நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 09)

பொதுக்காலம் பத்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை

மத்தேயு 5: 13-16

“நீங்கள் உலகிற்கு விளக்காய் இருக்கின்றீர்கள்”

நிகழ்வு

அமலன் தன்னுடைய நண்பன் கதிரவனின் வீட்டிற்குச் சென்றிருந்தான். கதிரவனோ கண்பார்வை இல்லாத ஒரு மாற்றுத் திறனாளி. அமலன் கதிரவனுடைய வீட்டிற்குள் வந்ததும், கதிரவன் அவனிடம், “நண்பா! நீ இங்கேயே இரு. நான் உனக்கு தேநீர் தயாரித்துக் கொண்டு வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

கதிரவன் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அமலன் அவன் பின்னாலேயே சென்றான். தன் நண்பன் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அறிந்த கதிரவன் உடனே அந்த அறையில் இருந்த மின்விளக்கை ஏற்றினான். அதைப் பார்த்ததும் அமலன் கதிரவனிடம், “நண்பா! உனக்குத்தான் பார்வை கிடையாது! நீ மின்விளக்கை ஏற்றவேண்டிய அவசியமே இல்லை! பிறகு எதற்கு இப்பொழுது மின்விளக்கை ஏற்றினாய்?” என்றான்.

அதற்குக் கதிரவன் அமலனிடம், “இப்பொழுது நான் விளகேற்றியது எனக்காக அல்ல, நீ இருட்டில் இடறி விழுந்துவிடக்கூடாது என உனக்காக” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு கதிரவன் அமலனிடம், தொடர்ந்து பேசினான்: “மற்றவர்களுக்குத் தேவைப்பட்ட போதும், உனக்குத் தேவையில்லை என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை முறை நீ விளக்கை அணைந்திருக்கின்றாய்?” அமலனால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆம், நாம் பிறருக்கு, இவ்வுலகிற்கு விளக்காக இருப்பதற்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தபொழுதும், அந்த வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு, நீங்கள் உலகிற்கு ஒளியாய் – விளக்காய் – இருக்கிறீர்கள் என்கின்றார். நாம் இந்த உலகிற்கு ஒளியாக, விளக்காக இருப்பது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவார்த்தையை விளக்கு

நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய ஒளியாய் இருங்கள் என்பதை நம்முடைய சிந்தனைக்காக ‘விளக்காய் இருங்கள்’ என்று எடுத்துக்கொள்வோம். ‘விளக்கு’ என்பதற்குத் தமிழில் விளக்கம் தருதல் (Explain), கசடுகளை விளக்குதல் (Clean) விளக்கேற்றுதல் (Light) என்று மூன்றுவிதமான பொருள்கள் இருக்கின்றன. இந்த மூன்றுவிதமான பொருள்களையும் இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் தனித்தனியாக நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முதலில் ‘விளக்கம் தருதல்’ என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இறைவார்த்தையைக் கற்றறிந்திருக்கின்ற ஒவ்வொருவரும் அவ்வார்த்தையை அறியாத, விளங்காத மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டும். இது நம்முடைய தலையாக கடமை. ஏனென்றால், பலருக்கும், திருத்தூதர் பணிகள்நூல் எட்டாம் அதிகாரத்தில் வருகின்ற எத்தியோப்பிய நிதியமைச்சரைப் போன்று இறைவார்த்தை விளங்காமலேயே இருக்கின்றது (திப 8:31) இப்படிப்பட்ட சூழலில் நாம் அவர்களுக்கு இறைவார்த்தையை விளக்கி, அதன்மூலம் நாம் உலகிற்கு விளக்காக, ஒளியாக இருப்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.

உலகில் உள்ள தீமையை வி(ல)ளக்கு

விளக்கு என்பதற்கு இருக்கும் இரண்டாவது பொருள் ஒன்றைத் தூய்மைப்படுத்துவதாகும். பொதுவாக நம்முடைய பேச்சு வழக்கில், பாத்திரத்தை விளக்கு, பல்லை விளக்கு என்று சொல்வோம். இதையே நாம் நம்முடைய ஆன்மிக வாழ்வோடு பொருத்திப் பார்க்கின்றபொழுது, நம்மிடம் இருக்கின்ற பாவத்தை, தீமை வி(ல)ளக்குதல் என்று சொல்லலாம். நற்செய்தியில்கூட இயேசு, “மனம்மாறி (தீமையை வி(ல)ளக்கி, நற்செய்தியை நம்புங்கள்” (மாற் 1: 15) என்றுதான் சொல்கின்றார். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற தீமைகளை வி(ல)ளக்கி, நன்மைகளைச் செய்வதன் வழியாக உலகிற்கு விளக்காக இருக்க முடியும்.

வாழ்வில் விளக்கேற்றுதல்

விளக்கு எதற்கு இருக்கும் மூன்றாவது பொருள், ஒருவர் இன்னொருவருடைய வாழ்விற்கு அர்த்தத்தைத் தருவதாகும். பொதுவாக ஒருவர் நம்முடைய வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும்பொழுது அவரை நாம், ‘இவர் என்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்’ அல்லது ‘விளக்கேற்றி வைத்தார்’ என்று சொல்கிறோம். அப்படி என்றால் நாம் பிறருடைய வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகின்றபொழுது அல்லது பிறருடைய வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும்பொழுது நாம் விளக்காக, ஒளியாக இருக்கின்றோம் என்பதே பொருள். இயேசுவும் தன்னுடைய வாழ்வால் உலகிற்கு ஒளியாக இருந்தார். நாமும் நம்முடைய வாழ்வால் பிறருடைய வாழ்விற்கு அர்த்தம் தருகின்றபொழுது, நாம் உலகிற்கு ஒளியாகின்றோம்.

இதில் இன்னொரு முக்கியமான செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு விளக்கு எரிவதற்கு எண்ணெய், திரி, தீ என்ற மூன்று பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த மூன்றையும் எண்ணெய்+திரி+தீ என்று சேர்த்துச் சொன்னால், என்னைத் திருத்தி என்று வரும். ஆம், நாம் முதலில் நம்மைத் திருத்திக்கொண்டு, இறைவார்த்தைக்கு விளக்கம் கொடுத்து, இவ்வுலகில் உள்ள தீமை என்ற இருளை வி(ல)ளக்கி, வாழ்ந்தோம் எனில், நாம் உலகிற்கு விளக்காக, ஒளியாக மாறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சிந்தனை

‘இருளிலிருந்து ஒளி தோன்றுக என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசத் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே’ (2 கொரி 4: 6) என்பார் புனித பவுல். ஆகவே, நம்முடைய உள்ளங்களில் அறிவொளியை வீசச் செய்த கடவுளின் அருள்துணையோடு உலகிற்கு ஒளியாக, விளக்காக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.