தில் அவர்கள் பொலியாவில் போய் இறங்கியபொழுது, அங்கிருந்த இராணுவம் இவர்களைத் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது. அப்பொழுது அவர்கள் ஒருமித்த குரலில் இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்கள். இவர்களுடைய வேண்டுதல், கையில் துப்பாக்கியோடு இருந்த இராணுவ வீரர்களுடைய உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் இராணுவ வீரர்கள் அவர்களை எதுவும் செய்யாமல், பொலிவியாவிற்குள் அனுமதித்தார்.
இதற்குப் பின்பு சாரா கோர்சோன் தன்னோடு வந்த பதினேழு தோழர்களோடு சேர்ந்து போலியாவில் கடவுளின் வார்த்தையை மிகுந்த உற்சாகத்தோடு அறிவித்தார். மட்டுமல்லாமல் பொலியாவில் இருந்த வேளாண்குடி மக்களுடைய வாழ்வு சிறக்கவும், அவர்களுடைய வேளாண்மையில் இவர்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தார். (Amazing Stories of Martyrdom and Costly Discipleship – Lesli White)
உயிருக்கு ஆபத்து இருந்தபொழுதும் சாரா கோர்சோனும், அவருடைய தோழர்களும் பொலிவியாவில் கடவுளின் வார்த்தையை அறிவித்து, இயேசுவின் உண்மையான சீடர்களாய்த் திகழ்ந்தது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றிய விளக்கத்தைத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சவால்களைத் தாங்கத் தயாராக இருக்கவேண்டும்
இயேசு மலைப்பொழிவை நிகழ்த்திவிட்டுக் கீழே இறங்கி வருகின்றார்; தொழுநோயாளரையும், நூற்றுவத் தலைவரின் பையனையும், இன்னும் பலரையும் நலப்படுத்துகின்றார். இதனால் பலரும் அவரைப் பின்தொடர்கின்றார்கள். இதைப் பார்த்துவிட்டு, மறைநூல் அறிஞர் ஒருவர், ‘இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றால், தனக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்’ என்ற தவறான எண்ணத்தோடு இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்தொடர்வேன்” என்கின்றார்.
இந்த மறைநூல் அறிஞர், தன்னை எதற்காகப் பின்தொடர்ந்து வருவதாகச் சொல்கின்றார் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால் இயேசு அவரிடம், சீடத்துவ வாழ்வின் இன்னொரு பக்கத்தை, அதாவது சாவல்களும் துன்பங்களும் நிறைந்த பக்கத்தை எடுத்துச் சொல்கின்றார். இயேசு அவரிடம் அப்படிச் சொன்னது அவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அதனாலேயே அவர் இயேசுவைப் பின்தொடராமல் இருந்திருக்கலாம்.
இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்
இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர் எப்படிப்பட்ட சாவலையும் சந்திக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்கூறும் அதே வேளையில், இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர் எல்லாவற்றையும் இழந்து, இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுக்கவேண்டும் என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கின்றது. “முதலில், நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்று சொன்ன மனிதரிடம் இயேசு, “…இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்…” என்று சொல்லும் வார்த்தைகள், எல்லாவற்றையும்விட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.
இயேசுவின் வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், உண்மை என்னவெனில், இயேசுவிடம் வந்த மனிதருடைய தந்தை அப்பொழுது இறக்கவில்லை… அவர் இறந்தபின் அவருக்குச் செய்யவேண்டியதையெல்லாம் செய்துவிட்டு வருவதாக இயேசுவிடம் வந்த மனிதர் சொன்னதால்தான் இயேசு அவரிடம் அப்படிச் சொல்கின்றார். அடுத்ததாக, கடவுளுக்கு நாசீராகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இறந்த உடலைத் தொடக்கூடாது (லேவி 21: 11; எண் 6: 6). இயேசுவிடம் வந்த மனிதர் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட பிறகு இறந்தவர்களை, இறந்த உடலைப் பற்றிக் கவலைத் தேவையில்லை; அவர் கடவுளுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்தால் போதும் என்பதாலும் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
இவ்வாறு இயேசுவின் சீடர் சவாலை எதிர்கொள்ளக்கூடியவராகவும், இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடியவராகவும் இருக்கவேண்டும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் சவால்களை எதிர்கொள்பவர்களாகவும், இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இயேசு ஒருவரை அழைக்கின்றார் எனில், அவர் தனக்காக வந்து இறக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்’ என்பார் தியாட்ரிச் போனஃப்பர். ஆகையால், நாம் இயேசுவின் சீடராக இருப்பதற்குக் கொடுக்கவேண்டிய விலையை உணர்ந்தவர்களாய், அவரில் நிலைத்து நின்று அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.