நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 15)

பாஸ்கா காலம் முதல்வாரம்
புதன்கிழமை
லூக்கா 24: 13-35
“நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?”
நிகழ்வு
அதிகாலை நேரம் அது. மூன்று நான்கு முறை அலாம் (Alarm) அடித்தும், அதை அணைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து, சமயலறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அவனுடைய அம்மா அவனிடம் வேகமாக வந்து, “தம்பி! மூன்று நான்குமுறை அலாம் அடித்தும், அதை அணைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பது நன்றாகவா இருக்கின்றது?” என்று சற்றுக் கோபத்தோடு கேட்டார்.
“படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது… மேலும் நான் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லுங்கள்” என்று அலுப்போடு சொன்னான் மகன்.
அதற்கு அவனுடைய தாய் அவனிடம், “ஒரு காரணம் என்ன… மூன்று காரணங்களைச் சொல்கின்றேன், முதலில், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை; ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்குச் செல்லவேண்டும். இரண்டாவதாக, உனக்கு நாற்பது வயது ஆகின்றது. நாற்பது வயது ஆனபின்பும், இவ்வளவு நேரமாகியும் இப்படித் தூங்கிக்கொண்டிருப்பது அவ்வளவு நல்லது அல்ல. மூன்றாவது, நீ ஒரு சபையின் போதகர். நீ கோயிலுக்குப் போனால்தான் வழிபாடே தொடங்கும்” என்றார்.
தாய் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அதுவரைக்கும் அலுப்போடு படுக்கையில் கிடந்த மகன், அதாவது சபைப் போதகர், படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், தாயின் வார்த்தைகள் சோம்பலாய், சோர்வுற்றுக் கிடந்த மகனுக்கு உற்சாகமூட்டி, அவன் தன்னுடைய பணியைச் செய்ய வலுவூட்டின. நற்செய்தியில், யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றபிறகு, எல்லாமே முடிந்துபோய்விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசுவின் காட்சியும் அவருடைய வார்த்தைகளுக்கும் புதுத் தெம்பூட்டின. அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாத இரண்டு சீடர்கள்
நற்செய்தியில், எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் இயேசு தோன்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். எருசலேமிலிருந்து பதினொரு கிலோமீட்டர்த் தொலைவிலிருந்த எம்மாவு நோக்கி, இரண்டு சீடர்களும் ஏன் செல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை, ‘ஏமாற்றம்’ அல்லது ‘நம்பிக்கையின்மை’ என்று சொல்லிவிடலாம். இப்படி ஏமாற்றத்தோடும் நம்பிக்கையின்மையோடும் சென்ற இரண்டு சீடர்களுக்குத்தான் உயிர்த்த இயேசு தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையையும் புதுத் தெம்பையும் ஊட்டுகின்றார்.
எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுடைய பேச்சும், இஸ்ரயேலுக்கு மீட்பினைத் தர வந்த இயேசுவைத் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் கொன்றுபோட்டதை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு வழிப்போக்கரைப் போன்று வரும் இயேசு, மெசியா தரவந்த மீட்பு என்பது அரசியல் மீட்பு அல்ல; மாறாக, பாவத்திலிருந்து மீட்பு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். மேலும் இந்த இரண்டு சீடர்களும், இயேசு உயிர்த்துவிட்டார் என்று பெண்களும் பேதுருவும் சொல்லக் கேட்டபொழுதும்கூட, அதில் நம்பிக்கை கொள்ளாமல், எம்மாவு நோக்கி வருகின்றார்கள். இதனால்தான் இயேசு அவர்களை “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!” என்று கடிந்துகொள்கின்றார்.
இப்படி இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமலும் எல்லாமே முடிந்துவிட்டது என்று ஏமாற்றத்தோடும் இருந்த அந்த இரண்டு சீடர்களுக்கு இயேசு எப்படி நம்பிக்கையூட்டினார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்களுக்கு நம்பிக்கையூட்டிய உயிர்த்த ஆண்டவர் இயேசு
இரண்டு சீடர்களோடும் பேசிக்கொண்டே செல்லும் இயேசு, மாலைவேளையானதும், அவர்களுடைய அழைப்பின் பெயரில், அவர்களோடு தங்குகின்றார். அங்கு இயேசு அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கையில், அவர்களுடைய கண்கள் திறக்கின்றன. ஆம், அதுவரைக்கும் இயேசுவை யாரோ ஒரு வழிபோக்கர் என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சீடர்களும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்ததும், அவர் இயேசுதான், அதுவும் உயிர்த்தெழுந்த இயேசுதான் என்று நம்பி, அவரைப் பற்றி, எருசலேமில் இருந்த சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார்கள்.
இயேசு எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுக்குத் தோன்றியது, நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, இயேசு நம்பிக்கை இழந்து, சோர்வுற்று இருக்கின்ற ஒவ்வொருவரையும் தேற்றுகின்றார் என்பதாகும். இரண்டு, இயேசுவின் ஆறுதலையும் அவருடைய நம்பிக்கையூட்டும் செய்தியையும் பெற்றுக்கொண்டவர்கள், அதைத் தங்களோடு வைத்துக்கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பகிரவேண்டும். நாம் இயேசுவிடமிருந்து ஆறுதலளிக்கும் செய்தியை ஒவ்வொருநாளும் இறைவார்த்தை வழியாகக் கேட்கின்றோம். அதை மற்றவரோடு பகிர்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்’ (மத் 10: 8) என்பார் இயேசு. ஆகையால், இயேசு அளிக்கும் நம்பிக்கையூட்டும் செய்தியைப் பெற்ற நாம், அதை மற்றவர்களுக்கும் வழங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.