கோவிட் 19 தனிமை அதிக உயிர்களைப் பலிவாங்குகிறது

கொரோனா தொற்றுக் கிருமி பரவல், உலகை அச்சுறுத்தி வருகின்ற இந்நாள்களில், வீடுகளில் தனிமையில் வாழ்கின்ற மக்கள் மீது, குறிப்பாக, வயது முதிர்ந்தோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று, திருப்பீட அவை ஒன்று வலியுறுத்தியுள்ளது.

“வயது முதிர்ந்தோர்: தனிமை அதிக உயிர்களைக் காவுகொள்கிறது” என்ற தலைப்பில், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, ஏப்ரல் 07 இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாம் வாழ்கின்ற இந்த குழப்பமான சூழலில், மற்ற மக்களைப் பாதுகாப்பது போன்று, வீடுகளில் அல்லது தனிமையில் வாழ்கின்ற மற்றும், நோயாய் இருக்கும் முதியோரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கும் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இந்த தொற்றுக் கிருமி அதிகமாகப் பரவாத நாடுகளிலும், அக்கிருமியிலிருந்து வயதானவர்களை பாதுகாப்பதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று கூறியுள்ள அத்திருப்பீட அவை, இக்கிருமியின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளிலும், இம்மக்களைப் பாதுகாப்பதற்கு உடனடி முயற்சிகள் அவசியம் என்றும் கூறியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் கூறியுள்ளது போன்று, வயது முதிர்ந்தோரே, இக்கால மற்றும், வருங்காலத் திருஅவை என்றும் கூறியுள்ள அத்திருப்பீட அவை, இத்தாலியில், கோவிட்-19 தொற்றுக் கிருமிக்குப் பலியாகி இருப்போரில் எண்பது விழுக்காட்டுக்கு அதிகமானோர், எழுபது வயதுக்கு மேலானவர்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

தனிமை ஒரு நோய்

தனிமையும் ஒரு நோயாக இருக்கக்கூடும், ஆயினும், பிறரன்பு, நெருக்கம், மற்றும், ஆன்மீக முறையில் ஆறுதல் அளிப்பதன் வழியாக, தனிமை என்ற நோயை நம்மால் குணப்படுத்த முடியும் என்று, சில வாரங்களுக்குமுன் திருத்தந்தை கூறியதையும் மேற்கோள் காட்டியுள்ளது,  பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை.

கொரோனா தொற்றுக் கிருமி, தனிமை உணர்வில், அதிக மக்களைக் கொலை செய்வதால், வயதானவர்களை நாம் தனிமையில் விட்டுவிட இயலாது என்றும், இந்த நெருக்கடியான நேரத்தில், இம்மக்களுக்காக, நாம் தனியாள்களாகவும், திருஅவையாகவும் செபிக்க முடியும் மற்றும், தனிமை என்ற நோயைக் குணப்படுத்த முடியும் என்றும் அச்செய்தி கூறியுள்ளது.

இந்நாள்களில் நாம் எல்லாரும் அனுபவிக்கும் துன்பங்களில் வருங்காலத்தையும் நோக்குவதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும், பல பிள்ளகைள், வயதானவர்கள், நோயாளிகளைப் பராமரிப்பவர்கள், தன்னார்வலர்கள் ஆகிய அனைவரின் அன்பில், அம்மக்களில், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் உடலைக் கல்லறைக்குக் காணச் சென்ற பெண்களின் கருணையில் அவர்களை நோக்குவோம் என்று தன் செய்தியில் கூறியுள்ள அத்திருப்பீட அவை, ஆபத்தான அல்லது, பயனற்றதாக உணரும் சூழலில், அஞ்சாதீர்கள் என்று, அப்பெண்களிடம் வானதூதர் கூறியதை நினைவுகூர்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.