முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்

அப்பம் பலுகிய புதுமையால் கவரப்பட்ட மக்கள் தன்னைத் தேடிவந்தபோது, அவர்களுடன் இயேசு நடத்திய உரையாடலை மையமாக வைத்து, மறையுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, மாறாக, மனுமகன் வழங்கும் முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள், என இயேசு, நற்செய்தியில் (யோவான்  6:22-29) கூறியுள்ளதை தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

வாழ்வளிக்கும் உணவைப்பெற என்னச் செய்யவேண்டும் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, இறைத்தந்தையால் அனுப்பப்பட்டவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல் எனக்கூறியதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பாதை தவறி சென்று கொண்டிருந்த அம்மக்களை சரியான பாதையில் கொணர இயேசு விரும்பியதுபோல் நம் வாழ்விலும் விரும்புகிறார் என்று கூறினார்.

நற்செய்தி நமக்கு தந்த முதல் ஆர்வ உணர்வு காலப்போக்கில் தடம் மாறிப்போவதைக் காண்கிறோம் என்றுரைத்தத் திருத்தந்தை, அந்த முதல் சந்திப்பிற்கு நம்மை இயேசு கொணர்வதே இறைவனின் அருள் எனக் கூறினார்.

இயேசுவின் வார்த்தைகளாலும், குணமாக்கும் புதுமைகளாலும் கவரப்பட்ட மக்கள் இவர் நம்மை உரோமையப் பிடிகளிலிருந்து விடுவிப்பார் என அவரை அரசராக்க முதலில் விரும்பினர், அதேவேளை, அவர் வழங்கிய உணவால் கவரப்பட்டு, தங்களுக்கு உணவை வழங்கும் நல்ல ஆட்சியாளராக இயேசு இருப்பார் என உலகப்போக்குகளிலேயே சிந்தித்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தத்தை பிரான்சிஸ்.

நாமும் இயேசுவைப் பின்தொடர ஆரம்பித்து, நற்செய்தி மதிப்பீடுகளின் வழியாக சென்றுகொண்டிருக்கும்போது, சில வேளைகளில் ஏனைய விடயங்களால் கவரப்பட்டு உலகம் சார்ந்த விடயங்களில் மனதை இழப்பது மட்டுமல்ல, நாம் முதன்முதலில் இயேசுவை சந்தித்தபோது நாம் பெற்ற ஆர்வத்தையும் மறந்துவிடுகிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு நாம் திரும்பி வருவதற்கு உதவும் இறைவனின் அருளை இறைஞ்சி நிற்போம் என தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

இயேசு உயிர்த்த நாளில், கலிலேயாவுக்குச் செல்லும்படி அவரின் சீடர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பைப் பற்றியும் தன் மறையுரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசு தன் சீடர்களை முதன்முதலில் சந்தித்தது கலிலேயா என்பதையும் சுட்டிக்காட்டி, நமக்குள்ளும் இயேசுவுடன் முதல் சந்திப்பு இடம்பெற்ற கலிலேயா என்ற ஓரிடம் உள்ளது என கூறினார்.

Comments are closed.