கொள்ளை நோய் தடுப்பு முயற்சியில் ஐ.நா.வுடன் MECC

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் அச்சுறுத்தலில், மனித மாண்பு மற்றும், உலகளாவிய அமைதி காக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களுடன், செபம் மற்றும், செயல்திட்டம் வழியாக ஒத்துழைக்க விரும்புவதாக, மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ அவை ஒன்று அறிவித்துள்ளது.

உலகில், குறிப்பாக, கிறிஸ்து உயிர்ப்பு, மற்றும், இரமதான் விழாக் காலங்களில், கோவிட்-19 அவசரகால நெருக்கடி நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில், அனைத்து மதத் தலைவர்களும், உலகத் தலைவர்களும் ஒன்றாகக் கரம்கோர்க்க வேண்டுமென்று கூட்டேரஸ் அவர்கள் விடுத்த அழைப்பை நன்றியுடன் வரவேற்றுள்ளது, மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகள் அவை (MECC).

ஒருமைப்பாட்டின் பாலங்களை எழுப்புவோம்

கூட்டேரஸ் அவர்கள் விடுத்திருந்த அழைப்பிற்குப் பதில் மடல் அனுப்பிய, அந்த அவையின் பொதுச் செயலர் Souraya Bechealany அவர்கள், சவால் நிறைந்த இந்த நேரத்தில், மனிதர்களையும், அவர்களின் மாண்பையும் பாதுகாப்பதற்கு, ஒருமைப்பாட்டின் பாலங்களைக் கட்டியெழுப்புவதும், ஒத்துழைப்பின் வளர்ச்சித் திட்டங்களும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதியை கட்டியெழுப்புதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட ஐ.நா.வின் பொதுவான விழுமியங்களை, MECC அவை எப்போதும் பகிர்ந்துகொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள Bechealany அவர்கள், கடும் வறுமையிலும், போர் இடம்பெறும் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஐ.நா. நிறுவனம் ஆற்றிவரும் பல்வேறு நற்பணிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்துவை, கடவுளாகவும், மீட்பராகவும் நம்புகின்ற, மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, கடவுளின் மகிமைக்காக, பொதுவான இலக்கை அடைவதற்குத் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து வருகிறது என்றும், Bechealany அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவலை எதிர்த்துப் போராடவும், அதன் கடும்விளைவுகளின் மத்தியில் வாழ்வதற்கும் உதவும் முறையில், போர் இடம்பெறும் இடங்கள் அனைத்திலும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுமாறு, கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி கூட்டேரஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.