இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜுன் 17.

திருஇருதயம் சிறந்த இறை பணிக்கு மாதிரிகை.
சேசுவின் திருஇருதயமானது தன் வாழ்நாளெல்லாம் சிறந்த இறைப்பணிக்கு மாதிரிகையாயிருந்தது. திவ்விய சேசு தமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி அவரை நோக்கி வேண்டிக்கொள்வதிலும், அவருக்குப் பணி செய்து அவரை மகிமைப்படுத்துவதிலும், எவ்வளவு ஞான ஆவல் காண்பித்தார்! புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை எப்படியோ, அப்படியே சனிக்கிழமைப் பழைய ஏற்பாட்டின் காலத்தில் அனுசரிப்பது கடமை. நசரேத்து வீட்டில் இந்த ஒய்வுநாளைப் பிரமாணிக்கமாய் அனுசரித்து வந்தார்கள். தவிரவும் குறிக்கப்பட்ட நாட்களில் பரிசுத்த மரியன்னை, அர்ச்.சூசையப்பரோடு திவ்விய சேசு தமது பிதாவுக்கு ஆராதனை செலுத்தும்படி ஜெபக்கூடத்துக்கு அல்லது தேவாலயத்துக்குப் போவார். தாமே தேவ வார்த்தையும் நித்திய ஞானமுமாயிருந்தாலும், தேவ கற்பனைகளின் விளக்கத்துக்கு மிக கவனத்தோடும் மிக மரியாதையோடும் காது கொடுப்பார்.
புனிதர்களும், குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்களும், சேசுக்கிறிஸ்துவின் திவ்விய மாதிரிகையைத் தங்களாலானவரையில் பின்பற்ற பிரயாசப்படுகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒறுத்தல் முயற்சி செய்து தங்களைத்தானே ஜெயித்து ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். திவ்விய இரட்சகருக்கு விருப்பப்படவும், அவரோடுகூட மோட்ச பாக்கியத்தை அனுபவிக்கவுமே தங்கள் ஞானக்காரியங்களை எல்லாம் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி, தேவ ஊழியத்தில் உத்தமமாய் நடந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கடுத்த தேவ ஊழியமானது கடவுளுடைய கற்பனை, திருச்சபையின் கட்டளையைப் பிரமாணிக்கமாய் கடைபிடிப் பதிலும், நமது தேவ இரட்சகர் மட்டிலும், நமது அயலார் மட்டிலும், நமது விஷயமாயும், நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சரியாய் நிறைவேற்றுவதிலுந்தான் அடங்கியிருக்கிறது. பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1யோவான் 3 : 18) என்ற யோவானுடைய சிறந்த வார்த்தைகளை நிறைவேற்றுவதில்தான் தேவஊழியம் அடங்கியிருக்கிறது.
ஒவ்வொருவரும் விசேஷித்தவிதமாய் அநுசரிக்க வேண்டியதேதென்றால், சர்வேசுரன் மட்டில் உண்மையான பக்திப் பற்றுதலைக் காண்பித்து தங்கள் தகுதிக்கு தேவையான புண்ணியங்களைச் சம்பாதிப்பதுதான். சில கிறிஸ்தவர்களிருக்கிறார்கள் – அவர்களுக்கு சில செபங்கள் சொல்லத் தெரியுமேயொழிய மற்றப்படி நல்ல கிறிஸ்தவர்களாய் வாழத் தெரியாது. ஏனென்றால் அவர்களிடத்தில் புண்ணியமென்பது கிடையாது; தங்கள் அந்தஸ்தின் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில்லை; தங்கள் அதிகாரத்துக் குட்பட்டவர்கள் ஒழுங்காய் வாழ்கிறார்களாவென்று கவனிப்பதுமில்லை; தாங்கள் செய்யவேண்டிய நன்மையைச் செய்வதுமில்லை.
உண்மையும் உத்தமுமான தேவ இறை பணிக்கு விசுவாசமும், சுய பரித்தியாகமுமே அஸ்திவாரம். சுய ஒறுத்தலும் நிறைந்த வாழ்வு வாழவும், சிலுவையில் உயிர்விடவும் திவ்விய சேசு எந்த கருத்து தூண்டி ஏவினதோ அந்த எண்ணத்தோடு வாழ்கிறவர் உத்தமமான தேவ ஊழியர்கள். இவர்களைத் தமது உண்மையான சீடர்களென்று சேசுகிறிஸ்துநாதர் ஏற்றுக்கொள்ளுகிறார். உண்மையான இறைபணி வார்த்தைகளிலும், வீண் ஆசைகளிலுமல்ல, செயல்களிலும், சுய செபத்திலும், ஒறுத்தலிலுமே அடங்கியிருக்கிறது.
நம்மைப் பின்பற்றப் பிரியப்படுகிறவன் எவனும் தன்னை மறுதலித்துத் தன் சிலுவையைச் சுமந்து கொண்டு நம்மைப் பின்பற்றட்டும் (மத் 16:24) என்று சேசுகிறிஸ்துநாதர் திருவுளம்பற்றுகிறார்.
இந்த வார்த்தைகள் விசுவாசத்தில் உறுதியில்லாதவர்களுக்கும், தேவ ஊழியத்திலும் திரு இருதய அன்பிலும் பலவீனர்களுமாகிய சில கிறிஸ்தவர்களுக்குப் பயத்தை உண்டாக்கலாம். ஆனால் அவர்கள் திரு இருதயத்தை தங்களுக்கு உதவியாகக் கூப்பிடுவார்களேயாகில், ஆண்டவருடைய வரப்பிரசாதம் அவர்களைப் பலப்படுத்தும். தங்களைத்தானே ஜெயிக்கக் கற்றுக்கொள்வார்கள். புனிதர்களின் தாராள குணத்தைப் பின்பற்றுவார்கள். உத்தம தேவ ஊழியத்தால் மோட்ச பாக்கியத்தைச் சுதந்தரித்துக் கொண்ட நம்மைப்போல் பலவீனருமாய் நமது சுபாவத்தையுடையவர்களுமாய் இருந்தார்கள். சிலருக்கு நம்முடைய வயதுதான், நம்முடைய அந்தஸ்துதான். நமக்கு வரும் சோதனைகளும் இடையூறுகளும் அவர்களுக்கும் வந்தன. ஆனால் அருட்கொடைகளுக்கு பிரமாணிக்கராய் நடந்து, தங்கள் சுபாவத்தோடு இடைவிடாமல் போராடி, தேவ ஊழியத்தில் நிலைத்திருந்து, தங்கள் முயற்சியாலும் சுய தியாகத்தாலும் சம்பாதித்த மோட்சபாக்கியத்தை இப்போது அனுபவிக்கிறார்கள்.
அர்ச். மார்கரீத் மரியம்மாள் இவ்விஷயத்தில் சொல்வதாவது: தேவ ஊழியத்தில் தளராத விடாமுயற்சியும், மீட்பு அலுவலில் பின்வாங்காத தைரியமும் நம்மிடத்திலிருக்க வேண்டும். கடைசிவரையில் நிலைத்திருந்து ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தான் மோட்சமுடி கிடைக்கும். இத்தகைய ஜெயசீலர்களில் நாமும் ஒருவராயிருக்க வேண்டிக்கொள்வோமாக!
ஒவ்வொருவரிடத்திலும் தான் விசேஷவிதமாய்ப் போராட வேண்டிய ஒரு முக்கியமான துர்க்குணமுண்டு. சிலரிடத்தில் அது ஆங்காரமாயிருக்கலாம். வேறு சிலரிடத்தில் அது மோகமாயிருக்கலாம். இன்னும் சிலரிடத்திலே அது வேறு துர்க்குணமாயிருக்கலாம். உனக்கு மிகவும் விருப்பமான இந்த விசேஷ துர்க்குணம் துவக்கத்தில் அவ்வளவு கனமானதாயும் ஆபத்துள்ளதாயும் தோன்றாதிருக்கும். எவ்வித சிந்தனை, வாக்கு, செயல்களுக்கு இடங்கொடுப்பதும், நினைத்த புத்தகத்தை வாசிப்பதும், அவ்வளவு தவறில்லையென்று நீ நினைப்பாய். இவ்வகை தகாத யோசனைகளெல்லாம் சாத்தானிடமிருந்துதான் வருகிறது. நீ ஆரம்பத்திலேதானே இந்தத் தீய நாட்டங்களை ஜெயிக்காமல் இருப்பாயேயாகில் உன் ஆத்தும ஈடேற்றத்தை தடை பண்ணலாமென்று சாத்தானுக்கு நன்றாய்த் தெரியும். இந்த பாவநாட்டம் சிறிது சிறிதாய் வளர்ந்து உன்னிடம் முழுதும் குடி கொண்டால், சோதனை வரும்போது நீ கட்டாயம் சாவான பாவத்தில் விழுவாய் என்பதை சாத்தான் அறிந்திருக்கிறது. இந்த நரகப்பேய் உன்னுடைய விசுவாசத்தையும், புத்தியையும் தடுமாறும்படி செய்து, உன்னை ஆபத்தான நிலையில் நிலைநிறுத்த தன்னாலியன்ற முயற்சி செய்யும்.
நாம் எதிர்த்துப் போராடாத ஒரே ஒரு பாவநாட்டம் நம்மை நித்திய கேட்டுக்கு உள்ளாக்குமென்பதை மறந்து போகக்கூடாது. யூதாசிடம் பண ஆசை குடிகொண்டிருந்தது. இந்த ஒரே ஆசைப்பற்றுதல் அவனை எந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டதென்று யாவரும் அறிவோம். இன்னும் எத்தனையோ பேர் தாங்கள் ஜெயிக்காமல் விட்ட ஒரே ஒரு துர்க்குணத்தால் நித்தியத்துக்கும் அழிவடைந்தார்கள்.
நம்முடைய விசுவாசக்குறைவும், தேவ ஊழியத்தில் நம்மிடத்திலுள்ள பலவீனமுமே சாத்தானோடும் பாவ பாசங்களோடும் தாராள குணத்தோடு நாம் எதிர்த்துப் போராட நமக்குப் பெரிய தடையாயிருக்கிறது. உலக விஷயங்களில் நாம் காண்பிக்கிற விடாமுயற்சியும், தைரிய சுறுசுறுப்பும், தேவ ஊழியத்திலும் நாம் காண்பிக்கும்படி கடவுள் அருள்புரிவாராக. ஒரு வேலையை விரும்பி, அல்லது செல்வ மகிமையைத் தேடி சில கிறிஸ்தவர்கள் இராப்பகலாய் அதே ஞாபகமாயிருப்பார்கள். தாங்கள் விரும்புகிற காரியத்தில் வெற்றி அடையும் வரையிலும் தங்களாலான பிரயாசப்பட்டு மிகப்பெரிய துயரங்களையும், கஷ்ட நஷ்டங்களையும் முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்கள்.
திரு இருதயப் பக்தர்களோவென்றால் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் தாராள குணமுமுள்ளவர்களாய் நடக்கும்படி கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களையெல்லாம் அநுசரித்து, தங்கள் கடமைகளையெல்லாம் உத்தம் விதமாய் நிறைவேற்றி சேசுவின் திரு இருதயத்தின் சித்தப்படி தாங்களிருக்கிற நிலையில் தங்களை புனிதப்படுத்த தினமும் தங்கள் தீர்மானங்களைப் புதுப்பிக்க வேண்டும்

Comments are closed.