ஜுன் 22 : நற்செய்தி வாசகம்

முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————-
மறையுரைச் சிந்தனை (ஜூன் 22)
தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு ஆளாகமாட்டீர்கள்
பிரபல நாவலாசிரியரான கில்பர்ட் பிராங்கு (Gilbert Frankau) என்பவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லும் நிகழ்வு
கில்பர்டின் தாயாரோ ஓர் இசைக் குழுவை தன்னுடைய இல்லத்தில் நடத்தி வந்தார். அவருடைய இசைக் குழுவில் பாடுவதற்காக நிறையப் பாடகர்கள் ஆசைப்பட்டார்கள். ஏனென்றால், அவருடைய இசைக்குழுவில் பாடி நிறையப் பேர் பிரபலமடைந்திருந்தர்கள். அதனடிப்படையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அவருடைய இசைக்குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார். முதன்முறையாக அந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்த இளம்பெண்ணின் குரலைக் கேட்ட கில்பர்டின் தாய் அவரை திட்டித் தீர்த்துவிட்டார், “உன்னுடைய குரலே சரியில்லை, நீயெல்லாம் பாடல் பாடுவதற்குப் பதில் வேறு ஏதாவது தொழில் செய்யலாம்” என்று அவரை எவ்வளவு திட்டமுடியுமோ அவ்வளவு திட்டத் தீர்த்தார்.
வருடங்கள் பல உருண்டோடின. ஒருநாள் கில்பர்டின் தாயானவர் பத்திரிக்கையை படித்துக் கொண்டிருக்கும்போது அதில் வந்த ஒரு செய்தியைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். ஏனென்றால் அதில், யார் பாடுவதற்கே இலாயக்கில்லை என்று அவர் ஒதுக்கி வைத்தாரோ, அவர் உலகின் முன்னணிப் பாடகராக உயர்ந்து நின்றார். அவர் வேறு யாரும் கிடையாது நெல்லி மெல்பா (Nellie Melbe) என்பவரே ஆவார்.
இவர் இப்படித்தான், இவர் ஒன்றுக்கும் உதவமாட்டார் என்று தீர்ப்பிட நாம் யார் என்பதனை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்” என்கிறார். இயேசு எதற்காக தீர்ப்பளிக்காதீர்கள் என்று சொல்கிறார் என்பதற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு தீர்ப்பு அளிக்காதீர்கள் என்று சொல்லும்போது அதில் மூன்று முக்கிய உண்மைகள் அடங்கி இருக்கின்றன. அதில் முதலாவது: இந்த உலகத்தில் யாரும் யாரைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதாகும். நம்மைப் பற்றி நமக்கே முழுமையாகத் தெரியாத பட்சத்தில், நாம் அடுத்தவரைக் குறித்து இவர் இப்படித்தான், இவர் மோசமானவர், பாவி என்று தீர்ப்பிட நாம் யார்?. இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாக அறிந்திருப்பவர் கடவுள் ஒருவரே. ஆகவே, கடவுளுக்கு மட்டும்தான் தீர்ப்பளிக்கின்ற அதிகாரம் இருக்கின்றதே ஒழிய, வேறு யாருக்கும் கிடையாது என்ற உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இயேசு எதற்காக தீர்ப்பளிக்கக்கூடாது என்று சொல்வதற்குப் பின்னால் இருக்கின்ற இரண்டாவது உண்மை: நம்முடைய தீர்ப்பிடலில் ஒரு தலைச்சார்பு இருக்கும் என்பதாகும். எடுத்துக்காட்டாக ஒருவன் தன்னுடைய நண்பனுக்கோ அல்லது தெரிந்தவருக்கோ தீர்ப்பளிப்பதற்கும் எதிரிக்குத் தீர்ப்பளிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நண்பரோ அல்லது தெரிந்தவரோ என்றால் அவருக்குத் தண்டனை குறைவாகவே இருக்கும். ஆனால், எதிரி என்றால் நாம் கொடுக்கின்ற தண்டனை மிகுதியாக இருக்கும். இப்படி ஒருதலை பட்சமாக நாம் செயல்படுவதால் நாம் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர் என்கிறார் இயேசு கிறிஸ்து.
தீர்ப்பளிக்கக்கூடாது என்று இயேசு சொல்வதில் இருக்கின்ற மூன்றாவது உண்மை. தீர்பளிக்கின்ற அளவுக்கு நாம் ஒன்றும் நல்லவர்கள் இல்லை என்பதாகும். இந்த உலகில் பிறந்த நாம் யாவரும் பாவிகள், குற்றவாளிகள், தவறிழைக்கக் கூடியவர்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் பிறரைத் தீர்ப்பிடுவது எந்த விதத்தில் நியாயம். ஆண்டவர் அப்படியில்லை. அவர் நல்லவர் (மத் 19:17); நன்மையே உருவானவர். அவருக்குத்தான் தீர்பளிக்கின்ற எல்லா அதிகாரம் இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்துகொள்கின்ற யாரும் அடுத்தவரைப் பற்றி தவறாகத் தீர்ப்பளிக்கமாட்டார்கள்.
இன்றைக்கு குடும்பத்தில் சரி, நாம் வாழுகின்ற சமூகத்திலும் சரி ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாகத் தீர்ப்பிட்டுக் கொண்டே இருக்கின்றோம். இத்தகைய தீர்ப்பிடுகின்ற போக்கினால் நம்முடைய உறவுகள்தான் சிதைந்து போகின்றது. ஒருவர் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய ஒருவரிடம்; தன்னைப் பற்றி தவறாகத் தீர்ப்பிட்டவரிடம் எப்படிப் பேசுவார் என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

Comments are closed.