பண ஆர்வம் எனும் கல்லறையா? உயிர்ப்பு எனும் வாழ்வா?

பண இலாப நோக்கத்தை மனதில் கொள்ளாமல், இந்த கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் அரசுகளும், அறிவியலாளர்களும் மக்கள் நலனை மனதில்கொண்டு தீர்வுகளைக் கொணர முயலவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த நாளான, ஏப்ரல் 13, இத்திங்களன்று காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய கால நெருக்கடிகளுக்கு அரசுத் தலைவர்களும் அறிவியலாளர்களும், தீர்வுகாண்பதற்குரிய சரியான பாதையைக் கண்டு கொள்ளாமல், பணமே பெரிதென தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால், அது, பசிச் சாவுகளுக்கும், அடிமைத்தனங்களுக்கும், போர்களுக்கும், ஆயுத தொழிற்சாலைகளுக்கும், கல்வியறிவற்ற குழந்தைகள் பெருகுவதற்குமே வழிவகுக்கும் என தன் கவலையை வெளியிட்டார்.

மக்கள் நலனை மனதில் கொண்டு தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதே தன் செபமாக உள்ளது என்றார் திருத்தந்தை.

உயிர்த்த இயேசு, பெண்களுக்குத் தோன்றியதையும், இயேசுவின் சீடர்கள் அவரின் உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் என தலைமைக் குருக்கள் காவல் காத்த வீரர்களிடம் கூறியதையும் விவரிக்கும் இந்நாளின் நற்செய்தி வாசகம் (மத்.28,8-15) குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய கொள்ளை நோய்ச் சூழலும், வாழ்வுக்கும், பணத்தைக் கடவுளாக வணங்கும் நிலைக்கும் இடையே  ஒரு போட்டி உருவாவதைக் காட்டி நிற்கின்றது என்றார்.

இத்தகைய ஒரு நெருக்கடி காலத்தில் பணத்தின் மீதான ஆர்வத்தைக் கைவிட்டு, மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.