நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 23)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 7: 6, 12-14
அன்பை விதைத்து, அன்பைப் பெறுவோம்
நிகழ்வு
பதினெட்டாம் நூற்றண்டில், அயர்லாந்து நாட்டில் தோன்றிய மிகப்பெரிய எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (1728-1774). இவர் எழுதிய ‘The Vicar of Wakefield’ என்ற நாவலும், ‘She Stoops to Conquer’ என்ற நாடகமும் மிகவும் பிரபலமானவை. இவர் மருத்துவம் படித்திருந்ததால், மக்களால் அன்போடு ‘மருத்துவர் கோல்ட்ஸ்மித்’ என்றே அழைக்கப்பட்டு வந்தார். மக்கள்மீது, அதிலும் குறிப்பாக ஏழைகள்மீது தனிப்பட்ட அன்புகொண்டிருந்த இவரை அவர்களும் மிகவும் அன்பு செய்தார்கள்.
ஒருநாள் இவர் தன்னுடைய வீட்டில் இருந்தபொழுது, பெண்மணி ஒருவர் இவரைப் பார்க்க வந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தார். அவர் இவரிடம், “ஐயா! என்னுடைய கணவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடக்கின்றார்; எதுவும் சாப்பிடமாட்டேன் என்கிறார். நீங்கள் வந்து பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்றார். உடனே கோல்ட்ஸ்மித், தேவையான மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணியின் பின்னாலேயே சென்றார்.
அந்தப் பெண்மணியின் வீடு ஒரு குடிசை போன்று இருந்தது. அதில் அவருடைய கணவர் படுக்கையில் படுத்துக்கிடந்தார். கோல்ட்ஸ்மித் அவரைப் பார்த்தபொழுது, அவர் உடல் நோயினால் பாதிக்கப்பட்டவர் போன்று தெரியவில்லை; வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாகவே அப்படியிருந்தார் என்பது தெரிந்தது. உடனே கோல்ட்ஸ்மித் அவரிடம், “அம்மா! உங்களுடைய கணவருக்கு என்ன நோய் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அதற்கான மருந்தினை, மாலையில் என்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
மாலையில் கோல்ட்ஸ்மித் சொன்னதுபோன்றே, அந்தப் பெண்மணி அவரைப் பார்க்க வந்தார். வந்தவரிடம் கோல்ட்ஸ்மித் ஒரு சிறிய அட்டைப் பெட்டியை எடுத்துக் கொடுத்து, “அம்மா! இந்த அட்டைப் பெட்டியில் உங்களுடைய கணவருக்கு வேண்டிய மருந்து மாத்திரைகள் இருக்கின்றன. இவற்றைப் பத்திரமாக உங்களுடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றார். அதற்கு அந்த பெண்மணி, “எந்த மாத்திரையை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே” என்றதும், கோல்ட்ஸ்மித் அவரிடம், “அதையெல்லாம் விவரமாக ஒரு தாளில் எழுதி, உள்ளே வைத்திருக்கின்றேன். நீங்கள் உங்களுடைய வீட்டிற்குப் போய்த் திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
பின்னர் அந்தப் பெண்மணி கோல்ட்ஸ்மித் தன்னிடம் கொடுத்த அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்த் திறந்து பார்த்தார். அவர் அட்டையைப் பெட்டியைத் திறந்து பார்த்த மறுவினாடி, அதிர்ந்துபோனார். காரணம் அதற்குள் அவருடைய வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருள்களும், நிறையப் பணமும் இருந்தன. கூடவே, ஒரு தாள் இருந்தது. அதில் ‘இந்தப் பெட்டியில் உள்ள மருந்தை (பணத்தைத்) தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்துப்பார்த்த அந்தப் பெண்மணி கோல்ட்ஸ்மித்தை நினைத்து உள்ளம் பூரித்துப்போனார். உண்மையில், கோல்ட்ஸ்மித் தன்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் அந்த ஏழைக் குடும்பத்தின் நல்வாழ்விற்காகக் கொடுத்திருந்தார்.
மருத்துவர் கோல்ட்ஸ்மித் இதுபோன்ற அன்புச் செயல்களைச் செய்ததாலோ என்னவோ, மக்கள் அவரை மிகவும் அன்பு செய்தார்கள். ஆம், நாம் மற்றவரிடமிருந்து அன்பைப் பெறுவதற்கு முதலில் நாம் அன்பை விதைக்கவேண்டும். அதைத்தான் கோல்ட்ஸ்மித்தின் வாழ்க்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பைப் பெற, அன்பைத் தருவோம்
நற்செய்தியில் இயேசு, ‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்’ என்ற பொன்விதியைத் தருகின்றார். இது ஏன் பொதிவிதி என அழைக்கப்படுகின்றது எனில், இறைவாக்கு மற்றும் திருச்சட்டத்தின் சாரம் இதுதான். அதனாலேயே இது பொன்விதி என அழைக்கப்படுகின்றது.
இயேசுவின் காலத்திற்கு முன்பு வரை, இக்கட்டளை அல்லது இவ்விதி, ‘பிறர் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று விரும்புகிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்யாதீர்கள்’ என்று எதிர்மறையாக இருந்தது. இயேசுவோ அதை நேர்மறையாக மாற்றி, மற்றவர் உங்களை அன்பு செய்யவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் அவர்களை அன்பு செய்யுங்கள் என்று கூறுகின்றார்.
இயேசு சொல்வது போல், மற்றவருடைய அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற, நாம் முதலில் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் தரத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘வாழ்க்கையில் தலைசிறந்த இன்பம், அன்பு’ என்பார் சர். வில்லியம் டெம்பிள் என்ற அறிஞர். ஆகையால், நாம் நமக்கு இன்பத்தையும், எல்லாவிதமான நலன்களையும் தரும் அன்பை ஒருவர் மற்றவரிடம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.