நற்செய்திக்கு சான்று பகர்தலை உள்ளடக்கிய மீட்பின் செய்தி

சிறப்பிக்கப்பட்ட, இயேசுவின் விண்ணேற்ற விழா குறித்த தன் சிந்தனைகளை, ஞாயிறு நண்பகல் அல்லேலுயா வாழ்த்தொலி உரையில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (மத். 28:16-20),  இயேசு தங்களுக்குப் பணித்தபடியே, சீடர்கள், கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றதைக் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் வாழ்வில், மலைப்பகுதி, ஒரு முக்கிய இடத்தை வகித்தது, ஏனெனில், அவர் செபிக்கச் சென்றது, மக்களைக் குணப்படுத்தியது, தன் போதனைகளை வழங்கியது என்ற பல செயல்பாடுகளில் மலையின் முக்கியத்துவத்தைக் காண்கிறோம் என்றார்.

இங்கு நாம் சீடர்களோடு, இயேசுவை, ஒரு போதகராக, அரும்பெரும் செயல்புரிபவராகக் காணவில்லை, மாறாக, தன் செயல்பாடுகளை தொடர்ந்து ஆற்றும்படி தன் சீடர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பவராகக் காண்கிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்’, என தன் சீடர்களிடம் கூறும் இயேசு, நற்செய்தி அறிவித்தல், திருமுழுக்கு வழங்குதல், கற்பித்தல், தன் பாதையில் அவர்கள் நடத்தல், அதாவது, நற்செய்தியை வாழ்தல் என்பவைகளைச் சுட்டிக்காட்டுகிறார், என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மீட்பின் செய்தி என்பது, நற்செய்திக்குச் சான்று பகரவேண்டிய கடமையை உள்ளடக்கியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இவ்வாறு சான்று பகரும் வாழ்வில் நாம் நடைபோடும்போது, நாம் அஞ்சத் தேவையில்லை, ஏனெனில், உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற இயேசுவின் உறுதி நம்முடன் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன் என உறுதி வழங்கிய இயேசு, தூய ஆவியார், திருஅவையை வழி நடத்துவதன் வழியாகவும், அவர் வார்த்தைகள், அருளடையாளங்கள் வழியாக, தொடர்ந்து நம்முடன் இருந்தவண்ணம் உள்ளன என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் துணையை வேண்டி, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவு செய்தார்.

Comments are closed.