அச்சங்களை நீக்க ஆண்டவரிடம் இணைந்து செபிப்போம்
உலகெங்கும் அச்சத்துடன் வாழ்வோரை நினைத்து, இவ்வியாழன் காலை திருப்பலியின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறிய சொற்களை, இவ்வியாழனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.
“அச்சமும், துன்பமும் அதிகரித்துள்ள இந்நாள்களில், மருத்துவமனைகளிலும், இல்லங்களிலும், வாழும் முதியோர் கொள்ளும் அச்சம், நிரந்தரமான வேலையில்லாததால், தங்கள் குடும்பங்களை காப்பாற்றுவது எப்படி என்று தெரியாமல் இருப்போரின் அச்சம், ஒருவர் ஒருவர் மீது நாம் கொள்ளும் அச்சம் ஆகிய அனைத்தையும் நீக்க ஆண்டவரிடம் இணைந்து செபிப்போம்” என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
தன் மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நம் அனைவரிடமும் நான் கேட்கும் கேள்வி இவையே: என் உள்ளத்தில் இருக்கும் பொய் தெய்வங்கள் எவை? அவற்றை எங்கே நான் மறைத்து வைத்துள்ளேன்? நம் உள்ளத்தில் உள்ள பொய் தெய்வங்களை விரட்டியடிக்க நாம் இறைவனின் அருளை இறைஞ்சுவோம்” என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.
மேலும், இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, இரு டுவிட்டர் செய்திகளை, #GeneralAudience என்ற ‘ஹாஷ்டாக்’குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் பிற்பகலில் வெளியிட்டார்.
“வானதூதரிடம் ‘ஆம்’ என்ற ஒப்புதலைக் கூறியதால், மனுவுருவான வார்த்தையை கன்னி மரியா வரவேற்று, இறைமகனின் தாயாக சம்மதித்தார். எனவே, மரியாவில், கடவுளும், மனிதரும் சந்திப்பது, உண்மை நிகழ்வானது” என்ற சொற்களை, திருத்தந்தை பதிவு செய்திருந்தார்.
“மனித உயிரையும், உலகப் பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் தொற்றுக்கிருமியின் பரவல் என்ற சூழலில், வாழ்வு என்ற கலாச்சாரத்தை வலியுறுத்தி, ‘எவாஞ்ஜேலியும் வீத்தே’ (Evangelium vitae) என்ற எட்டில் கூறப்பட்டுள்ளவற்றை மீண்டும் இன்று நினைவுறுத்துகிறோம்” என்ற கருத்தை, இப்புதனன்று வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்திருந்தார்.
Comments are closed.