அடைக்கல மாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உருவிலான் உருவாகி உலகில் ஒரு மகனாவதற்கு உதவிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாயாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது திருமகனின் திருவருளை நாங்கள் அடைவதற்கு வழியாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகம்,உடல் , பேய் என்னும் ஆன்ம பகைவரிடமிருந்து எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மெய் மறையை வெறுப்பவர்களின் இடையூறுகளில் இருந்து எம்மைக் காக்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாய்க்குரிய தனி வணக்கத்தை மறு தலிப்பவர்  வழிகளிலிருந்து  எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது மகனையும் உம்மையும் வேண்டாமென்று தள்ளுவோரையும் தாயன்போடு அழைக்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனுதாபத்துடன் பிள்ளைகளைத் தேடிவரும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அரும்பாவிகளையும் அஞ்சாதே என்றழைத்து இரு கை விரித்து நிற்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உடலின் நோய் போக்கி உள்ளத்தின் அழகை வளர்க்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருக்காவலூர் அடைந்தார் ஒருக்காலும் அழியார் என்ற நம்பிக்கையூட்டும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாழ்வெல்லாம் எம்மைக் காத்து இறுதி நேரத்தில் எமக்கு உறுதுணை தந்து நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக 
எங்கள் அன்புத் தந்தையாகிய இறைவா ! உமது அன்பை எமக்கு அள்ளிக் கொடுக்கவும், பாவிகளை உம்மிடம் அழைத்து வரவும், மரியன்னையைச் சிறந்த வழியாய் அமைத்தீரே! இந்த அன்னையின் அன்பு நிறைந்த அடைக்கலத்தில் நாங்கள் நாளும் நம்பிக்கையுடன் நடந்து நித்திய வீடு வந்து சேரவும் அங்கு உமது புகழ்சேர் புகழைப்பாடவும் அருள் புரிய வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!

ஆமென்.

பாவிகளின் அடைக்கல ஜெபம்.

பரலோக பூலோக இராக்கினியே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ நான் நாலாபக்கமும் துன்பப்பட்டு, அண்ட ஓர் ஆதரவின்றி, மோட்ச நெறியை விட்டு பாவச் சேற்றில் அமிழ்ந்து நிற்கிறேன். சூது கொண்ட பசாசு ஒருபக்கம் என்னை தொந்தரை செய்கிறது. பெரிய பூலோகம் தன் மாயையால் என்னை அலைக்கழிக்கிறது. விஷமேறிய உடலோ என்னை எந்நேரமும் சஞ்சலப்படுத்துகிறது. நான் உமது திருமகனுக்கு என் பாவத்தால் விரோதியானதால் என் இருதயத்தில் பயங்கரமுண்டாயிற்று. இப்படிப்பட்ட வேலையில் நான் எங்கே ஆதரவடைவேன்?

என் பாவக்கொடுமையின் காற்றால்  இழுக்கப்பட்ட  தூசு போலானேன். அரவின் வாய்த் தேரை போலானேன். ஆலைவாய்க் கரும்பு போலானேன். அன்னையில்லாப் பிள்ளை போலானேன். புலியின் கைபட்ட பாலகன் ஆனேன். நான் பாதாளத்தில் ஒளிந்தாலும் அங்கேயும் ஆண்டவர் என் குற்றத்தைக் காண்கிறாரே, பூமியில் எந்த மூலையில் போனாலும் என் பாவம் என்னைத் தொடர்வதால் எனக்குத் திகிலும் கிலேசமும் இன்றி வேறு என்ன உண்டு? இறைவனுடைய நீதிக்குப் பயப்படுகிறேன். நீர் இறைவனுடைய தாயும் மனுக்குலத்திற்கு அரசியுமானதால் உமது அடைக்கலத்தில் ஓடி வந்தேன்.

என் பாவத்துக்காக அழுது வியாகுலப்பட்ட தாயே! என் பேரில் இரங்கி நான் படும் துயரை மாற்றி எனக்காக உம்முடைய திருமகனை மன்றாடும். எனக்கு பூமியும் அதன் செல்வா சுகங்களும் வேண்டாம். மகிமையும் மாட்சிமையும் வேண்டாம். சரீர இன்ப சுகமும், புகை போல் மறையும் பேர் கீர்த்தியும் வேண்டாம். என் ஆண்டவரும், அவர் இராச்சிய பாரமும் எனக்கு அகப்பட்டாலே போதும் அப்பாக்கியத்தை நினைத்து நினைத்து அனலில் விழுந்த புழுப்போல் துடிக்கிறேன். அம்பு தைத்த மான் போல் அலறுகிறேன். காட்டில் இராக்காலத்தில் அகப்பட்ட பிள்ளையைப் போல் திகைத்து நிற்கிறேன்.

நீர் சகல புண்ணியங்களைக் கொண்ட ஆண்டவளுமாய் இரக்கம் நிறைந்த என் தாயுமாகையால் அக்கினி பற்றி வேகும் வீட்டில் அகப்பட்ட பிள்ளைக்கு கை கொடுப்பார் போல் நீர் எனக்கு இத்தருணத்தில் கை கொடும் . கடலில் நீந்தி அமிழ்ந்தித் திரிபவர்க்கு கப்பற்காரர் உதவுமாப்போல் , நீர் எனக்கு இந்த ஆபத்தான வேளையில் உதவ வாரும் . சீக்கிரமாக வாரும். தயையோடும் இரக்கத்தோடும் வாரும் . நான் இறைவனுக்கு ஏற்காத பாதகனென்றாலும் , நான் உம்மை நோக்கி நீட்டிய கை பதறுவதைப் பாரும் . நீர் பாவிகளுக்குத் தஞ்சமென்று எல்லாரும் சொல்லுகிறார்களே ; உம்மை அண்டி ஆதரவடையாமல் போனவர்கள் இல்லையே .

ஆகையால் பாவிகளின் பாவியாகிய என் மேல் இரக்கம் வைத்து என்னையும் ஆதரிக்கச் சீக்கிரமாய் வாரும் . தாமதம் பண்ணாதேயும். வேதம் சொல்லுவதெல்லாம் முழுமனதோடு விசுவசிக்கிறேன். என் நம்பிக்கை எல்லாம் ஆண்டவருக்குப் பின் உமது பேரில் வைக்கிறேன். உமது திருநாட்களை எல்லாம் உத்தம பிரகாரம் அனுசரிக்கிறேன். அற்பப் பாவத்தை முதலாய் கட்டிக் கொள்ள மனதில்லை. எந்நேரமும் உமது திருமகனுமாய் எனது அன்புள்ள இரட்சகருமாய் இருக்கிற இயேசுநாதருக்குப் பிரியப்படுவேனோ என்கிற பயமேயன்றி எனக்கு வேறே பயமில்லை . சுதந்திரத்தாயே! உமது தஞ்சமென்று ஓடி வந்த என்னை தைரியமுள்ளவ(னா)ளாக்கி உலக காரியங்களில் எனக்குப் பெரிய கசப்புண்டாக்கி உல்லாசமான ஆனந்த ஞானக் கடலில் மூழ்க அனுக்கிரகம் பண்ணியருளும்.

ஆமென்.

அடைக்கல மாதா நவநாள் ஜெபம்.

1. அடைக்கல மாதாவே! நீர் உண்மைக் கடவுளை அறிந்து ஆராதித்து உயர்வடைந்தீரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள், உண்மைக் கடவுளான பிதா, சுதன், பரிசுத்த ஆவியை நன்கு அறிந்து அவரை மட்டும் ஆர்வத்துடன் ஆராதித்து அவருக்கு உகந்த மக்களாய் வாழ்ந்து வருவதற்கு உதவி புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.
 
2. உலக மீட்பரை அரிய முறையில் ஈன்றெடுத்து உலகுக்கு அளித்த அடைக்கலத் தாயே, இயேசு மீட்பரால் இந்த உலகம், குறிப்பாக எங்கள் தாய் நாடும் பெற்றுள்ள 1 பெற்று வருகின்ற அளவற்ற நன்மைகளுக்காக நாங்கள் நாள்தோறும் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். எமது சிறிய நன்றியறிதலை நீர் ஏற்று பரமன் திருவடியில் வைக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.
 
3. அமல உற்பவத்தாயே நீர் எக்காலமும் இறைவன் அருளால் நிறைந்திருந்து முக்காலமும் கன்னியாக நிலைத்திருந்து புண்ணிய நறுமணம் கமழும் தாயாக விளங்கினீரே, உமது குழந்தைகளாகிய நாங்கள் பாவத்தில் பிறந்து பாவச் சோதனைகளால் அல்லலுற்று வருகின்றோம் என்பதை தாழ்மையுடன் உணர்கிறோம். எங்கள் கணக்கற்ற பாவங்களை உமது திருமகன் இயேசுதாராள மனதுடன் மன்னிக்குமாறு எமக்காக வேண்டிக் கொள்ளும் படி உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.
 
4 வரங்களை வாரி வழங்கும் அன்னையே , அன்று திருமண வீட்டில் இரசம் இல்லை என்ற குறையை உமது திருமகனிடம் எடுத்துக் கூறி நிறைவு செய்தீரே. அந்த தாயுளத்தோடு இன்று எமது இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்கும் குற்றங் குறைகளை தீர்த்து விடவும் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்றுத் தரவும் விரைந்து வரும் படி உம்மை மன்றாடுகிறோம்
9 அருள். பிதா.
 
5. தாழ்மை நிறைந்த தாயே , உம்மை ஆண்டவரின் அடிமை என அறிவித்து , அவருடைய வார்த்தையின்படி எல்லாம் ஆக வேண்டுமென விரும்பினீரே, நாங்கள் எமது சொந்த உரிமை பேசும் பழக்கத்தை கைவிட்டு ஆண்டவரின் திருச்சித்தத்தை நன்கு அறிந்து அதை முழுவதும் நிறைவேற்றும் கடமையை உணர உதவி செய்யும்படி உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
 
6. சிலுவையடியில் நின்ற வீரம் செறிந்த தாயே , துன்ப துயரம் வந்த போது நாங்கள் இயேசுவின் ஊழியத்தில் தளர்ந்துவிடாமல் பொறுமையும் தாராள மனதும் கொண்டவர்களாய் வாழ வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
 
7. அணைக்கும் அடைக்கலத்தாயே , 18ஆம் நூற்றாண்டில் மெய்மறைக்கு ஏற்பட்ட இடையூறுகளைத் தடுத்து என் முன்னோருக்கு அடைக்கலம் தந்தருளினீரே, இக்காலத்திலும் எமது கத்தோலிக்க வாழ்விற்கு ஏற்படும் இன்னல்களை நாங்கள் வெல்லவும் , பிற மதத்தினவருக்கு நாங்கள் குன்றில் மேலிட்ட விளக்கென ஒளி தந்து விளங்கவும் உதவி செய்யுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
 
8. தவறிய குழந்தையைத் தூக்குவதற்கு விரித்த கைகளுடன் விரைந்து வரும் அன்னையே , பாவிகளாகிய நாங்கள் எவ்வளவுதான் தாழ்ந்து ஊதாரிகலாகிவிட்டாலும் எம்மை அன்போடு வரவேற்று அரவணைக்கும் அன்னை நீர் உண்டு என்னும் உண்மையை எமது உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
 
9. விண்ணுலக வீட்டின் வாயில் எனப்படும் தாயே ! எம்மை இந்தக் கண்ணீர் கணவாயில் காத்தது போல , இறுதி நேரத்தில் ஏற்படும் சோதனைகளில் இருந்தும் எம்மைக்காத்து விண்ணுலக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.
 
செபிப்போமாக.
 
எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமான ஆண்டவரே, உமது அடைக்கலத்தின் வெளி அடையாளமாக மரியன்னையை அமைத்தீரே. அந்த மாபெரும் நன்மைக்கு நன்றி கூறி, அந்த  அன்னையின் அடைக்கலத்தில் அகமகிழ்ந்து வாழ நாங்கள் தாழ்மையோடும் நம்பிக்கையோடும் செய்த இந்த மன்றாட்டுக்களை தயவாய் ஏற்றருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எங்கள் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

Comments are closed.