திருத்தந்தை: சோதனைக்கு எதிராய்ப் போராடுவோம்

தற்போதைய குழப்பமான, இக்கட்டான மற்றும், வேதனை நிறைந்த காலத்தில், ஏதாவது செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்புகள் உள்ளன, பலர் நல்ல காரியங்களை ஆற்றுகின்றனர், என்று, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியைத் துவக்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சூழலைப் பயன்படுத்தி, சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடும் எண்ணமும் எழுகின்றது என்று கூறினார்.

நெருக்கடியான இக்காலக்கட்டத்தில், நன்மை பயக்காத சிலவற்றைச் செய்வதற்கும் சிலருக்கு வாய்ப்பு உள்ளது, எனவே, கடவுள் அனைவருக்கும் ஒளிவுமறைவற்ற நல்ல மனசாட்சியை வழங்குமாறும், அதன் வழியாக, அவர்கள், வெட்கத்திற்கு இடமளிக்காமல், தங்களைக் கடவுள் பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள் என்றும், திருப்பலியின் ஆரம்பத்தில் கூறினார், திருத்தந்தை.

ஏப்ரல் 04, இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நம்மிலும் சோதனை எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை, இன்றைய நற்செய்தியில் (யோவா.11:45-58) குறிப்பிடப்பட்டுள்ள திருச்சட்ட அறிஞர்கள் மற்றும், தலைமைக் குருக்களை எடுத்துக்காட்டுகளாக மறையுரையில் குறிப்பிட்டார்.

சோதனை, பதட்டமான சூழலை உருவாக்குகிறது

சோதனை, சிறிய சிறிய பதட்டமான உணர்வுகளிலிருந்து துவங்குகிறது என்று மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைக் குருக்களுக்கு, திருமுழுக்கு யோவானிலிருந்து இந்தப் பதட்டம் ஆரம்பித்தது, ஆயினும் அவரால் அவர்களுக்கு எந்த எதிர்விளைவுகளும் ஏற்படாததால் அவரை விட்டுவிட்டனர் என்று கூறினார்.

இருந்தபோதிலும், திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டிய இயேசு, அரும் அடையாளங்களையும், அற்புதங்களையும் ஆற்றியதாலும், அனைத்திற்கும் மேலாக, அவர் மக்களிடம் பேசியதை அவர்கள் புரிந்துகொண்டு, அவரைப் பின்தொடர்ந்ததாலும், இயேசு எப்போதும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காததாலும், தலைமைக் குருக்களுக்கு பதட்டம் அதிகரித்தது என்று திருத்தந்தை கூறினார்.

சோதனை வலுவடைந்தது

தலைமைக் குருக்களும் பரிசேயரும், இயேசுவிடம் கேள்வி எழுப்பியபோது அவரது ஞானத்தைக் கண்ட அவர்கள் வியந்தனர், விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்தபோது (cf.யோவா.8:1-11). அவர்கள் கீழ்மைப்படுத்தப்பட்டனர், எதுவும் நடக்காதபோது, அவரைக் கைது செய்ய படைவீரர்களை அவரிடம் அனுப்பினர், அப்படைவீரர்களும் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்டனர், அவர்களில் சிலர் விசுவாசம் கொண்டனர், சிலர் அதிகாரிகளிடம் அவரைப் பற்றி அறிவித்தனர், எனவே இவை போன்ற கட்டங்களில், தலைமைக் குருக்களின் சோதனை வலுவடைந்தது என்று திருத்தந்தை கூறினார்.

திருத்தந்தையின் செபம்

இயேசுவுக்கு நிகழ்ந்தது, நமக்கும் நிகழும் என்பதற்கு அவரது வாழ்வு எப்போதும் எடுத்துக்காட்டாக உள்ளது என்று மறையுரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அக வாழ்வில் இந்த விழிப்புணர்வைத் தருமாறு தூய ஆவியாரிடம் மன்றாடுவோம் என்று கூறினார்.

வழக்கம்போல், இன்றும், திருப்பலியை நிறைவு செய்வதற்குமுன் திருநற்கருணை ஆராதனை நடைபெற்றது. அதன்பின் திருத்தந்தை திருநற்கருணை ஆசீர் வழங்கினார்.

Comments are closed.