நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 24)

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 6: 1-15
உங்களிடம் இருப்பதைக் கடவுளிடம் கொடுங்கள்; கடவுள் அதன்வழியாக வல்ல செயல் செய்வார்
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பெண்ணை உயிருக்குயிராய்க் காதலித்தான்; அவளையே மணம்முடிக்கவும் அவன் முடிவுசெய்தான். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. அது என்னவெனில், அந்த இளைஞன் காதலித்து வந்த பெண்ணின் தந்தை ஒரு குறிப்பிட்ட தொகையோடு வந்தால்தான், தன்னுடைய மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்லியிருந்தார். இதனால் அவன் பணத்திற்கு என்ன செய்வது குழம்பினான்.
அப்பொழுது அவனுக்கு ஓவியம் வரைந்து, நல்ல நிலையில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பனிடம் கேட்டலாம் என்ற எண்ணம் தோன்ற அவனிடத்தில் சென்றான். அவன் தன்னுடைய நண்பனிடத்தில் சென்ற நேரம், அவன் ஒரு பிச்சைக்காரனை ஓவியமாக வரைந்துகொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும், அவன் வந்த காரணத்தைக் கேட்டபொழுது, இவன் எல்லாவற்றையும் அவனிடம் எடுத்துச் சொன்னான். இதற்கு நடுவில், ஓவியனை பார்க்க யாரோ ஒருவர் வர, அவன் அவரோடு வெளியே சென்றான். இளைஞன் அங்கே நின்றுகொண்டிருந்த பிச்சைக்காரனைப் பார்த்தான். அவன் பார்ப்பதற்குப் பரிதாப இருப்பதைக் கண்டு, அவன்மேல் பரிவுகொண்டு, அவனுக்கு ஏதாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவுசெய்து, தன்னுடைய சட்டைப் பையில் இருந்த பத்து ரூபாயை எடுத்து அவனுக்குக் கொடுத்தான். பின்னர் அவன், வெளியே சென்ற தன்னுடைய நண்பன் வரக் காலம் தாழ்த்தவே, தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டான்.
மறுநாள் காலையில், இளைஞனைப் பார்க்க ஓர் ஆடம்பரமான நான்கு சக்கர வண்டியில் பெரியவர் ஒருவர் வந்தார். அவர் இளைஞனிடத்தில் ஒரு கவரையும் பணமுடிப்பையும் கொடுத்தார். வியப்பு மேலிட, அந்தப் பெரியவர் கொடுத்த கவரைத் திறந்துபார்த்துப் படிக்கத் தொடங்கிய இளைஞன், இன்னும் வியந்துபோனான். ஆம், அங்கு வந்திருந்தது, முந்தைய நாளில் பிச்சைக்காரனைப் போன்று இருந்த மனிதர்தான். அவர் ஓவியரிடம் தன்னை ஒரு பிச்சைக்காரராக வரையவேண்டும் என்று கேட்டிருந்தார். உண்மையில் அவர் நகரில் இருந்த பெரிய பணக்காரர். இப்படிப்பட்ட சூழலில்தான் இளைஞன் அந்த மனிதரைப் பிச்சைக்காரன் என நினைத்து, அவருக்குப் பத்து ரூபாய் கொடுத்தான். அதற்குக் கைம்மாறாக அவர் அவனுடைய திருமணத்திற்குப் பெருந்தொகையைக் கொடுத்தார்.
ஒருவினாடி நடப்பது கனவா? நனவா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து, “நீ என்மீது பரிவுகொண்டு, உன்னிடத்தில் இருந்ததை எனக்குக் கொடுத்தாய். அதனால்தான் நான் உன்மீது பரிவுகொண்டு என்னிடத்தில் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு, அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஆம், நாம் நம்மிடம் இருப்பதை பிறரிடமும் கடவுளிடமும் கொடுக்கையில், கடவுள் அதைகொண்டு அதிசயத்தை நிகழ்த்தி காட்டுவார். நற்செய்தியில் சிறுவன் ஒருவன் தன்னிடம் இருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆண்டவர் இயேசுவிடம் கொடுக்க, ஆண்டவர் இயேசு அவற்றைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். இயேசு இந்த அருஞ்செயல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மிடம் இருப்பதைக் கொடுக்க முன்வருவோம்
நற்செய்தியில், இயேசு தன்னுடைய போதனையைக் கேட்கவும் தன்னிடமிருந்து நலம்பெறவும் வந்த மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு உணவளிக்க முடிவுசெய்கின்றார். அதனால், அவர் பிலிப்பிடம், “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். இப்படியொரு கேள்வியை பிலிப்பிடம் கேட்கும் இயேசு, தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதித்துப் பார்க்கவே பார்க்கின்றார். எப்படி ஆபிரகாமின் நம்பிக்கையை ஆண்டவர் சோதித்துப் பார்க்க, அவருடைய மகன் ஈசாக்கைப் பலிகொடுக்கச் சொன்னாரோ, அப்படி இயேசு தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும், பிளிப்பைச் சோதித்துப் பார்க்க இக்கேள்வியைப் கேட்கின்றார். இதற்குப் பிலிப்பு சரியான பதிலைச் சொல்லாதபொழுது, எப்பொழுதும் மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகப்படுத்தும் அந்திரேயா, சிறுவன் ஒருவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருப்பதைச் சொல்லி, அவற்றைச் சிறுவனிடமிருந்து வாங்கி இயேசுவிடம் கொடுக்கின்றார்.
குறைந்தவற்றைக் கொண்டு பலுகச் செய்யும் இயேசு
இயேசு தன்னிடம் கொடுக்கப்பட்ட ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை மக்களுக்குக் கொடுக்கின்றார். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேர் உண்கின்றார்கள். ஆம், ஒன்றுமில்லாமையிலிருந்தே உலகைப் படைத்த கடவுள், நாம் அவரிடம் கொடுப்பது மிகச் சிறிதாக இருந்தாலும், அதைக் கொண்டு, அவர் பலுகிப் பெருகச் செய்வார். அப்படியானால், நாம் நம்மிடம் இருப்பதை, நற்செய்தியில் வருகின்ற சிறுவன் கொடுக்க முன்வந்ததைப் போன்று கொடுக்க முன்வரவேண்டும். அப்பொழுது இயேசுவின் அருஞ்செயல் அங்கு நடைபெறும் .
நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்கும் கடவுளுக்கும் கொடுக்க முன்வருகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்’ (லூக் 6: 38) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதைக் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறைவன் நம் வழியாக அற்புதங்களைச் செய்ய அனுமதிப்போம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.