பொருளாதாரத்தைவிட மக்களுக்கே முதலிடம்

இன்றைய கொள்ளை நோயின்போது, மக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்பது, பொருளாதார இழப்புகளைக் கொணர்ந்தாலும், மக்களே முதன்மை இடம் பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் நீதிபதிகள் அவையின் தலைவர் Roberto Andrés Gallardo அவர்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலுக்கு பதில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நிலையில் தியாக உணர்வுடன் தொற்று நோய் பரவலைத் தடுக்க உழைத்துவரும் மருத்துவர்கள், செவிலியர், தன்னார்வத் தொண்டர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும் பாராட்டுவதாக முதலில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு பணிபுரியும் இவர்களைப்போல், சில அரசுகளும் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களைத் தீட்டி செயல்படுவது குறித்து பாராட்டுக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை, பொருளாதார இழப்பை மனதில் கொண்டு, மக்களை அரசு கைவிட்டால், பெருமளவில் மக்கள் உயிரிழப்பதற்கே வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற  திருப்பீட அவையுடன் நடத்திய கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டவைகள் குறித்தும் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த தொற்று நோயால் எழுந்துள்ள பசி பிரச்சனை, குறிப்பாக, நிரந்தர வேலைவாய்ப்பின்றி வாடுவோரின் நிலை, வன்முறைகள், வருங்கால பொருளாதார நிலைகள் போன்றவை குறித்து விவாதங்கள் எழுந்ததாக குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனக்காக செபிக்கும்படியும், அமெரிக்க கண்ட நாடுகளின் நீதிபதிகள் அமைப்பின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.