நற்செய்தி வாசக மறையுரை (மே 18)
பாஸ்கா காலம் ஆறாம் வாரம் திங்கட்கிழமை
யோவான் 15: 26- 16: 4
“…நீங்களும் சான்று பகர்வீரர்கள்”
நிகழ்வு
1985 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 9 ஆம் நாள், பல்கேரியாவில் கிறிஸ்டோ குலேக்சப் (Christo Kuleczef) என்றொரு மறைப்பணியாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். காரணம் கிறிஸ்துவைப் பற்றிய மக்களுக்கு அறிவித்தார் என்பதால்.
சிறையில் அடைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்ட பின்பு இவர் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டு, வெளியே வந்தபிறகு கிறிஸ்டோ குலேக்சப் என்ற அந்த மறைப்பணியாளர் இப்படிச் சொன்னார்: “மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றி நற்செய்தியை அறிவித்தேன் என்பதற்காக என்னைச் சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைக்கப்பட்ட பின்பும் நான் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தவறியதில்லை; அங்கிருந்த சிறைக் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தேன். இவ்வாறு நான் வெளியே இருந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததால், அவர்மீது நம்பிக்கை கொண்ட மக்களின் எண்ணிக்கை விடவும், உள்ளே இருந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததால், அவர்மீது நம்பிக்கை கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகம்.” (Spreading Power through Persecution – John Piper).
பல்வேறு இடர்பாடுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நடுவில், கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து, அவருக்குச் சான்று பகர்ந்து வந்த கிறிஸ்டோ குலக்சப் என்ற அந்த மறைப்பணியாளர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் இயேசு, தன்னுடைய சீடர்கள் தன்னைக் குறித்துச் சான்று பகர்கின்றபொழுது, எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் சந்திப்பார்கள்கள் என்றும் அப்பொழுது தூய ஆவியாரின் துணை அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதையும் எடுத்துக் கூறுகின்றார். அவற்றைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தொழுகைக்கூடங்களிலிருந்து விலக்கி வைப்பர்
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசு தன்னுடைய சீடர்கள் தன்னைக் குறித்துச் சான்று பகர்வார்கள் என்பதையும், அப்படிச் சான்று பகரும்பொழுது அவர்கள் எத்தகைய இடர்பாடுகளைச் சந்திப்பார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றார்.
சீடர்கள் சந்திக்க இருக்கின்ற முதல் சவாலாக இயேசு சொல்வது, ‘தொழுகைக்கூடத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள்’ என்பதாகும். இயேசு இவ்வாறு சொல்வதற்கு முக்கியமான காரணம், ‘இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்கின்ற யாரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கவேண்டும்’ என்று யூதர்கள் தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால்தான் இயேசு இவ்வாறு சொல்கின்றார். சீடர்கள் சந்திக்க இருக்கின்ற இரண்டாவது சவாலாக இயேசு சொல்வது, சீடர்களைக் கொல்வதைக்கூட கடவுளின் திருப்பணி என எண்ணுவர் என்பதாகும். இதைப் பவுலின் தொடக்க கால வாழ்வோடு பொருத்திப் பார்க்கலாம் (திப 9: 1-3). பவுல் கிறிஸ்துவர்களைக் கொன்றொழிப்பதைக் கடவுளுக்குச் செய்யும் திருப்பணி என்று நினைத்தே செய்தார். அப்படியிருக்கையில்தான் அவர் இயேசுவால் தடுத்தாட் கொல்லப்பட்டார்.
இப்படிப் பல்வேறு இடர்பாடுகளையும் சவால்களையும் தன்னுடைய சீடர்கள் தனக்குச் சான்றுபகரும்பொழுது, எதிர்கொள்ள வேண்டும் என்பதை இயேசு முன்கூட்டியே சொல்கின்றார்.
தூய ஆவியாரின் துணையிருப்பு
தன்னுடைய சீடர்கள் தன்னைப் பற்றிச் சான்று பகரும்பொழுது, பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க நேரிட்டாலும், தூய ஆவியாரின் துணை அவர்களுக்கு எப்பொழுது உண்டு என்பதை இயேசு இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் கூறுகின்றார். இயேசு தூய ஆவியரைக் குறித்துக் குறிப்பிடும்பொழுது ‘துணையாளர்’ என்கின்றார். துணையாளர் என்பதற்கு ஆலோசகர், உடனிருப்பவர், ஊக்கமூட்டுபவர், உறுதிப்படுத்துபவர் போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன. ஆம், நாம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்கின்றபொழுது, அவர் நம்மைத் தனியே விட்டுவிடுவதில்லை. தூய ஆவியாரின் வழியாக நமக்குத் துணை இருக்கின்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த, World Evangelical Encyclopedia என்ற நூலில் உள்ள புள்ளி விவரம் இது: கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இதுவரைக்கும் நான்கு கோடியே, முப்பது இலட்சம் கிறிஸ்தவர்கள் மதத்தின் பெயரில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; இதில் ஐம்பது விழுக்காட்டினர், கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இதைவிடவும் அதிர்ச்சியூட்டும் செய்தி, இருபது கோடிக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் துன்புறுத்தப்படுகின்றார்கள்; முன்னூறு பேர் ஒவ்வொருநாளும் கொல்லப்படுகின்றார்கள். இதில் அறுபது விழுக்காட்டினர் குழந்தைகள்.
Comments are closed.