மே 8 : நற்செய்தி வாசகம்

வழியும் உண்மையும் வாழ்வும் நானே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.”
தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————–
யோவான் 14: 1-6
கலங்காதே! கடவுளிடம் நம்பிக்கை கொள்!
நிகழ்வு
மலையடிவாரத்தில் இருந்த ஆசிரமத்தில் துறவி ஒருவர் இருந்தார். இவருக்குப் பெயரே ‘மகிழ்ச்சியான துறவி’. இவர் எப்பொழுதும் சிறு குழந்தையைப் போன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இவரைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் இவரிடம் இருந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அந்தளவுக்கு இவர் மகிழ்ச்சியாக இருந்தார். இதனால் இவரைப் பார்த்து, ஆலோசனை கேட்பதற்குப் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் வந்து போனார்கள்.
இது ஒருபக்கம் இருக்கையில், இவருக்கு வயது ஏறிக்கொண்டே சென்றது. இதனால் இவருடைய சீடர்கள், ‘இன்னும் கொஞ்ச நாள்தான் துறவி நம்மோடு இருப்பார்; அதன்பிறகு துறவி நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்’ என்று வருத்தம் கொள்ளத் தொடங்கினார்கள். இப்படி இருக்கையில் துறவிக்குத் தொண்ணூற்று ஒன்பதாவது பிறந்தநாள் வந்தது. இதைத் தொடர்ந்து துறவியின் சீடர்கள், ‘அடுத்த பிறந்த நாளுக்குத் துறவி நம்மோடு இருப்பாரோ, இருக்கமாட்டாரோ தெரியவில்லை; அதனால் துறவியின் இந்தப் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம்’ என்று முடிவுசெய்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
துறவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. சீடர்களில் ஒரு பிரிவினர், துறவியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்ற மனநிலையோடு மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். இன்னொரு பிரிவினர், ‘நம்முடைய துறவி நம்மை விட்டு வெகு விரைவில் பிரிந்துவிடுவார்’ என்று கலக்கத்தோடு இருந்தார்கள். இவ்வளவுக்கு நடுவிலும் துறவி சிரித்த முகத்தோடு இருந்தார்.
அப்பொழுது மிகவும் கலக்கத்தோடு இருந்த சீடர் ஒருவர் எழுந்து, “குருவே! நீங்கள் உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்கு உயிரோடு இருப்பீர்களோ இருக்கமாட்டீர்களோ என்ற கவலையோடு நாங்கள் இருக்கின்றோம்; ஆனாலும் உங்களால் மட்டும் எப்படி, இந்த நேரத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது” என்று கேட்டார். அதற்குத் துறவி அவர்களிடம், “என்னுடைய இளம்வயதில் நான் எல்லாரையும் போன்று எதற்கெடுத்தாலும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான், ‘மகிழ்ச்சியாக இருப்பதும் வருத்தத்தோடு இருப்பதும் நம்மைப் பொருத்துதானே அன்றி, அடுத்ததைப் பொருத்து அல்ல’ என்று எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. இதற்குப் பின்பு நான் ஒவ்வொரு நாள் காலையிலும், ‘இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாயா? வருத்தத்தோடு இருக்கப் போகிறாரா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். வருத்தத்தோடு இருப்பதை விடவும் மகிழ்ச்சியாக இருப்பதே உடலுக்கு நல்லது என்று முடிவுசெய்து, இத்தனை நாள்களும் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதன் மறைபொருளைச் சொன்னார்.
ஆம், நாம் மகிழ்ச்சியாக இருப்பதும் வருத்தத்தோடு இருப்பதும் நம்மைப் பொருத்ததே! இந்த வாழ்வின் மறைபொருளை உணர்ந்துகொண்டால், நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நற்செய்தியில் இயேசு தன்னுடைய தன்னுடைய சீடர்களிடம், “நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் நம்பிக்கை கொண்டிருப்போர் கலங்கத் தேவையில்லை
‘இன்னும் சிறிது காலமே நான் உங்களோடு இருப்பேன்’ (யோவா 13: 33) என்று இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொல்ல, அவர்கள் கலக்கமுறுகின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்கின்றார்.
உண்மையில் சீடர்கள்தான் இயேசுவிடம், கலங்கவேண்டாம் என்று சொல்லி அவரைத் தேற்றியிருக்கவேண்டும். ஏனெனில், அவர்தான் பாடுகள் பட்டு, சிலுவைச் சாவை அடைய இருந்தார். இப்படி இருக்கையில், இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு தன் சீடர்களிடம், நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம் என்று சொல்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்கள், கடவுளிடம் என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சொல்வது, “நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்” (எசா 28: 16) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
தந்தையிடம் செல்வதற்கான வழி நமக்குத் தெரிவதால் கலங்கத் தேவையில்லை
இயேசு தன்னுடைய சீடர்களிடம், உள்ளம் கலங்கவேண்டாம் என்று சொல்வதற்கு இன்னொரு காரணம், சீடர்களுக்கு, அவர் போகும் வழி தெரியும் என்பதால் ஆகும். இயேசுவே வழியாக இருக்கின்றார் என்பது, அவர் தோமாவிற்குக் கூறுகின்ற பதிலிலிருந்து நமக்கு தெரிந்தாலும், இயேசு தந்தைக் கடவுளிடம் செல்வதற்கான வழியைத் தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் காட்டிவிட்டார்.
இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் நல்ல ‘வழி’காட்டி இல்லாததால் அவர்கள் வாழ்க்கையில் இடறி விழுந்து கிடக்கின்றார்கள்; ஆனால், இயேசு உண்மையான வழியாக இருந்து, தந்தையிடம் செல்வதற்கான வழியை நமக்குக் காட்டி இருக்கின்றார். ஆகையால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டவர்களாய்க் கலக்கமில்லாமல் வாழ்வோம்.
சிந்தனை
‘என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ரயலே, கலங்காதே’ (எரே 30: 10) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நமக்கு அருகில் இருந்து, ஆறுதல் அளிக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு உள்ளம் கலங்காதிருப்போம்; இறைவனுக்குகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.