நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 23)
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை
யோவான் 3: 31-36
இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கைக்குப் பரிசு, நிலைவாழ்வு
நிகழ்வு
சீனாவிற்கு ஆண்டவருடைய நற்செய்தியைக் கொண்டுசென்றவர்களில் முன்னோடியாகக் கருதப்படுகின்றவர் ஹட்சன் டெய்லர் (Hutson Taylor 1832- 1905).
இவர் சீனாவிற்குச் செல்லும்பொழுது, காற்றுவீசும் திசைநோக்கிச் செல்லும் பாய்மரக் கப்பலில் பயணம் செய்தார். கப்பல் தெற்கு மலாய்த் தீபகற்பத்திற்கும் சுமத்ராத் தீவுகளுக்கும் இடையில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, காற்று வீசுவது நின்றுபோனது. இதனால் கப்பலை ஓட்டிச் சென்ற மாலுமிகள் செய்வதறியாது திகைத்தார்கள். ஏனென்றால், சுமத்ரா தீவுகளில் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர் பலர் இருந்தனர். இதனால்தான் கப்பலை ஓட்டிச் சென்ற மாலுமிகள் அஞ்சினார்கள்.
செய்தி கப்பலில் இருந்த தளபதிக்குத் தெரியவந்ததும், அவர் இன்னும் அஞ்சினார். அப்பொழுது யாரோ ஒருவர் அவரிடம், கப்பலில் மறைப்பணியாளர் ஒருவர் இருக்கின்ற செய்தியையும் அவர் கடவுளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் என்ற செய்தியையும் அவரிடம் கேட்டால், அவர் இறைவனிடத்தில் நம்பிக்கையோடு வேண்டி, காற்று வீசுவதற்கு ஏதாவது வழிசெய்வார் என்ற செய்தியையும் சொன்னார்.
உடனே கப்பல் தளபதி ஹட்சன் டெய்லர் இருந்த அறைக் கதவைத் தட்டி, நிலைமையை எடுத்துச் சொல்லி, “நீங்கள் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர் என்பதைக் கேள்விப்பட்டேன். நாம் இருப்பதோ ஆபத்தான பகுதி, இங்கிருந்து நாம் தப்பிச் செல்லவேண்டும் என்றால், காற்றுவீசவேண்டும் என்று கடவுளிடம் வேண்டவேண்டும். நீங்கள் காற்றுவீசவேண்டும் என்று கடவுளிடம் வேண்டினீர்கள் என்றால், நிச்சயம் கடவுள் காற்றுவீசச் செய்வார். அந்த நம்பிக்கை எனக்கிருக்கின்றது” என்றார். அதற்கு ஹட்சன் டெய்லர், “காற்று வீசுவதற்குக் கடவுளிடம் நான் வேண்டுகின்றேன். ஆனால், நீங்கள் மாலுமிகளிடம் கப்பலைத் தொடர்ந்து இயக்கச் சொல்லவேண்டும்” என்றார். “காற்று இல்லாத நேரத்தில் கப்பலை இயக்கச் சொன்னால், அவர்கள் என்னை முட்டாள் என்று சொல்வார்களே” என்று தளபதி சொன்னதற்கு, ஹட்சன் டெய்லர் அவரிடம், “நான் சொல்வதற்கு போல் செய்யுங்கள்” என்று சொல்லி, தன்னுடைய அறையைத் தாழிட்டுவிட்டு, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்.
நாற்பத்து ஐந்து வினாடிகளுக்குப் பிறகு ஹட்சன் டெய்லர் இருந்த அறையின் கதவு தட்டப்பட்டது. அவர் எழுந்துசென்று கதவைத் திறந்து பார்த்தபொழுது கப்பல் தளபதி நின்றுகொண்டிருந்தார். அவர் ஹட்சன் டெய்லரிடம், “ஐயா! உங்களுடைய வேண்டுதலை இறைவன் கேட்டுவிட்டார்; கடலில் காற்று வீசத் தொடங்கி, கப்பல் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. நன்றி” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
ஹட்சன் டெய்லர் கடவுளிடம் நம்பிக்கையோடு வேண்டியதால், அவர் பயணம் செய்த கப்பலில் இருந்த எல்லாரும் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர். நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டினால், இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், இறைவனிடமிருந்து ஆசியைப் பெற்றுக்கொள்வது உறுதி. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணிலிருந்து வந்த இயேசு
நிக்கதேமிடம் தொடர்ந்து பேசுகின்ற இயேசு, மேலும் ஒருசில உண்மைகளை பேசுகின்றார். அவற்றில் இரண்டு உண்மைகளை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இயேசு நிக்கதேமிடம் மானிடமகன் மேலிருந்து வந்தவர் என்று கூறுகின்றார். அப்படிப்பட்டவருக்கு கடவுள் தூய ஆவியாரின் கொடைகளை அளவின்றிக் கொடுத்திருக்கின்றார் என்றும் அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்திருக்கின்றார் என்றும் கூறுகின்றார். தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்ற இயேசு, எங்கும் நன்மை செய்து (திப 10: 38) தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணிகளை நிறைவேற்றினார் (யோவா 17: 1-44); ஆனால், மக்கள்தான் அவர்மீது நம்பிக்கை கொள்ளவிலை. தன்மீது நம்பிக்கை கொள்வோர் பெறுகின்ற ஆசியையும் நம்பிக்கை கொள்ளாதவர் பெறுகின்ற தண்டனையையும் இயேசு அடுத்ததாகச் சொல்கின்றார். அதைக் குறித்துத் தொடர்ந்து சிந்திப்போம்.
நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு
தந்தைக் கடவுள் தன்னிடம் அனைத்தையும் ஒப்படைத்ததாகச் சொல்லும் இயேசு, தன்னிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்று சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தை இணைச்சட்ட நூல் 30: 15-20 இல் வருகின்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. இப்பகுதியில் நமக்கு முன்பாக நன்மை, தீமை என்ற இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் நாம் எதைத் தேர்ந்தேடுக்கின்றோமோ, அதற்கேற்றாற்போல் நம்முடைய வாழ்க்கை இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
ஆம், இயேசுவிடம் நம்பிக்கை கொண்டால் நிலைவாழ்வு, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் தண்டனை. இதில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். சிந்திப்போம்.
சிந்தனை
‘அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது’ (யோவா 1: 4) என்பார் புனித யோவான். ஆகையால், நமக்கு நிலைவாழ்வைத் தரும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.