நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 14)

பாஸ்கா காலம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 20: 11-18
“அம்மா, ஏன் அழுகிறீர்?”
நிகழ்வு
அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பக்தியுள்ள பெண்மணி ஒருவர் இருந்தார். இவருடைய கனவு, இலட்சியம் எல்லாம் ஆன்மாக்களை மீட்டெடுப்பதுதான். அதற்காக இவர் எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தார். குறிப்பாக இவர் திருவிவிலியத்தை வாசித்துத் தியானித்தார்; திருவிவிலிய வகுப்புகள் எங்கெல்லாம் நடைபெற்றனவோ அங்கெல்லாம் சென்று, வகுப்புகளில் கலந்துகொண்டார்; இறைவனிடம் நீண்டநேரம் வேண்டினார். அப்படியிருந்தும் ஓர் ஆன்மாவைக்கூட இவரால் மீட்க முடியவில்லை.
இதனால் பொறுமையிழந்த இவர், பங்குத்தந்தையிடம் சென்று, ஆன்மாக்களை மீட்பதற்காகத் தான் எடுக்கும் முயற்சிகளையும் அதில் தான் சந்தித்து வரும் தோல்விகளையும் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கொண்டிருந்த பங்குதந்தை இவரிடம், “உங்களுடைய கண்களில் ஈரமில்லை; அதனால்தான் உங்களால் ஆன்மாக்களை மீட்க முடியவில்லை” என்றார் அதற்கு இவர், “சுவாமி! நீங்கள் சொன்னது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்” என்று சொன்னதும், பங்குத்தந்தை அந்தப் பெண்மணிடம் விளக்கத் தொடங்கினார்:
“உங்கள் கண்களின் ஈரமில்லை என்று நான் சொன்னதற்குக் காரணம், நீங்கள் ஆன்மாக்களை மீட்பதற்காகக் கண்ணீர் சிந்தி, மன்றாடியிருக்கமாட்டீர்கள். அதனால்தான் உங்களால் ஆன்மாக்களை மீட்க முடியவில்லை. திருப்பாடல் 126: 5 ஐ நீங்கள் வாசித்தது இல்லையா…? அங்கு என்ன சொல்லப்பட்டிருக்கின்றது…? கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்” என்றல்லவா சொல்லப்பட்டிருக்கின்றது. நீங்கள் ஆன்மாக்களை மீட்பதற்காகக் கண்ணீரோடு மன்றாடுங்கள். உங்களால் பல நூறு ஆன்மாக்களை மீட்க முடியும்.”
பங்குத்தந்தையிடமிருந்து இப்படியொரு விளக்கத்தைப் பெற்றுக்கொண்டதில், மிக்க மகிழ்ச்சியடைந்த இவர், அவருக்கு நன்றிசொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து, முழந்தாள் படியிட்டு, கண்ணீர் சிந்தி மன்றாடினார். இவர் இறைவனிடம் கண்ணீர் சிந்தி, மன்றாடத் தொடங்கிய சிறிதுநேரத்திற்குள் இவருடைய சகோதரி, இவரிடம் வேகமாக ஓடிவந்தார். அவரோ இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவர். அவர் இவரிடம், “அக்கா! இத்தனை நாள்களும் நான் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்ததை நினைத்து மிகவும் வருந்துகின்றேன். இன்றைக்கு ஏதோவோர் உந்துதல், என்னைக் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்று தூண்டியது. அதனால்தான் உன்னிடத்தில் வந்தேன்” என்றார்.
இதைக் கண்டு மிகவும் மகிழ்ந்த இவர், தனக்கு வழிகாட்டிய பங்குத்தந்தைக்கும் தன்னுடைய உழைப்பிற்குப் பலன் கொடுத்த இறைவனுக்கும் நன்றிசொல்லிவிட்டு, இன்னும் பல ஆன்மாக்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்.
ஆம், கண்ணீரோடு மன்றாடுவோருக்கு இறைவன் நிச்சயம் பலன் தருவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் கண்ணீரோடு இயேசுவைத் தேடிய மகதலா மரியா, இறுதியில் கண்டுகொள்கின்றார். மகதலா மரியாவின் தேடுதல் எப்படி இருந்தது, அதற்காக இயேசு அவருக்கு எத்தகைய கைம்மாறு அளித்தார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கண்ணீரோடு தேடி, இயேசுவைக் கண்டுகொண்ட மகதலா மரியா
வாரத்தின் முதல் நாளில் இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறைக்கு வருகின்ற மகதலா மரியா, அங்கு இயேசுவின் உடலைக் காணாத செய்தியை திருத்தூதர்களிடம் சொல்ல, பேதுருவும் யோவானும் அங்கு ஓடிவருகின்றார்கள். அவர்கள் இயேசுவின் உடல் கல்லறையில் இல்லாதைக் கண்டு, அவர் உயிர்த்துவிட்டார் என்று நம்பி அங்கிருந்து சென்றுவிடுகின்றார்கள். மகதலா மரியா மட்டும் அங்கிருந்து செல்லாமல், கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருக்கின்றார். அப்பொழுதுதான் அவர் முதலில் இரு வானதூதர்களையும், பின்னர் உயிர்த்த ஆண்டவர் இயேசுவையும் கண்டுகொள்கின்றார்.
மகதலா மரியாவுக்கு இயேசுவிடம் மிகுந்த அன்பு இருந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு இவரிடமிருந்து தீய ஆவிகளை விரட்டிப் புதுவாழ்வு தந்திருந்தார் (லூக் 8:2). இதனாலேயே இவர் இயேசுவை இறுதிவரைக்கும் பின்தொடர்ந்தார்; இயேசு அடக்கம் செய்து வைக்கப்பட்ட பிறகு, அவருடைய உடலுக்கு நறுமணத் தைலம் பூச வந்தார் (மாற் 16:1). இப்படிப்பட்ட நிலையில் கல்லறையில் இயேசுவின் உடலைக் காணாது கண்ணீர் விட்டு அழுகின்றார். ஒருவர்மீது ஒருவருக்கு மிகுத்த அன்பு இருந்தால் மட்டுமே அழுகை வரும். மகதலா மரியாவுக்கு இயேசுவின் மீது மிகுந்த அன்பு இருந்தது. அதனாலேயே இவர் அழுதுகொண்டே தேடினார்; முடிவில் இயேசுவைக் கண்டுகொள்ளவும் செய்தார்.
மகதலா மரியா இயேசுவை மிகுந்த அன்போடு தேடினார், கண்டுகொண்டார்; நாமும் அவரை மிகுந்த அன்போடு தேடிக் கண்டுகொள்வோம்.
சிந்தனை
‘தேடுங்கள்; நீங்கள் கண்டடைவீர்கள்’ (மத் 7:7) என்பார் இயேசு. ஆகையால், நாம் மகதலா மரியாவைப் போன்று இயேசுவை மிகுந்த அன்போடு தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.