இரக்கத்தையும் நீதியையும் ஒன்றிணைத்த 2ம் ஜான் பால்

புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் 100ம் ஆண்டு நிறைவு மே 18ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அப்புனிதத் திருத்தந்தை, புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை 7 மணிக்கு, சிறப்புத் திருப்பலியொன்றை  நிறைவேற்றினார்.

இத்திருப்பலியின் பதிலுரைப்பாடல் பல்லவியில் கூறப்பட்டுள்ள “ஆண்டவர் தம் மக்கள் மீது அன்பு கொள்கின்றார்” என்ற சொற்களுடன் தன் மறையுரையைத் துவக்கியத் திருத்தந்தை, இறைவன் தன்மக்கள் மீது கொண்டிருந்த அன்பால், இத்திருத்தந்தையை திருஅவைக்கு வழங்கினார் என்றும், இத்திருத்தந்தையோ, செபத்தின் மீதும், இறைமக்கள் மீதும், நீதியின் மீதும் அன்புகொண்டவராகச் செயல்பட்டார் என்றும் கூறினார்.

செபம், அருகாமை, சமுதாய நீதியும் இரக்கமும் 

ஓர் ஆயரின் முதல் பணி,  செபம் என்பதை முழுமையாக உணர்ந்திருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அதிக நேரத்தை செபத்தில் செலவிட்டார் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்க விரும்பிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தன்  மந்தைகளை தேடிச் சென்றார் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தன் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதுபோல் ஒவ்வொரு மேய்ப்பரும் தன் மக்களோடு நெருங்கியிருக்க வேண்டும் என்பதை, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தன் வாழ்வில் உணர்ந்து, செயல்பட்டார், ஏனெனில், மக்களுக்கு நெருக்கமாக இல்லாத ஒரு மேய்ப்பர் வெறும் நிர்வாகியாக மட்டுமே செயல்படுவார் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

நமக்கு பக்கத்தில் இருப்போருடனும், தூரத்தில் இருப்போருடனும் நாம் நெருக்கமாக செயல்படவேண்டும் என்பதை வாழ்வில் எடுத்துக்காட்டிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், நீதியின் மனிதராகவும் செயல்பட்டார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.