நற்செய்தி வாசக மறையுரை (மே 29)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 21: 15-19
பேதுருவை மீண்டுமாக அழைக்கும் இயேசு
நிகழ்வு
அது ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் நுழைவாயிலில் ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கீழ்காணும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன: “இத்தனை நாள்களும் உங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர், இன்று அதிகாலையில் திடீரென இறந்துவிட்டார். அவருக்குக் இறுதி அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தயதுசெய்து, அதில் கலந்துகொள்ளுங்கள்.”
இந்த வார்த்தைகளைப் படித்துப் பார்த்துவிட்டு, அந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த பணியாளர்கள், ‘யாராக இருக்கும்…?’ என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்; அதுகுறித்து விவாதிக்கவும் தொடங்கினார்கள். இதில் ஒருசிலர், ‘நல்லவேளை நம்முடைய வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவன் ஒளிந்துவிட்டான்’ என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
நிறுவனத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள் அனைவரும் வந்ததும், இறந்து போனவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் தொடங்கி, ஒருவர் பின் ஒருவராக இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவிட்டு வந்தனர். அப்படி அஞ்சலி செலுத்துவிட்டு வந்தவர்களுடைய முகத்தில் அதிர்ச்சி குடிகொண்டிருந்தது. காரணம், சவப் பெட்டியில் இறந்தவருடைய உடலுக்குப் பதிலாக பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடியின் ஓரத்தில், ‘உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக, உங்களைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டுத்தான் எல்லாரும் அதிர்ச்சியோடு இருந்தார்கள்.
எல்லாரும் அஞ்சலி செலுத்துவிட்டுத் தங்களுடைய இருக்கையில் அமர்ந்த பிறகு, அந்த நிறுவனத்தின் தலைவர் பேசத் தொடங்கினார்: “இந்த இறுதி அஞ்சலிக் கூட்டம் வித்தியாசமாக இருக்கலாம்; ஆனாலும் உங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக உங்களைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்ற உண்மையை உணர்த்துவதற்காகவே, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால், உங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக உங்களிடம் இருக்கின்ற தளர்ச்சி, சோர்வு மனப்பான்மை, வெறுப்பு, கசப்புணர்வு… ஆகியவற்றை உங்களிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய மனிதர்களாக வாழுங்கள்” என்றார் நிறுவனத்தின் தலைவர். அவர் சொன்னது போன்றே, ஒவ்வொரு பணியாளரும் தங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய மனிதர்களாக மாறி, புத்துணர்ச்சியோடு பணிசெய்யத் தொடங்கினார்கள். இதனால் அந்த நிறுவனம் முன்பைவிடப் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டது.
இந்த நிகழ்வில் வருகின்ற நிறுவனத்தின் தலைவர் எப்படித் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களைப் புதிய மனிதர்களாக வாழ அழைத்தாரோ, அப்படி இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை புதிய மனிதராக வாழ அழைக்கின்றார். இயேசு, தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை மீண்டுமாக அழைத்தது நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
‘யோவானின் மகன் சீமோனே; என்று பேதுருவை மறுபடியும் அழைக்கும் இயேசு
திருத்தூதர்களில் தலைமைத் திருத்தூதராக இருந்த பேதுரு, ஆண்டவர் இயேசுவை மும்முறை மறுதலித்தார். இதற்காக அவர் மனம்வருந்திக் மனம் உடைந்து அழுதார் (மாற் 14: 72). ஆனாலும், பேதுரு தன்னுடைய குற்றத்தை இயேசுவிடம் அறிக்கையிடுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்காமலே இருந்தது. உயிர்த்த ஆண்டவர் பேதுருவுக்குத் தனியாகத் தோன்றியதாக லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிட்டிருந்தாலும் (லூக் 24: 24), அங்கு பேதுரு தன்னுடைய குற்றத்தை அறிக்கையிடுகின்ற சூழல் இல்லாமலேயே போய்விடுகின்றது. இப்படிப்பட்ட சூழலில்தான் உயிர்த்த இயேசுவே, பேதுரு தன்னுடைய குற்றத்தை உணர்ந்து அறிக்கையிடுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருகின்றார்; அவரைப் புதிய மனிதராக வாழ அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு பேதுருவிடம் பேசுகின்றபொழுது, “யோவானின் மகன் சீமோனே!’ என்றுதான் பேசத் தொடங்குகின்றார். இது இயேசு பேதுருவை முதன்முறை அழைத்ததை நமக்கு நினைவு படுத்துகின்றது (யோவா 1: 42) இவ்வாறு இயேசு, தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை, அவருடைய பெயரைச் சொல்லி, மீண்டுமாகத் தன்னுடைய அழைக்கின்றார்.
மன்னிப்பின் அடையாளமாக தன் ஆடுகளை மேய்ச்சச் சொன்ன இயேசு
பேதுரு, இயேசுவை மும்முறை மறுதலித்தார். எனவே, அதனை மன்னிக்கும் பொருட்டு இயேசு அவரிடம், “நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகின்றாயா?” என்று கேட்கின்றார். அவரும் ஆம் என்கின்றார். இயேசு பேதுருவிடம், ‘இவர்களைவிட’ என்று கேட்டதற்குக் காரணம், பேதுரு இயேசுவிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போனாலும், நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்” (மத் 26: 33) “உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” (யோவா 13: 37) என்றும் சொல்லியிருதந்தார். அதனால்தான் இயேசு பேதுருவிடம் அப்படிக் கேட்கின்றார்.
இயேசு இவ்வாறு மும்முறை கேட்டதும், “எல்லாம் உமக்குத் தெரியுமே!” என்கின்றார் பேதுரு. அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர்’ என்று சொல்லிவிட்டு, அவர் எப்படித் தனக்காக உயிரைக் கொடுப்பார் என்பதை முன்னறிவிக்கின்றார். இயேசு, பேதுரு எப்படி இறப்பார் என்பது பற்றிச் சொன்னது போன்றே, அவர் நீரோ மன்னனின் காலத்தில் (கி.பி 65-67) இறக்கின்றார். இவ்வாறு இரண்டாம் முறையாக அழைக்கப்பட்ட பேதுரு ஆண்டவர் இயேசுவுக்காக உயிரைத் தந்து, அவருக்குச் சான்று பகர்கின்றார்.
பேதுருவை இயேசு இரண்டாம் முறையாக அழைத்தது, கடவுள் நமக்கு மீண்டுமாக வாய்ப்புத் தருகின்றார்; அவர் முதன்முறை நாம் தோல்வியுற்றதும் அப்படியே நம்மை விட்டுவிடுவதில்லை என்ற செய்தியை நமக்கு மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் கடவுள் நமக்குத் தருகின்ற இன்னொரு வாய்ப்பினையும் நல்லவிதமாய்ப் பயன்படுத்தி, அவருக்குச் சிறந்த விதமாய்ச் சான்று பகர்வோம்.

Comments are closed.