ஜுன் 23 : நற்செய்தி வாசகம்

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.
ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
சிந்தனை
சிலவற்றை கண்டு பிடிப்பது என்பது பலருக்கு இயலாததாகின்றது.
ஒவ்வொரு வார்த்தைக்கும், சட்டத்திற்கும் அர்த்தங்கள் பலவுண்டு. அவற்றை கண்டறிவது என்பது இயலாததாகின்றது. சிலர் மட்டுமே கண்டறிந்து கொள்கின்றனர்.
இதற்கு ஞானம் வேண்டும். இந்த ஞானத்தை அருள்பவர் இறைவனே. ஞானத்தோடு இவற்றை அறிந்து கொள்பவர்களே வாழ்வை கை கொள்வார்கள்.
மறையுரைச் சிந்தனை (ஜூன் 23)
பொன்விதி
ஒருமுறை நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகளைப் பார்க்க பிரபல ஆயூர்வேத மருத்துவர் ஒருவர் வந்திருந்தார். வந்தவர் காந்தியடிகளிடம் ஆயுர்வேத மருந்தின் சிறப்புகளையும், அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறினார்.
உடனே காந்தியடிகள், “இந்த மருந்தின் மூலம் மனிதருக்கு உண்டாகும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர், ஓ! சிறப்பாகக் குணப்படுத்தலாமே” என்றார். அதற்கு காந்தியடிகள் அவரிடம், “அப்படியானால் தீண்டாமை என்ற நோயினைக் குணப்படுத்த முடியுமா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த ஆயுர்வேத மருத்துவர் வாயடைத்து நின்றார்.
மனிதருக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தீண்டாமை என்னும் கொடியநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதது மிகவும் கசப்பான உண்மையாகும். இன்றைக்கு மனிதர்கள் இனத்தின் பெயரால், குலத்தின் பெயரில் (சாதியின் பெயரில்) பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் மதிக்காமல், அடித்துக்கொண்டு அழிந்துபோகும் நிலைதான் தொடர்கின்றது. இத்தகைய பின்னணில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுத்தரும் போதனை மிகவும் பொருத்தமானதாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருக்கின்றது.
நற்செய்தியில் இயேசு, “பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும், திருச்சட்டமும் கூறுவது இதுவே” என்கிறார். அதாவது பிறரால் மதிக்கப்பட வேண்டும், அன்பு செய்யப்படவேண்டும், அக்கறைகாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் நாம், அதையே பிறருக்குச் செய்யவேண்டும் என்று ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துக்கிறார்.
இங்கே வேதனை என்னவென்று பார்க்கும்போது மற்றவர் நம்மீது அன்புசெலுத்தவேண்டும், மற்றவர் நம்மை கவனித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நாம் பிறர்மீது அன்புசெலுத்தமாட்டோம். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறை இறைவனுக்கு உகந்ததாகாது.
விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான். ஏனெனில் வாழ்வைப் பற்றிய ஒரே விதி அன்பு மட்டுமே” என்று. இது உண்மை. நாம் அன்புமயமாக இருக்கும்போது வாழ்வை, எல்லா ஆசிரையும் கொடையாகப் பெறுகின்றோம்.
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டுவந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.
அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன. அவன் மன்னனிடம், “அரசே! உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் கோவிலில் பொங்கல் படைத்தேன். அந்தப் உணவை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். கடவுளுக்குப் படைத்த உணவைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான். அவன் உணவை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, உணவைப் ஏற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன உணவிற்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த உணவை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து இரண்டு நாட்கள் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.

Comments are closed.